தேடுதல்

Vatican News
அன்பு, தோள் தந்து ஆதரவளிக்கும் அன்பு, தோள் தந்து ஆதரவளிக்கும்  (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம் : ‘அன்பு தீங்கு நினையாது’

திருத்தந்தை : நான் வழங்கும் அறிவுரை என்னவென்றால், குடும்பத்திற்குள் அமைதியை உருவாக்காமல், எந்த நாளும் நிறைவடைய வேண்டாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பைப்பற்றி, திருத்தூதர் பவுல் கூறியுள்ள எண்ணங்களை (1 கொரி. 13:1-13), 13 பண்புகளாகப் பிரித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில் எழுதியுள்ளதை, கடந்த சில வாரங்களாக நாம் நம், மகிழ்வின் மந்திரம் நிகழ்ச்சியில் நோக்கி வருகிறோம்.  அதில், அன்பு தீங்கு நினையாது, என்ற பதத்திற்கு திருத்தந்தை வழங்கியுள்ள சிறு விளக்கம் இதோ:

முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள் (மத். 7:5) என நமக்கு அழைப்புவிடுக்கிறது நற்செய்தி. சினத்திற்கு இடம்கொடாமல் இருக்குமாறு இறைவன் மீண்டும் மீண்டும் விடுத்துள்ள அழைப்பை நாம் புறந்தள்ள முடியாது. தீமை உங்களை வெல்லவிடாதீர்கள் (உரோ. 12:21), நன்மைசெய்வதில் மனம்தளாரது இருப்போமாக (கலா. 6:9). விரோத எண்ணத்தை நாம் நமக்குள் உணர்வது ஒன்று, அதற்கு நம்மை கையளித்து, அதாவது, அவ்வுணர்வு நம் இதயத்தில் வேர்விட்டு வளர அனுமதிப்பது மற்றொன்று. சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும் (எபே. 4:26).

நான் வழங்கும் அறிவுரை என்னவென்றால், குடும்பத்திற்குள் அமைதியை உருவாக்காமல், எந்த நாளும் நிறைவடைய வேண்டாம். நான் எவ்வாறு அமைதியை உருவாக்கப் போகின்றேன்? முழந்தாள்படியிட்டா?. தேவையில்லை. ஒரு சிறு செய்கையின் வழியாக குடும்பத்திற்குள் அமைதியை கொணரமுடியும். ஒரு சின்ன தழுவுதல், வருடுதல் போதும், அங்கு வார்த்தைகளேத் தேவையில்லை. என்ன நடந்தாலும், அமைதியைக் கொணராமல், அந்த நாளை முடிவுக்கு வர அனுமதியாதீர்கள். நமக்கு எரிச்சலை ஏற்படுத்துவோருக்கு, நமது முதல் பதிலிறுப்பு, இதயம் நிறைந்த ஆசீராக இருக்கட்டும். ஆம், அவர்கள் அந்த உணர்விலிருந்து விடுபடவும், குணம்பெறவும் இறையாசீரை வேண்டுவோம். 'ஆசி கூறுங்கள். ஏனென்றால், கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்' (1 பேதுரு 3:9). தீமையை எதிர்த்துப் போரிடுவது, ஏற்புடையதே, ஆனால், குடும்பங்களில் எப்போதும், வன்முறைக்கு மறுப்புச் சொல்வோம். (அன்பின் மகிழ்வு 104)

05 May 2021, 16:42