ஒருவருக்கொருவர் உதவுவதே அன்பு ஒருவருக்கொருவர் உதவுவதே அன்பு  

மகிழ்வின் மந்திரம் : குறை கூறுவதைவிட மௌனம் காப்பது

அன்பு குறையுடையதாக இருப்பது என்பது, அன்பு உண்மையற்றது, போலியானது என்று அர்த்தமல்ல. இது உண்மையானது, என்றாலும் குறைபாடுடையது, மற்றும் உலகு சார்ந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரைமடலின் நான்காம் பிரிவில், அன்பின் பண்புகள் குறித்து கூறியுள்ளவைகளை அண்மை நாட்களில் பார்த்துவருகிறோம். திருத்தந்தை, விவாதத்திற்கு என எடுத்துள்ள, திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 13ம் பிரிவில் (கொரி 13.1-13) காணப்படும் 'அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்' என்ற பண்புக் குறித்து விவரிப்பதன் தொடர்ச்சி இதோ:

அன்பால் இணைந்துள்ள, திருமணமான தம்பதியர், ஒருவரைப்பற்றி மற்றவர் நல்லவைகளையே உரைக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணை குறித்து நல்ல பக்கத்தையே காண்பிக்க விரும்புகின்றனர், அவர்களின் பலவீனங்களையோ, குறைகளையோ அல்ல. எந்த வேளையிலும், தன் வாழ்க்கைத் துணை குறித்து குறை கூறுவதைவிட மௌனம் காப்பதையே அவர்கள் தேர்வுச் செய்கின்றனர். இது, அவர்கள், மற்றவர்கள் முன்னால் காட்டும் நடிப்பு அல்ல, மாறாக, உள்மனதிலிருந்து எழும் ஒரு செயல். மற்றவரின் பலவீனங்களையும் பிரச்சனைகளையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடும் ஒரு வெகுளித்தனம் அல்ல இது, மாறாக, அவைகளை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் நோக்குவதாகும். தவறுகளும் குறைபாடுகளும், ஒரு விரிவான பின்னணியில் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை இது ஏற்றுக்கொள்கிறது. நாமனைவரும் வெளிச்சமும் இருளும் கலந்த ஒருவித சிக்கலான கலவை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு எரிச்சலாக இருக்கும் சின்ன விடயங்களின் மொத்தத்தைவிட, அந்த  வாழ்க்கைத்துணை உயர்ந்தவர். அன்பை நாம் மதிப்பிடுவதற்கு, அது முழு நிறைவுடையதாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதில் குறைபாடுகள் இருப்பினும், தன்னால் எவ்வளவு அதிகம் முடியுமோ அந்த அளவு நம்மை அன்புகூர்கிறார், நம் வாழ்க்கைத்துணை. ஆனால், அந்த அன்பு குறையுடையதாக இருப்பது என்பது, அன்பு  உண்மையற்றது, போலியானது என்று அர்த்தமல்ல. அதே வேளை, இது உண்மையானது, என்றாலும் குறைபாடுடையது, மற்றும் உலகு சார்ந்தது. நாம் பிறரைக் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் செயல்படும்போது, நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் நிலையில் அவர் இல்லை என்பதையோ, அவர் கடவுள் இல்லை என்பதையோ நமக்கு புரிய வைக்கிறார் நம் வாழ்க்கைத்துணை. அன்பு என்பது குறைபாடுடைய நிலையோடு இணைந்துள்ளது. இது அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, தான் அன்புகூர்பவரின் குறைபாடுகளின் முன்னால் அமைதி காக்கும், அமைதியைக் கொணரும். (அன்பின் மகிழ்வு 113)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2021, 16:44