தேடுதல்

அன்பு அனைத்தையும் நம்பும் (1கொரி.13:7) அன்பு அனைத்தையும் நம்பும் (1கொரி.13:7)  

மகிழ்வின் மந்திரம்: அன்பு அனைத்தையும் நம்பும்

அன்புடன்கூடிய நம்பிக்கையால் அமைந்திருக்கும் ஒரு குடும்பம், எது நேரிடினும், தன் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் இருப்பதுபோலவே இருக்க உதவும் (அன்பின் மகிழ்வு 115)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தூதர் பவுல், அன்பின் 13 பரிமாணங்கள் குறித்து, கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் 13ம் பிரிவில் (1கொரி.13:1-13) கூறியிருப்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரைமடலின் நான்காம் பிரிவில் ஒவ்வொன்றாக விளக்கியுள்ளார். அவற்றில், அன்பு அனைத்தையும் நம்பும் (1கொரி.13:7) என்பது பற்றி, 114,115ம் பத்திகளில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள்...

Panta pisteúei. அன்பு அனைத்தையும் நம்பும். இங்கு ”நம்பிக்கை” என்பது பற்றி, அதன் இறையியல் அர்த்தத்தை மட்டுமல்ல, அதைவிட மேலாக, “நம்பிக்கை” பற்றி நாம் புரிந்துகொள்வது என்ன என்ற கோணத்தில் சிந்திக்கவேண்டும். இது, மற்றவர் பொய்சொல்லவில்லை, அல்லது, ஏமாற்றவில்லை என்று வெறுமனே ஊகிப்பதையும் கடந்து செல்கிறது. இத்தகைய அடிப்படை நம்பிக்கை, சாம்பலுக்கு அடியில் வெந்தணல் மின்னுவதுபோன்று, இருளுக்கு அப்பால் கடவுளின் ஒளி சுடர்விடுகின்றது என்பதை ஏற்பதாகும் (அன்பின் மகிழ்வு 114)

இத்தகைய நம்பிக்கை, ஓர் உறவு, சுதந்திரமாக இருப்பதை இயலக்கூடியதாக்குகிறது.   அதாவது, மற்றவரை நம் கட்டுக்குள் வைக்கவும், அவர்கள் நம் பிடியினின்று தப்பிவிடாதபடிக்கு, அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் பின்தொடரவும் தேவையில்லை என்ற அர்த்தமாகும். அன்பு நம்புகிறது, அது சுதந்திரமாகச் செயல்படவைக்கிறது, அது அனைத்தையும் கட்டுப்படுத்த, உடைமையாக்கிக்கொள்ள, மற்றும், ஆதிக்கம் செலுத்த முயற்சிக்காது. இந்த சுதந்திரம், தற்சார்பை பேணி வளர்க்கிறது. இது, நம்மைச் சுற்றியுள்ள உலகுக்கு, ஒரு திறந்தமனத்தை, மற்றும், புதிய அனுபவங்களுக்குப் பாதை அமைக்கிறது. இத்தகைய சுதந்திரம், உறவுகளை வளப்படுத்தும், மற்றும், அவற்றை விரிவடையச் செய்யும். அப்பொழுது, தம்பதியர், குடும்ப வட்டத்திற்குவெளியே பெறுகின்ற மற்றும், கற்றுக்கொள்கின்ற அனைத்து மகிழ்வையும், ஒருவர் ஒருவரோடு பகிர்ந்துகொள்கின்றனர். அதேநேரம், இந்த சுதந்திரம், நேர்மை, மற்றும், வெளிப்படைதன்மை உள்ளதாக, தாங்கள் நம்பப்படுவதையும், பாராட்டப்படுவதையும் அறிந்திருப்பவர்கள், திறந்தமனதாகவும், எதையும் மறைக்காமலும் இருக்கச் செய்கிறது. தம்பதியரில் ஒருவர், எப்போதும் சந்தேகப்படுகிறவராக, தீர்ப்பிடுகிறவராக, நிபந்தனையற்ற அன்பு இல்லாதவராக இருப்பதை அறிந்திருப்பவர், இரகசியங்களை தனக்குள்ளே வைத்திருக்கவும், தங்களின் தவறுகள், மற்றும், பலவீனங்களை மூடிமறைக்கவும், உண்மையிலே தான் யார் என்பதை மறைத்து, யாரோ ஒருவர் போன்று பாசாங்குசெய்யவும் தூண்டப்படுவார். ஆனால், அன்புடன்கூடிய நம்பிக்கையால் அமைந்திருக்கும் ஒரு குடும்பம், எது நேரிடினும், தன் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் இருப்பதுபோலவே இருக்க உதவும். ஏமாற்று, போலித்தனம், பொய்கள் ஆகியவற்றை தானாகவே புறக்கணிக்கும் (அன்பின் மகிழ்வு 115)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2021, 13:40