குழந்தைகளுடன் குடும்பம் குழந்தைகளுடன் குடும்பம் 

மகிழ்வின் மந்திரம் : நாம் எதிர்பார்ப்பது, வேற்றுமையில் ஒற்றுமை

பொதுநலனை மனதில்கொண்டு, வித்தியாசமாக இருப்பவைகளை மதித்து பாராட்டுவது, உடன்பிறந்த உணர்வுடன்கூடிய ஒன்றிப்புக்கு பலனளிக்கும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் நான்காம் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தம்பதியரிடையே, மற்றும், குடும்ப வாழ்வில், உரையாடலின்  முக்கியத்துவத்தை, 6 பத்திகளில் விளக்கியுள்ளதில், இறுதி மூன்று பத்திகளில் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ :

நம்முடைய குறுகிய எண்ணங்களிலும் கருத்துக்களிலும் முடங்கிவிடாமல், திறந்த மனதுடன் செயல்படுவோம். இருவேறு விதமான சிந்தனைகளை ஒன்றிணைப்பது, இரு பக்கமும் பலன்தருவதாக இருக்கும். நாம் எதிர்பார்க்கும் ஒன்றிப்பு என்பது, எல்லாமே ஒன்றுபோல இருக்கவேண்டுமென்பதல்ல, மாறாக, வேற்றுமையில் ஒற்றுமை என்பதாகும், அல்லது ஒப்புரவான வேற்றுமையாகும்.  பொதுநலனை மனதில்கொண்டு, வித்தியாசமாக இருப்பவைகளை மதித்து பாராட்டுவது, உடன்பிறந்த உணர்வுடன்கூடிய ஒன்றிப்புக்கு பலனளிக்கும். எல்லோரும் ஒன்றுபோலவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து நாம் விடுபடவேண்டும். கருத்துப் பரிமாற்றங்களில் ஒருவித தேங்கியநிலை ஏற்படாமலிருக்க, பன்முகத்தன்மையை விவேகமாகக் கையாளவேண்டும். மற்றவர்களைக் காயப்படுத்தாமல், நம் கருத்துக்களை வெளிப்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும். ஏனெனில், ஒரு கருத்தை வலியுறுத்தும்போது, கோபத்திற்கோ, காயப்படுத்துவதற்கோ இடமளிக்கத் தேவையில்லை. தம்பதியரிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் முக்கிய விடயங்களில் அல்லாமல், சிறிய விடயங்களில் நிலவுகின்றன. ஆனால் அவை சொல்லப்படும் விதமும், அவற்றைச் சொல்லும்போது நிலவும் மனப்பான்மையும் சூழ்நிலையை வெகுவாக மாற்றுகின்றன. (139)

அடுத்தவர் மீது, அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துங்கள். அன்பு எத்தகைய பெரிய தடைகளையும் வெற்றிகண்டுவிடும். ஒருவர் நம்மை அன்பு கூரும்போது, நம்மிடம் என்ன சொல்லவிழைகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும். அடுத்தவரை ஒரு போட்டியாக எண்ணி அஞ்சும் பலவீனத்தை நாம் வெற்றிகொள்ள வேண்டும். நம்முடைய மதிப்பீடுகளில், நம்பிக்கைகளில், சரியான தேர்வுகளில், நாம் உறுதியாக நிலைத்திருக்க வேண்டுமேயொழிய, வாக்குவாதத்தில் எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்பதிலோ, நாம்தான் சரி என நிரூபிப்பதிலோ அல்ல. (140)

பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதற்கு நம்மிடமும் ஏதாவது இருக்கவேண்டும். வாசித்தல், உள்மன தியானம், இறைவேண்டல், நம்மைச் சுற்றியிருக்கும் உலகிற்கு நம்மை திறத்தல் போன்றவைகளின் கனிகளாக இவை பிறக்க வேண்டும். இல்லையெனில், உரையாடல் என்பது முக்கியமற்றதாகவும், சலிப்பைத் தருவதாகவும் மாறிவிடும். இதனை மேம்படுத்த தம்பதியர் முயற்சி எடுக்கவில்லையெனில், குடும்ப வாழ்வு பெரிய அளவில் பாதிப்படையும். (அன்பின் மகிழ்வு 139,140,141)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2021, 15:05