மியான்மாரில் புத்தாண்டு மியான்மாரில் புத்தாண்டு 

மியான்மார் புத்தாண்டுக்குச் செபங்கள்

மியான்மாரில் ஐந்து நாள்களுக்குச் சிறப்பிக்கப்படும் புத்தாண்டு நிகழ்வுகளில், பொதுவாக வீடுகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில், ஏப்ரல் 13, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள Thingyan எனப்படும், மியான்மார் புத்தாண்டு நிகழ்வையொட்டி, அந்நாட்டின் Pathein பேராலயத்தில், கத்தோலிக்கர் சிறப்பு இறைவேண்டல்களை மேற்கொண்டனர்.

ஏப்ரல் 18, வருகிற ஞாயிறு வரை கொண்டாடப்படும் புத்தாண்டு நிகழ்வுக் காலம், மியான்மாரில் மிக முக்கிய ஆண்டு விடுமுறை நாள்களாகச் சிறப்பிக்கப்படும்வேளை,  இவ்வாண்டில், இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடும் மக்கள், தங்களின் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதேநேரம், இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியிலிருந்து அந்நாட்டில் இடம்பெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்களில், இராணுவத்தின் தாக்குதலால் உயிரிழந்த தியாகிகளின் நினைவாக, ஒருநாளை, அமைதி மற்றும், இறைவேண்டல் நாளாக கடைப்பிடிப்பதற்கு, அந்நாட்டின் சனநாயக இயக்கம் தீர்மானித்துள்ளது.

இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்ட சிறாரை, "மடிந்த விண்மீன்கள்" என்றும், மற்றவர்களை, "வீரத் தியாகிகள்" என்றும், சனநாயக இயக்கம் பெயரிட்டுள்ளது.

ஐந்து நாள்களுக்குச் சிறப்பிக்கப்படும் இப்புத்தாண்டு நிகழ்வுகளில், பொதுவாக வீடுகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஏப்ரல் 13, இச்செவ்வாயன்றும், போராட்டதாரர்கள், மலர்க்கொத்துக்களை ஏந்தி போராட்டங்களை மேற்கொண்டனர் என்று ஆசியச் செய்தி கூறுகிறது. (AsiaNews)

மியான்மாரில், புத்தாண்டு
மியான்மாரில், புத்தாண்டு

இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் நிறுவனமும், அப்பாவி குடிமக்களுக்கு எதிரான வன்முறை உடனடியாக நிறுத்தப்படுமாறு, இராணுவ அரசை கேட்டுக்கொண்டுள்ளது. மியான்மாரில் இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பலர் வெளியுலகத் தொடர்புகளின்றி அல்லது, காணாமல்போயுள்ளனர். குறைந்தது 44 சிறார் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2021, 15:10