ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளியானதும்.... ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளியானதும்.... 

இன வேறுபாட்டு காயங்கள் குணமாக ஆயர்களின் அழைப்பு

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களிடையே, அமைதி, ஒப்புரவு, மற்றும், மனித உயிர்கள் மீது கூடுதல் மதிப்பு ஆகிய பண்புகள் அதிகமாக வளரவேண்டும் - மின்னியாப்பொலிஸ் பேராயர் பெர்னார்ட் ஹெப்டா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களிடையே, அமைதி, ஒப்புரவு, மற்றும், மனித உயிர்கள் மீது கூடுதல் மதிப்பு ஆகிய பண்புகள் அதிகமாக வளரவேண்டும் என்று, மின்னியாப்பொலிஸ் பேராயர் பெர்னார்ட் ஹெப்டா (Bernard Hebda) அவர்கள் கூறியுள்ளார்.

மின்னியாப்பொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் இறந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (George Floyd) அவர்களின் மரணத்திற்கு, காவல்துறை பணியாளர் டெரிக் ஷாவன் (Derek Chauvin) அவர்களே காரணம் என்று, இந்த வழக்கில் பங்கேற்ற ஜூரி உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.

இந்த முடிவு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 20, இச்செவ்வாயன்று, செய்தியொன்றை வெளியிட்ட பேராயர் ஹெப்டா அவர்கள், கடந்த ஓராண்டளவாக ஜார்ஜ் அவர்களின் மரணம் மின்னியாபொலிஸ் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகம் எங்கும் பல அடிப்படை கேள்விகளை எழுப்பி, நம்மை ஆன்மீக ஆய்வு செய்ய அழைப்பு விடுத்து வந்தது என்று கூறினார்.

சிலுவையில் அறையுண்டு உயிர்த்தெழுந்த இயேசு, தன் மன்னிப்பு, பரிவு ஆகிய குணங்களால், காயமடைந்திருந்த சீடர்கள் நடுவே ஒப்புரவையும், அமைதியையும் கொணர்ந்ததுபோல், இந்த வழக்கின் முடிவுக்குப் பின் நம்மிடையிலும் ஒப்புரவையும், அமைதியையும் கொணரட்டும் என்று பேராயர் ஹெப்டா அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு இனத்தவரிடையே ஏற்பட்டுள்ள வேறுபாட்டு காயங்கள், இனிவரும் நாள்களில் குணமாகவேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் இனவெறியை நீக்கும் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Shelton Fabre அவர்களும், உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர், பேராயர் Paul Coakley அவர்களும், வெளியிட்ட செய்திகளில் விண்ணப்பித்துள்ளனர்.

2020ம் ஆண்டு, மே மாதம் 25ம் தேதி, 46 வயது மிக்க ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின மனிதரை கைது செய்யும் முயற்சியில், டெரிக் ஷாவன் என்ற காவல்துறை ஊழியர், ஜார்ஜ் அவர்களின் கழுத்தின் மீது ஏறத்தாழ 9 நிமிடங்கள் முழந்தாளைக் கொண்டு அழுத்தியிருந்த காட்சி, செல்லிடப்பேசியில் பதிவாகி, உலகெங்கும் வெளியிடப்பட்டு, ஆழ்ந்த வேதனையையும், கோபத்தையும் உருவாக்கியது.

இந்த நிகழ்வையடுத்து, மே மாதம் 29ம் தேதி, காவலில் வைக்கப்பட்ட டெரிக் ஷாவன் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை முடிவுற்று, ஏப்ரல் 20 இச்செவ்வாயன்று, அவர் செய்தது, கொலைக்குற்றம் என்று, ஜூரி உறுப்பினர்கள் தீர்ப்பளித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2021, 16:15