இயேசு சீடர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று அவர்களை வாழ்த்தினார். - லூக்கா 24,36 இயேசு சீடர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று அவர்களை வாழ்த்தினார். - லூக்கா 24,36 

உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

உயிர்த்தபின், இயேசு, தன் சீடர்களைச் சந்தித்த பல நிகழ்வுகளில், உணவு ஒரு முக்கிய அங்கமாகிறது. தன் உயிர்ப்பை நிரூபிக்க, சீடர்களின் நம்பிக்கையை வளர்க்க, இயேசு, உணவை, ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

2011ம் ஆண்டு, அக்டோபர் 23, ஞாயிறன்று, துருக்கி நாட்டின் Van என்ற நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் (7.2 ரிக்டர் அளவு) பல நூறு கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. அன்றைய நிலவரப்படி, 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்; 2000த்திற்கும் அதிகமானோர் காயமுற்றனர். ஒரு வாரத்தில், இறந்தோரின் எண்ணிக்கை 604 என்றும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 4,100 என்றும் கூறப்பட்டது. மரணங்களின் எண்ணிக்கை கூடிவந்ததைக் கூறிய செய்திகள் வெளிவந்த அதே நாள்களில், வாழ்வைப்பற்றிய ஒரு செய்தியும் வெளியானது. பிறந்து, 2 வாரங்களே ஆகியிருந்த, Azra Karaduman என்ற பெண் குழந்தை, நிலநடுக்கம் ஏற்பட்டு 48 மணி நேரங்கள் சென்று, இடிபாடுகளின் நடுவிலிருந்து காப்பாற்றப்பட்டாள். அதுமட்டுமல்ல, அக்குழந்தை காப்பற்றப்பட்ட அதே இடத்தில், குழந்தையின் தாயும், பாட்டியும் மீட்கப்பட்டனர்.

இக்குழந்தையை "நம்பிக்கையின் முகம்" என்று ஊடகங்கள் அழைத்தன. Azra என்ற அக்குழந்தையின் பெயருக்கு, "பாலைநிலத்து மலர்" என்பது பொருள் என்றும், 2 வாரக் குழந்தை, இரு தலைமுறைகளைக் காப்பாற்றியது என்றும், இந்நிகழ்வை, ஊடகங்கள் விவரித்தன.

அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம், (CBS) இச்செய்தியை ஒளிபரப்பியபோது, Mark Philips என்ற செய்தித் தொடர்பாளர் அழகான ஒரு கருத்தை பதிவுசெய்தார்: "பெரிய, பெரிய புள்ளிவிவரங்களைக் காட்டிலும், சின்னச் சின்ன மனிதாபிமானக் கதைகள் நம் கற்பனையைக் கவர்கின்றன" என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், துருக்கியில், ஜப்பானில் (2011), ஹெயிட்டியில் (2010), பல ஆசிய நாடுகளில் (2004), ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இறந்தோர், காயமுற்றோர் ஆகியோரின் புள்ளிவிவரங்கள் நம் மனதில் பதிந்ததைவிட, அந்த அழிவுகளின் நடுவிலிருந்து, உயிர்கள் மீட்கப்பட்ட செய்திகள், நம்மை அதிகம் கவர்ந்தன என்பதையும், அவை, நம் உள்ளங்களில், நம்பிக்கை விதைகளை நட்டுவைத்தன என்பதையும் மறுக்கமுடியாது.

கடந்த 16 மாதங்களாக, கோவிட்-19 பெருந்தொற்று, நிலநடுக்கமாக, சுனாமியாக, சூறாவளியாக, எரிமலை வெடிப்பாக, இவ்வுலகை பெருமளவு சிதைத்துவருகிறது. இப்பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோர், மற்றும், இறந்தோரின் எண்ணிக்கையை, ஊடகங்கள், ஒவ்வொரு நாளும், நம் எண்ணங்களில் வலுக்கட்டாயமாகத் திணித்து, நம் உள்ளங்களை கல்லறைகளாக மாற்றிவருகின்றன. ஊடகங்களின் கல்லறைச் செய்திகளிலிருந்து உயிர்த்தெழ, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

2010ம் ஆண்டு, சனவரி மாதம், ஹெயிட்டியில் நிலநடுக்கத்தால் எற்பட்ட இடிபாடுகளிலிருந்து, பதினாறு நாட்களுக்குப் பின், Darline Etienne என்ற இளம்பெண் உயிரோடு மீட்கப்பட்டது, ஓர் உயிர்ப்பு என்று கூறப்பட்டது. அதே 2010ம் ஆண்டு, சிலே நாட்டு சுரங்க விபத்தில் அகப்பட்ட 33 தொழிலாளிகள், 69 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டது, உயிர்ப்பெனக் கொண்டாடப்பட்டது. இத்தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டபின், சிலே நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Alejandro Karmelic அவர்கள், "சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது" என்று கூறினார்.

கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், சாத்தப்பட்ட அறையை, ஒரு கல்லறையாக மாற்றி, அதில், தங்களையே பூட்டி வைத்துக்கொண்ட சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், அச்சமின்றி, இயேசுவை உலகறியச் செய்தனர். அதேபோல், முற்றிலும் மூடப்பட்டு, இனி உயிரோடு மீளமாட்டோம் என்ற அச்சத்தில், சந்தேகத்தில் புதையுண்டிருந்த சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகள், வெளியே வந்தபின், பல நாடுகளுக்குச் சென்று இயேசுவை உலகறியச் செய்தனர். கோவிட்-19 பெருந்தொற்றைக் குறித்த செய்திகளால், இவ்வுலகின்மீது வைக்கப்பட்டுள்ள ‘நம்பிக்கையின்மை’ என்ற கல்லை அகற்றுவதிலும், மரணத்தைவிட, வாழ்வைக் குறித்து பேசுவதிலும், நம் சக்தியை பயன்படுத்த, உயிர்த்த இறைவன் நம்மை அழைக்கிறார்.

அழிவைக் கொணரும் நிலச்சரிவு, நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களிலிருந்து உயிர்கள் மீட்கப்படும் அற்புதங்கள் நிகழ்வதை, நேரிலோ, அல்லது, தொலைக்காட்சியிலோ காணும்போது, நம் கண்களில் கண்ணீர் மல்குகிறது. மகிழ்வு, துயரம் இரண்டின் உச்சநிலைகளிலும் நாம் கண்ணீர் சிந்துகிறோம். “Oh my God, I can't believe this” “என் கடவுளே, என்னால் இதை நம்பவே முடியவில்லை” என்று, மகிழ்வின் உச்சத்தில் கத்தியிருக்கிறோம். இதே சொற்களை, துயரத்தில் புதைந்தபோதும் நாம் சொல்லிக் கதறியிருக்கிறோம். மகிழ்வின் சிகரத்தில் நிறுத்தப்பட்ட இயேசுவின் சீடர்களைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சீடர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்.” (லூக்கா நற்செய்தி 24: 41) என்று, நற்செய்தியாளர் லூக்கா, இந்நிகழ்வை விவரித்துள்ளார்.

யூத குலத்தில் பிறந்த சீடர்களுக்கு, உயிர்ப்பைக் குறித்த உண்மைகளில் அதிகத் தெளிவு இருந்ததில்லை. இச்சூழலில், உயிர்ப்பைக் குறித்தத் தெளிவை சீடர்கள் மனதில் ஆழமாகப் பதிக்க, இயேசு, தன்னை, மகிமையின் மன்னராக அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கலாம். அதற்குப் பதிலாக, அந்த மாபெரும் உண்மையைப் புரிந்துகொள்ள உதவியாக, இயேசு செய்தது, மிகவும் எளிமையான, சர்வ சாதாரணமான ஒரு செயல். இது நம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தன்னைக்கண்டு வியப்பில் ஆழ்ந்திருந்த சீடர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” (லூக்கா 24: 41) என்று இயேசு கேட்கிறார்.

உயிர்த்தபின், இயேசு, தன் சீடர்களைச் சந்தித்த பல நிகழ்வுகளில், உணவு ஒரு முக்கிய அங்கமாகிறது. தன் உயிர்ப்பை நிரூபிக்க, சீடர்களின் நம்பிக்கையை வளர்க்க, இயேசு, உணவை, ஒரு கருவியாகப் பயன்படுத்தியதை, நாம் இரு கோணங்களில் சிந்திக்கலாம்.

முதல் கோணம்: பொதுவாக, எந்த ஒரு குடும்பத்திலும் நிகழ்வது... ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால், அதுவும், வாழவேண்டிய வயதில் ஒருவர் மரணம் அடைந்தால், அக்குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள், தாங்கமுடியாத துயரத்தில் மூழ்குவர். உணவும், உறக்கமும், அவர்களிடமிருந்து விடைபெறும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், அக்குடும்பத்தினர் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள், எப்பாடு பட்டாவது, அவர்களை உண்ணும்படி வற்புறுத்துவர்.

இந்தக் கோணத்தில், நாம், இயேசுவின் செயலைச் சிந்திக்கலாம். தனது மரணத்தால் மனமுடைந்து போயிருக்கும் சீடர்களும், அன்னை மரியாவும், கடந்த மூன்று நாட்களாக உண்ணாமல் இருந்ததால், அவர்களை மீண்டும் உண்ணும்படி வற்புறுத்தவே, இயேசு உணவைப் பற்றிப் பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பரிவுள்ள ஒரு தாயின் அன்பு, உயிர்த்த இயேசுவில் வெளிப்படுவதைக் காணலாம்.

இரண்டாவது கோணம்: இயேசுவும் அவரது சீடர்களும் கடந்த மூன்று ஆண்டுகள் பணிவாழ்வில் அதிகம் மூழ்கிப் போயிருந்தவர்கள். எனவே, நிம்மதியாக ஓர் இடத்தில் அமர்ந்து உணவு உண்ட நேரங்கள் மிகக்குறைவே. அப்படி அவர்கள் சேர்ந்து உணவு உண்ட அரிதான நேரங்களில், அவர்கள் மத்தியில், உணவு மட்டும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. அத்துடன் சேர்த்து, உணர்வுகளும், உண்மைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இந்த ஆழமான பரிமாற்றங்களின் உச்சக்கட்டமாக, மூன்று நாட்களுக்கு முன், அவர்கள் உண்ட அந்த இறுதி பாஸ்கா இரவுணவு அமைந்தது. அந்த இறுதி இரவுணவின் தாக்கம், இன்னும் அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. ஆழ்ந்த உறவை நிலைநாட்டிய அந்த இறுதி இரவுணவை மீண்டும் அவர்களுக்கு நினைவுறுத்த, இயேசு உயிர்த்த பின்பும், அவர்களோடு உணவருந்த வந்திருந்தார் என்றும் எண்ணிப் பார்க்கலாம்.

தன் பிரசன்னத்தை உலகில் தொடர்ந்து நிலைநாட்ட, இயேசு, இறுதி இரவுணவின்போது, உணவைப் பயன்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். உயிர்ப்புக்குப் பின்னரும், தனது பிரசன்னம், இவ்வுலகில் தொடர்கிறது என்பதை, சீடர்களுக்கு வலியுறுத்திக் கூறுவதற்காக, இயேசு மீண்டும் உணவைப் பயன்படுத்துகிறார். உயிர்ப்பு என்பது, நம்மை வியப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தும், ஒரு மந்திர, தந்திரச்செயல் அல்ல. நமது சாதாரண, அன்றாட வாழ்வில், நம்முடன் இணைந்து, மாற்றங்களை உருவாக்கும் ஓர் அற்புதமே உயிர்ப்பு, என்ற  உண்மையை, இந்த உணவுப் பகிர்தல் வழியே இயேசு சொல்லித்தந்தார். உணவின் வழியாக, உயிர்ப்பைப்பற்றியும், தொடரும் தன் உறவைப்பற்றியும், இதைவிட அழகான பாடங்களைச் சொல்லித்தர முடியுமா என்பது சந்தேகம்தான்.

உணவின் வழியாக உயிர்ப்பின் பேருண்மையைக் கூறிய இயேசு, அதற்கு முன்னதாக, காயப்பட்ட தன் கரங்களையும், கால்களையும் சீடர்களுக்குக் காட்டுகிறார். (லூக்கா 24: 40) அவை, மற்றுமோர் எளிய அடையாளம். இரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்கள் கரங்களைப் பற்றி எழுதிய சிறுகதை நினைவுக்கு வருகிறது.

அரசர் ஒருவர், தன் அவையில் பணிபுரியும் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்து, அழைப்பிதழை அனுப்பினார். விருந்துக்கு வருபவர்கள், தங்கள் அழைப்பிதழைக் கையிலேந்தி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பணியாளர்களில் ஒருவர், சிறப்பு விருந்தினராக, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

விருந்தில், அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் அழைப்பிதழைக் கரங்களில் ஏந்தி வந்திருந்தனர். விருந்து மண்டபத்தில் நுழைந்தபோது, அவர்களுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. அந்த அரங்கத்தின் நுழைவாயிலில் நின்றவர்கள், பணியாளர்கள் கொண்டு வந்திருந்த அழைப்பிதழைப் பார்க்கவில்லை, மாறாக, அவர்கள் உள்ளங்கைகளைப் பார்த்தனர். ஒவ்வொரு நாளும் அரண்மனையைக் கூட்டி, கழுவி, சுத்தம் செய்யும் பணிப்பெண்ணின் கரங்களைப் பார்த்த வீரர்கள், "அரசரின் சிறப்பு விருந்தினராக அமரும் வாய்ப்பு, உங்களுக்கே உள்ளது; அரசர் மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசமும், அன்பும், உங்கள் உள்ளங்கைகளில் தெரிகிறது" என்று சொல்லி, அவரை அழைத்துச்சென்று, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரவைத்தனர். உள்ளங்கை உணர்த்தும் உண்மைகள் ஏராளம். அவற்றை உணர, நம் உள்ளம் பக்குவம் பெற்றிருக்கவேண்டும்!

காலியானக் கல்லறை, அங்கு தோன்றிய வானதூதர், எருசலேம் கோவிலில் இரண்டாகக் கிழிந்தத்திரை என்ற பிரமிப்பூட்டும் அடையாளங்களைவிட, ஆணிகளால் அறையப்பட்டக் கரங்களும், கால்களும், சீடர்களின் மனங்களில், உயிர்ப்பின் அடையாளங்களாய், ஆழப் பதியவேண்டும் என்று இயேசு விழைந்தார். வெகு வெகு எளிதான வாழ்வு அனுபவங்களின் வழியாக, உயிர்ப்பு என்ற பேருண்மையை இயேசு எடுத்துரைத்ததால், சீடர்களின் உள்ளங்களில் இந்த மறையுண்மை வெகு ஆழமாகப் பதிந்தது. ஆழப்பதிந்தது மட்டுமல்லாமல், இந்த மறையுண்மைக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு சீடர்களின் வாழ்வு மாறியது.

தான் உயிர்த்ததை, பிரம்மாண்டமான ஒரு சக்தியாக இறைமகன் இயேசு காட்டியிருந்தால், அது, ஒரு நொடிப்பொழுது வியப்பில், சீடர்களை, பரவசம் அடையச் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வு மாறியிருக்குமா என்பது சந்தேகம்தான். வாழ்வை மாற்றும் ஒரு சக்தியாக இயேசு உயிர்ப்பைக் காட்டியதால், அதன் தாக்கம் சீடர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்தது. அந்தத் தாக்கம், இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி, இன்றும் தொடர்கிறது.

மனித உறவுகளை அறுப்பதில், மிகவும் நிச்சயமான துண்டிப்பு மரணம் என்பதை நாம் அறிவோம். மரணம், நிச்சயமான முடிவு அல்ல, கல்லறைக்குப் பின்னும் உறவுகள் தொடரும் என்பதைக் கூறும் மறையுண்மையே, உயிர்ப்பு. கிறிஸ்தவ மறையின் ஆணிவேரான 'உயிர்ப்பு' என்ற பேருண்மையை, ஏட்டளவு உண்மையாக இயேசு சொல்லித் தரவில்லை, மாறாக, அந்த மறையுண்மையை, உணவு, காயப்பட்ட கரங்கள், கால்கள் என்ற மனித அனுபவங்களின் வழியே, இயேசு, அன்று, தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்தார். இன்று, நமக்கும் சொல்லித்தருகிறார்.

கடவுள் மந்திர, மாயங்கள் செய்யும் மந்திரவாதி அல்ல. நம் வாழ்வில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யும் அன்பர் அவர். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும் வரத்தை உயிர்த்த இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2021, 14:30