இஸ்பெயின் பாராளுமன்றத்தில் பிரதமர் Pedro Sanchez இஸ்பெயின் பாராளுமன்றத்தில் பிரதமர் Pedro Sanchez 

இஸ்பெயினில் சிறார்க்கெதிரான வன்முறை நிறுத்தப்பட சட்டம்

இஸ்பெயின் தலத்திருஅவை, சிறார் பாதுகாப்பிற்குத் தன்னை மிக உறுதியுடன் அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறது – கத்தோலிக்க ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இஸ்பெயின் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள, சிறார்க்கெதிரான வன்முறை நிறுத்தப்படுவது குறித்த புதிய சட்டம், அந்நாட்டு சமுதாயத்தைப் பாதிக்கும் பிரச்சனையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 15, இவ்வியாழனன்று, இஸ்பெயின் பாராளுமன்றத்தில், மிகப்பெரும்பான்மை  வாக்குகளுடன் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய சட்டத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், இஸ்பெயின் தலத்திருஅவை, சிறார் பாதுகாப்பிற்குத் தன்னை மிக உறுதியுடன் அர்ப்பணித்துள்ளது என்று கூறியுள்ளனர்.

இஸ்பெயினில் இடம்பெறும் சிறார்க்கெதிரான வன்முறைகளில், 0.2 விழுக்காடு மத நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாக வெளியான அண்மை ஆய்வுகள் பற்றி குறிப்பிட்டுள்ள ஆயர்கள், 2002ம் ஆண்டிலிருந்து இத்தகைய குற்றங்களைத் தடைசெய்வதற்கு, தலத்திருஅவை மிகத்தீவிரமாக உழைத்து வருகிறது என்றும், தற்போது அரசே புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்திருப்பது நல்ல செய்தி என்றும் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில், ஆயிரக்கணக்கான பொதுநிலையினரும், அருள்பணியாளர்களும், துறவியரும், சிறார்க்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு, பல ஆண்டுகளாக கடுமையாய் உழைத்துவருகின்றனர் என்றுரைத்துள்ள ஆயர்கள், இஸ்பெயின் தலத்திருஅவையும், ஒவ்வோர் ஆண்டும், இவ்விவகாரம் தொடர்பாக, இளையோர்க்குப் பயிற்சியளித்து வருகின்றது என்றும் அறிவித்துள்ளனர்.

குடும்பத்தில் இடம்பெறும் கொலைகளையும், பெண்கள் அல்லது, சிறார்க்கெதிரான வன்முறைகளையும் தடைசெய்வது குறித்து வாய்ப்புகள் வழங்கப்படுவதற்கும், இப்புதிய சட்டத்தில் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இணையதளத்தின் வழியே ஆற்றப்படும் குற்றங்களுக்கும், இப்புதிய சட்டத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2021, 15:42