கருக்கலைப்பை எதிர்த்து அமைதி ஊர்வலம் - கோப்புப் படம் கருக்கலைப்பை எதிர்த்து அமைதி ஊர்வலம் - கோப்புப் படம் 

கருவிலிருந்து இயற்கை மரணம் வரை, வாழ்வு மதிக்கப்பட

குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் பொருளாதாரத் திட்டங்களை வகுத்துச் செயல்படும் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவை வழங்கக் கோரிக்கை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மே மாதம் 6ம் தேதி ஸ்காட்லாந்தில் இடம்பெற உள்ள தேர்தலையொட்டி, மேய்ப்புப்பணி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், அரசியல் விவாதங்களில், மனித வாழ்வு, மற்றும் மனித மாண்புக்கு முதலிடம் கொடுத்து செயல்படவேண்டும் என, கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பேச்சு சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், மனச்சான்று, மதச் சுதந்திரம் ஆகியவைகளில் நீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து, அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ள ஸ்காட்லாந்த்து திருஅவை அதிகாரிகள், 6 வழிகாட்டுதல்களை முன்வைத்து இந்த மேய்ப்புப்பணி அறிக்கையை ஸ்கட்லாந்தின் 500 பங்குத்தளங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

1.வாழ்வின் துவக்கமும் முடிவும், 2.குடும்பமும் பணியும், 3.ஏழ்மையும், மனித வியாபாரமும், நவீன அடிமைத்தனமும், 4.சுற்றுச்சுழல், 5. பேச்சு, வழிபாடு, எண்ணம், மனச்சான்று, மற்றும் மதச்சுதந்திரம், 6. கத்தோலிக்கப் பள்ளிகள் என ஆறு தலைப்புக்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ள ஸ்காட்லாந்த்து ஆயர்கள், குடும்பங்களுக்கும், குழந்தைகளுக்கும், பொருளாதாரத் திட்டங்களை வகுத்து, செயல்படும் அரசியல் தலைவர்களுக்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்குவது குறித்து சிந்தித்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய நல நெருக்கடி உருவாக்கியுள்ள பிரச்சனைகளுக்கு முடிவு காணுதல், மத விடுதலை, ஏழைகள் மீது அக்கறை போன்றவற்றில் அதிக அக்கறை காட்டி செயல்படும் அரசியல் தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென, எவ்வித கட்சி சார்புமின்றி தங்கள்  சுற்றறிக்கையை வெளியிட்டுள்ள ஆயர்கள், கருவில் துவங்கியதிலிருந்து இயற்கையான மரணம் வரை மனிதவாழ்வு மதித்து பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

தற்கொலைக்கு உதவுதல், மற்றும் கருணைக் கொலையை சட்டம் வழியாக அங்கீகரிக்கும் ஸ்காட்லாந்து அரசின் முயற்சிகளைக் குறித்தும், தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2021, 14:05