தேடுதல்

Vatican News
நோத்ரு-தாம் (Notre-Dame) பேராலயத்தின் மறுகட்டமைப்புப் பணிகள் நோத்ரு-தாம் (Notre-Dame) பேராலயத்தின் மறுகட்டமைப்புப் பணிகள்  (AFP or Licensors)

நோத்ரு-தாம் பேராலயத்தின் தீ விபத்து – இரண்டாம் ஆண்டு

உலகின் பல நாடுகளில் வாழ்வோர், குறிப்பாக, பாரிஸ் நகரில் வாழும் அனைவரும், நோத்ரு-தாம் பேராலயத்தின் மறுகட்டமைப்பு முழுமை பெறுவதில் மிகுந்த அக்கறை காட்டிவருகின்றனர் - ஆயர் Éric Aumonier

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள நோத்ரு-தாம் (Notre-Dame) பேராலயத்தின் மறுகட்டமைப்புப் பணிகள் பெரும் சவால்களை எதிர்கொண்டாலும், தொடர்ந்து, அவ்வாலயம் தன் பழைய உன்னத நிலையை அடையும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி, நோத்ரு-தாம் பேராலயத்தில் திடீரெனெ ஏற்பட்ட தீவிபத்தால், தன் மேற்கூரை முழுவதையும், கோபுரத்தையும் இழந்த காட்சி, உலக ஊடகங்கள் வழியே, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த பேராலயத்தின் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Éric Aumonier அவர்கள், இந்த தீவிபத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, இதுவரை அங்கு நடைபெற்றுள்ள பணிகளைக் குறித்து, வத்திக்கான் செய்தியிடம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த தீ விபத்தினால், மேல் கூரையும், கோபுரமும் சிதைந்து விழுந்தாலும், தீயணைப்பு வீரர்களின் துணிவுள்ள முயற்சிகளின் பயனாக, பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்த கருவூலங்கள், குறிப்பாக, இயேசுவின் தலையில் வைக்கப்பட்ட முள்முடி, காக்கப்பட்டன என்பதை ஆயர் Aumonier அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இப்பேராலயத்தின் உள்புறத்தில் கோவிட்-19 கட்டுப்பாடுகளுடன், புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன என்பதை தன் பேட்டியில் கூறிய ஆயர் Aumonier அவர்கள், உலகின் பல நாடுகளில் வாழ்வோர், குறிப்பாக, பாரிஸ் நகரில் வாழும் அனைவரும், இப்பேராலயத்தின் மறுகட்டமைப்பு முழுமை பெறுவதில் மிகுந்த அக்கறை காட்டிவருகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

இந்தப் பேராலயத்தில் 1996ம் ஆண்டு, தான் ஆயராக அருள்பொழிவு பெற்றதை நினைவுகூர்ந்த ஆயர் Aumonier அவர்கள், 1980ம் ஆண்டு, நோத்ரு-தாம் பேராலயத்திற்கு திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களும், 2008ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் வருகை தந்ததையும் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

15 April 2021, 14:54