ஹெய்ட்டியில் புனித வாரம் ஹெய்ட்டியில் புனித வாரம் 

ஹெய்ட்டி-அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் கடத்தல்

ஹெய்ட்டியில் இடம்பெற்றுவரும் ஆள்கடத்தல்கள், மட்டுமீறிய மற்றும், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள். இவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் - ஆயர் Dumas

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஹெய்ட்டி நாட்டில் ஐந்து கத்தோலிக்க அருள்பணியாளர்கள், இரு அருள்சகோதரிகள் மற்றும், மூன்று பொதுநிலை விசுவாசிகள் கடத்தப்பட்டிருப்பதற்கு, தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

ஏப்ரல் 11, இறை இரக்க ஞாயிறன்று, “400 Mawozo” என்ற ஆயுதம் ஏந்திய குற்றக்கும்பல், பத்து இலட்சம் டாலர்கள் பிணையல் தொகை கேட்டு, இவர்களை கடத்தியிருக்கின்றது என்று ஹெய்ட்டி நாட்டு ஊடகத்துறை கூறியுள்ளவேளை, இக்குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாறு, ஹெய்ட்டி ஆயர்கள், அரசை வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

இந்த கடத்தல்கள் பற்றி, ஹெய்ட்டி ஆயர் பேரவையின் உதவித் தலைவர் ஆயர் Pierre-André Dumas அவர்கள் கூறும்போது, நெஞ்சை உலுக்கும் இந்த கொடூரச் செயலுக்குப் பலியாகியுள்ளோருக்காக, திருஅவை இறைவனை மன்றாடுகிறது மற்றும், அவர்களோடு ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த கடத்தல்கள், மட்டுமீறி இடம்பெற்றுள்ள நடவடிக்கை என்றும், மனிதாபிமானமற்ற இந்நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நேரம் வந்துள்ளது என்றும், ஆயர் Dumas அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், கும்பலாக நடத்தப்படும் இத்தகைய செயல்கள், நாட்டில் அளவுக்குமீறி சென்றுகொண்டிருக்கின்றன என்று, Port-au-Prince உயர்மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இக்கடத்தல்கள் பற்றி ராய்ட்டர் ஊடகத்திடம் பேசிய, ஹெய்ட்டி நாட்டு துறவியர் அவையின் பொதுச் செயலர் அருள்பணி Gilbert Peltrop அவர்கள், நாட்டினர் அனைவரும் ஒன்றிணைந்து, இத்தகைய கொள்ளையர்களுக்கு எதிராகச் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹெய்ட்டியில் புனித வெள்ளி
ஹெய்ட்டியில் புனித வெள்ளி

ஹெய்ட்டியில் கடத்தல்கள்

ஹெய்ட்டியில், பிணையல்தொகை கேட்டு இடம்பெறும் கடத்தல்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துவருகின்றன என்றும், இவ்வாண்டு, தவக்காலத்தின் இறுதி மூன்று முக்கிய புனித நாள்களில் நடைபெற்ற திருவழிபாடுகளின்போது, திருஅவையின் நான்கு பேர் கடத்தப்பட்டனர் என்றும், அச்செயல், முகநூலில் நேரிடையாக ஒளிபரப்பப்பட்டது என்றும், செய்திகள் கூறுகின்றன.

இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி புனித வியாழன் திருவழிபாடுகளின்போது, Seventh-day Adventist Gospel Kreyòl சபையின் நான்கு பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 11, இஞ்ஞாயிறன்று கடத்தப்பட்டிருப்பவர்களில் ஓர் அருள்பணியாளரும், ஓர் அருள்சகோதரியும், பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் என்றும், பங்குத்தந்தை ஒருவர், அவரது புதிய பங்குத்தளம் ஒன்றில் பணியேற்ற நிகழ்வுக்காகச் சென்றபோது, தலைநகர் Port-au-Princeன் புறநகரிலுள்ள Croix-des-Bouquets என்ற பகுதியில், இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. .

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2021, 15:00