ஆயர் ஜோசப் இராயப்பு ஆயர் ஜோசப் இராயப்பு  

மன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு இறைபதம் சேர்ந்தார்

ஆயர் ஜோசப் இராயப்பு அவர்கள், இலங்கையில் உரோமன் கத்தோலிக்க சமுதாயத்திற்கு மிகப்பெரும் தொண்டாற்றியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையின், யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்றுவந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் இராயப்பு அவர்கள், ஏப்ரல் 01, இவ்வியாழனன்று, தனது 81வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

இத்தகவலை அறிவித்துள்ள, மன்னார் மறைமாவட்ட இப்போதைய ஆயர் எம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள், ஆயர் ஜோசப் இராயப்பு அவர்கள், இலங்கையில் உரோமன் கத்தோலிக்க சமுதாயத்திற்கு மிகப்பெரும் தொண்டாற்றியுள்ளார் என்று கூறியுள்ளார்.

1940ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு என்ற ஊரில் பிறந்த ஆயர் இராயப்பு அவர்கள், 1967ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1984ம் ஆண்டில், உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், 1992ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். 2016ம் ஆண்டு சனவரி 16ம் தேதி, இவர், தனது ஆயர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

யாழ்ப்பாணம் புனித சவேரியார் அருள்பணித்துவ பயிற்சி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர், இலங்கையில் அமைதி நிலவுவதற்காக, வத்திக்கான், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றோடு நெருக்கமாகப் பணியாற்றியிருப்பவர்.

ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், ஈழப்போரின்போது இலங்கை அரசு, மற்றும் இலங்கைப் படையினரின் பங்களிப்புக் குறித்தும், நாட்டின் மனித உரிமை மீறல் குறித்தும் வெளிப்படையாக கருத்துக்களை வெளியிட்டுவந்தார். இதனால், அப்போதைய  அரசு ஆதரவாளர்களின் அச்சுறுத்தல்களை இவர் எதிர்நோக்கவேண்டி வேண்டியிருந்தது என்று செய்திகள் கூறுகின்றன.(Ind.Sec/Tamil)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2021, 14:07