மும்பை சிறையில் உள்ள 84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. மும்பை சிறையில் உள்ள 84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. 

ஸ்டான் சுவாமியின் விடுதலைக்காக இங்கிலாந்து ஆயர்கள்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் மீது குற்றம் சுமத்தியவர்கள், தங்களின் அநீதியான நடவடிக்கைகளை ஏற்று, உண்மையின் வழியில் நடக்குமாறு அழைப்பு - இங்கிலாந்து ஆயர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மும்பை சிறை வாழ்வின் இருநூறாவது நாளில், தன் 84வது வயதை நிறைவுசெய்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், விரைவில் விடுதலைசெய்யப்படவேண்டும் என்று, இங்கிலாந்து ஆயர்கள் உட்பட, இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கிறிஸ்தவத் தலைவர்களும், பொதுநல அமைப்புகளைச் சார்ந்தவர்களும், இந்திய நடுவண் அரசுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஏப்ரல் 26, இத்திங்களன்று, சிறையில், தன் 84வது வயதை நிறைவுசெய்ததையடுத்து, இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் ஆயர் பேரவையின் இணையதளத்தில் (CBCEW), அந்நாட்டின் நான்கு ஆயர்கள், அருள்பணி சுவாமி அவர்களோடு, தங்களின் அருகாமை மற்றும், தோழமையுணர்வைத் தெரிவித்துள்ளனர்.

அதோடு, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று, கடந்த பல மாதங்களாக, இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் அழைப்பு விடுக்கும் எண்ணற்ற மக்களோடு தாங்களும் இணைவதாகவும், இங்கிலாந்து ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.   

பார்க்கின்சன்ஸ் எனப்படும், நரம்புத்தளர்ச்சி நோய், மற்றும், முதிர்ந்த வயது காரணமாக துன்புறும் அருள்பணி சுவாமி அவர்கள், இந்தியாவில் தற்போது வீரியம் கொண்டிருக்கும் கோவிட்-19ன் இரண்டாவது அலையால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார் என்றும், இங்கிலாந்து ஆயர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் ஆயர் பேரவையின், பன்னாட்டு உறவுகள் பணிக்குழுவின் தலைவரான ஆயர் Declan Lang  அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தலித், மற்றும், விளிம்புநிலையிலுள்ள பழங்குடி இன மக்களுக்கு ஆற்றிவந்த பணி, அனைவருக்கும் தூண்டுதலின் ஊற்றாக உள்ளது என்றும், நீதிக்காகப் போராட துணிச்சலைக் கொடுக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

Cafod அமைப்பின் தலைவர்

மேலும், நீதியை நிலைநிறுத்த துணிவோடு போராட்டம் நடத்திய, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்காகவும், அவரை சிறையில் வைத்திருப்பவர்களுக்காகவும் இறைவேண்டல் செய்வதாகக் குறிப்பிட்டுள்ள, ஆயர் John Arnold அவர்கள், அருள்பணி சுவாமி அவர்கள் மீது குற்றம் சுமத்தியவர்கள், தங்களின் அநீதியான நடவடிக்கைகளை ஏற்று, உண்மையின் வழியில் வழிநடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆயர் John Arnold அவர்கள், இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் ஆயர் பேரவையின், Cafod அமைப்பின் தலைவராவார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பிணையலில் விடுதலை செய்யப்படவேண்டும் என்று தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டு வந்துள்ள மனுக்கள், கடைசி முறையாக, இவ்வாண்டு மார்ச் மாதம் 22ம் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2021, 15:07