தேடுதல்

பிரேசிலில் கிறிஸ்து அரசர் திருவுருவம் பிரேசிலில் கிறிஸ்து அரசர் திருவுருவம் 

பிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றி

பிரேசிலில் கடந்த ஆண்டில், நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு ஒருமைப்பாட்டு அடையாளங்கள் வெளிப்பட்டன - ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி காலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் மக்களுக்கு, தன் தந்தைக்குரிய அருகாமை, மற்றும், இரக்கத்தை வெளிப்படுத்தி இருப்பதற்காக, அந்நாட்டு ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றி கூறியுள்ளனர்.

ஏப்ரல் 12 இத்திங்கள் முதல், 16, இவ்வெள்ளி முடிய இணையம்வழியாக தங்களின் 58வது பொதுப் பேரவையை நடத்திய பிரேசில் ஆயர்கள், திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள மடலில், திருஅவைக்குள் ஒன்றிப்பையும், மற்ற திருஅவைகள், மதங்கள் மற்றும், கலாச்சாரங்களோடு உரையாடலையும் ஊக்குவிக்க திருத்தந்தை மேற்கொண்டுவரும் எண்ணற்ற முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரேசில் நாடு, பெருந்துயரம் மிகுந்த சூழலில் வாழ்ந்துவரும்வேளை, அந்நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், பட்டியலிட்டுள்ள ஆயர்கள், அதேநேரம், கடந்த ஆண்டில், நாடு முழுவதிலுமிருந்து வெளிப்பட்ட பல்வேறு ஒருமைப்பாட்டு அடையாளங்கள் குறித்த மகிழ்வையும், அம்மடலில் குறிப்பிட்டுள்ளனர். 

பிரேசிலின் பலவீனமான பொதுவானக் கொள்கைகள், நெருக்கடியைக் கையாள்வதில் அரசின் உறுதியின்மை, சில சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவது, பெருந்தொற்றை அரசியலாக்குவது, மற்றும், கருத்தியலாக்குவது, பெருந்தொற்றால் இறந்தவர்களை கடைசியில் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றை ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இறைவார்த்தையை மையப்படுத்தி நடைபெற்ற இப்பொதுப் பேரவையில், நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு பொதுவான வழிகாட்டுதல்கள், பாலியல் கொடுமைகளை ஒழிப்பதற்கு ஆயர்களின் அர்ப்பணம், 2023ம் ஆண்டில் பிரேசிலில் கொண்டாடப்படவிருக்கும், தேசிய இறையழைத்தல் ஆண்டு, தற்போதைய புனித யோசேப்பு ஆண்டு போன்ற தலைப்புக்கள் இடம்பெற்றன.

16 April 2021, 13:29