ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது -தி.பா.6:6 ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது -தி.பா.6:6 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 6 – பாவ மன்னிப்பு வேண்டும் பாடல்

மன்னன் தாவீது, தன் உள்ளத்தை அழுத்தி வதைக்கும் குற்ற உணர்வுகளை எடுத்துரைத்து, ஆண்டவரின் கருணையை வேண்டுவது, இப்பாடலின் மையக்கருத்தாக அமைந்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: திருப்பாடல் 6 – பாவ மன்னிப்பு வேண்டும் பாடல்

"To err is human, to forgive divine", அதாவது, "தவறுவது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்" என்ற புகழ்பெற்ற கூற்றை, அலெக்ஸ்சாண்டர் போப் (Alexander Pope) என்ற ஆங்கில கவிஞர் கூறினார். தவறிழைத்த பேதுருவை, மன்னித்து, அவருக்கு திருஅவையின் தலைமைப் பொறுப்பை, உயிர்த்த இயேசு வழங்கும் நிகழ்வை, இந்த உயிர்ப்புக் காலத்தில் சிந்திக்கிறோம். இவ்வேளையில், தன் தவறுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்பு வேண்டி, மன்னன் தாவீது எழுப்பிய பாடல்களில் ஒன்றான 6ம் திருப்பாடலில் நம் விவிலியத் தேடலை மேற்கொள்கிறோம்.

உள்ளார்ந்த மனவருத்தத்துடன், பாவ மன்னிப்பு வேண்டும் 'மனவருத்தப் பாடல்கள்', திருப்பாடல்கள் நூலில், ஏழு முறை இடம்பெற்றுள்ளன (6, 32, 38, 51, 102, 130, 143). இவ்வேழு 'மனவருத்தப் பாடல்களில்', முதல் பாடலான 6ம் திருப்பாடல், 'இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மன்னன் தாவீது, தன் உள்ளத்தை அழுத்தி வதைக்கும் குற்ற உணர்வுகளை எடுத்துரைத்து, ஆண்டவரின் கருணையை வேண்டுவது, இப்பாடலின் மையக்கருத்தாக அமைந்துள்ளது.

பாவ மன்னிப்பை வேண்டும், இந்த ஏழு 'மனவருத்தப் பாடல்களில்', 51ம் திருப்பாடல் மட்டும், எத்தகையச் சூழ்நிலையில் பாடப்பட்டது என்ற குறிப்பு தரப்பட்டுள்ளது. "பாவ மன்னிப்புக்காக மன்றாடல்" என்று தலைப்பிடப்பட்டுள்ள 51ம் திருப்பாடலில், “தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது” என்ற முன்குறிப்பைக் காண்கிறோம்.

தன் படைவீரர்களில் ஒருவரான உரியா என்பவரின் மனைவி பத்சேபாவுடன் தகாத உடலுறவு கொண்டது (2 சாமுவேல் 11:2-5), அதன் பின்னர், உரியா, போர்க்களத்தில் கொல்லப்படும்வண்ணம் திட்டம் வகுத்தது (2 சாமுவேல் 11:14-17), ஆகிய குற்றங்களை, மன்னன் தாவீது புரிந்தார். இதைத் தொடர்ந்து, இறைவாக்கினர் நாத்தான், ஓர் உவமை வழியே தாவீதுக்கு வழங்கிய அறிவுரை, 2 சாமுவேல் 12ம் பிரிவில் பதிவாகியுள்ளது. நாத்தான் கூறிய அறிவுரையால் மனக்கண்கள் திறக்கப்பட்ட தாவீது, இப்பாடலைப் பாடி, இறைவனிடம் மன்னிப்பு வேண்டியதாக, திருப்பாடல் 51ன் முன்குறிப்பு கூறுகிறது.

பத்சேபாவுடன் கொண்ட தகாத உடலுறவு, அவரது கணவரான உரியாவை கொலைசெய்வதற்கு செய்த சூழ்ச்சி என்ற இரு குற்றங்கள், தாவீதின் வாழ்நாள் முழுவதும் அவரை வதைத்துவந்தன என்பது திண்ணம். அந்தக் குற்ற உணர்வின் வெளிப்பாடாக, அவர் எழுப்பிய 'மனவருத்தப் பாடல்கள்', ஏழு திருப்பாடல்களாகப் பதிவாகியுள்ளன.

'மனவருத்தப் பாடல்களில்', முதல் பாடலான 6ம் திருப்பாடலில், பத்து இறைவாக்கியங்கள் உள்ளன. இவற்றில், முதல் 7 இறைவாக்கியங்கள், ஆண்டவரை நோக்கி எழுப்பப்படும் வேண்டுதலாக அமைந்துள்ளன. இறுதி 3 இறைவாக்கியங்கள், தனக்கு தீங்கிழைப்போருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை போல ஒலிக்கின்றன.

இப்பாடலின் முதல் இறைவாக்கியத்தில், “ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்” (தி.பா.6:1) என்று தாவீது வேண்டுகிறார்.

இறைவன் தன்னை கண்டிக்கவோ, தண்டிக்கவோ வேண்டாம் என்று தாவீது வேண்டவில்லை, மாறாக, சினங்கொண்டு கண்டியாதேயும்; கடுஞ்சீற்றங்கொண்டு தண்டியாதேயும் என்றே, தாவீது வேண்டுகிறார். இதையொத்த ஒரு கூற்றை, இறைவாக்கினர் எரேமியாவும் குறிப்பிட்டுள்ளார்: "ஆண்டவரே! உம் சினத்திற்கு ஏற்ப அன்று, உன் நீதிக்கு ஏற்ப என்னைத் திருத்தியருளும். இல்லையெனில், நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்" (எரேமியா 10:24)

கோபத்தினால் அல்லாமல், அக்கறையினால் தன்னை கண்டிக்கவும், தண்டிக்கவும் உரிமை பெற்ற ஒரு பெற்றோராக, இறைவனை உருவகித்து மன்னன் தாவீது கூறும் வார்த்தைகள், விவிலியத்தின் வேறு சில நூல்களில், கூறப்பட்டுள்ள எண்ணங்களின் எதிரொலியாக அமைந்துள்ளன.

பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே; அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே. தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார் (நீதி மொழிகள் 3:11-12) என்று நீதி மொழிகள் நூலிலும், இதோ! கடவுள் திருத்தும் மனிதர் பேறு பெற்றோர்; ஆகவே, வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர். காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே (யோபு 5:17-18) என்று யோபு நூலிலும், திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? (எபிரேயர் 12:7) என்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலும் நாம் வாசிக்கும் எண்ணங்களை, 6ம் திருப்பாடலின் முதல் இறை வாக்கியம் நமக்கு நினைவுறுத்துகிறது.

பிள்ளைகள் மீது பெற்றோர் கொண்டிருக்கும் உண்மையான அன்பும், அக்கறையும், கண்டித்தல், மற்றும் தண்டித்தல் ஆகிய வழிகளில் வெளிப்படும். கடவுள், ஓர் அன்பு பெற்றோராக, நம்மை கண்டிக்கவும், தண்டிக்கவும், பயன்படுத்தும் சிறந்த வழி, அவர் நமக்குள் உருவாக்கியிருக்கும் மனசாட்சி.

தவறிழைப்பதற்கு முன், நம் மனசாட்சி நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. அதையும் மீறி, நாம் தவறிழைத்துவிட்டால், நம் மனசாட்சி உறுத்தல்களை உருவாக்குகின்றது. தவறுக்கு முன் வரும் எச்சரிக்கையை, கண்டித்தலாகவும், தவறு நிகழ்ந்தபின் உருவாகும் உறுத்தல்களை, தண்டித்தலாகவும் நாம் எண்ணிப் பார்க்கலாம்.

பத்சேபாவுடன் தகாத உறவுகொள்ள தாவீது விரும்பிய வேளையில், கட்டாயம் அவருடைய மனசாட்சி எச்சரிக்கைகளை விடுத்திருக்கும். அவற்றிற்கு செவிமடுக்க மறுத்து, தவறிழைத்த தாவீதுக்கு, இறைவாக்கினர் நாத்தான் வழியே கண்டிப்பையும், தண்டனையையும் வழங்குகிறார் இறைவன். நாத்தான் வழியே இறைவன் அனுப்பிய கண்டிப்பு, தண்டனை இரண்டையும் தாவீது ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, இறைவன், தாவீதை, மீண்டும் தன் ஆசீரால் நிறைத்தார்.

இருப்பினும், தாவீது, தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும், தான் செய்த குற்றங்களின் சுமையால் துன்புற்று வந்தார். தன் குற்றங்களின் சுமை தன்னை எவ்வளவு தூரம் துன்புறுத்துகிறது என்பதை, தாவீது, 6ம் திருப்பாடலின் 2 முதல் 7 முடிய உள்ள 6 இறைவாக்கியங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆறு இறைவாக்கியங்களில் பல உருவகங்களை திருப்பாடல் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

நான் தளர்ந்து போனேன்... என் எலும்புகள் வலுவிழந்து போயின... என் உயிர் ஊசலாடுகின்றது (காண்க தி.பா.6:2-3) என்று தாவீது பயன்படுத்தும் சொற்களில் காணப்படும் உருவகங்களை, நாமும் பல நேரங்களில் பயன்படுத்தியிருக்கிறோம். அத்துடன், அவர் எழுப்பும், "ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?" (தி.பா.6:3) என்ற கூர்மையான கேள்வி, நம்மை பலமுறை வதைத்துள்ள, இன்னும் தொடர்ந்து வதைத்துவரும் ஒரு கேள்வி!

கோவிட் 19 பெருந்தொற்று, அதனால் உருவாகியுள்ள சமுதாய, பொருளாதார நெருக்கடிகள், இழப்புகள் ஆகியவற்றை கடந்த ஒராண்டுக்கும் மேலாக உணர்ந்துள்ள கோடான கோடி உள்ளங்களிலிருந்து, "ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?" என்ற இந்த கூர்மையான கேள்விக்கணை, விண்ணைநோக்கி ஒவ்வொரு நாளும் விடப்பட்ட வண்ணம் உள்ளது.

6ம் திருப்பாடலின் 6ம் இறைவாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், உருவகங்கள் மற்றும், அவற்றின் வழியே வெளிப்படும் உணர்வுகள், நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது. (தி.பா.6:6)

தான் இளைத்துப்போனதாக தாவீது கூறுவதைக் கேட்கும்போது, அவர், கோலியாத்துக்கு எதிராக போரிட்டதையும், ஓர் ஆயனாக இருந்தபோது, தன் மந்தையைத் தாக்கவந்த விலங்குகளை விரட்டியடித்ததையும் எண்ணிப்பார்க்கிறோம். இந்த எதிரிகளை வெல்வதற்கு துணிவுகொண்டிருந்த தாவீது, தற்போது, தான் இறைவனுடன் போராட வந்திருப்பதை உணர்ந்து, அவருடன் போரிட இயலாமல், "இளைத்துப் போனதாக" குறிப்பிடுகிறார்.

கண்ணீரால் நனையும் தன் கட்டில், படுக்கை, ஆகியவற்றைக் குறிப்பிட்டு, தாவீது பேசுவது, மற்றுமொரு உண்மையைத் தெளிவாக்குகிறது. ஒருவேளை, அந்தக் கட்டிலும், படுக்கையும் அவரது குற்றங்களின் ஆரம்பப் புள்ளிகளாக இருந்திருக்கலாம். அவர் பத்சேபாவுடன் தகாத உறவு கொண்ட, அந்தக் கட்டிலில், படுக்கையில், அவரால் நிம்மதியாக உறங்கமுடியாமல் போயிற்று.

நம்முடைய வாழ்வில் குற்றங்கள் நிகழ்ந்த இடங்கள், நேரங்கள், சூழல்கள் ஆகியவை, நம்மை தொடர்ந்து துன்புறுத்தும் என்பதை, தாவீது கூறும் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

கண்ணீராலும், அழுகையாலும், தன் படுக்கை மிதப்பதாகவும், கட்டில் நினைவதாகவும் தாவீது கூறுவது, கண்ணீரின் சக்தியை உணர்த்துகின்றது. கழுவி சுத்தம்செய்தல், மற்றும், உயிரூட்டுதல் ஆகிய இரு பண்புகள், தண்ணீருக்குள்ள அடிப்படை பண்புகள். அதே பண்புகள் கண்ணீருக்கும் உண்டு என்பதை நாம் அனுபவத்தில் உணர்ந்திருப்போம். கட்டிலை நனைத்து, படுக்கையை மிதக்க வைக்கும் அளவு வெளிப்படும் கண்ணீரும், அழுகையும், நம் உள்ளத்தின் பாரங்களைக் குறைத்து, அதற்கு உயிரூட்டும் சக்தியும் பெற்றவை என்பதை நம்மால் மறுக்கஇயலாது.

தன் கண்ணீராலும், அழுகையாலும் கழுவப்பட்டு, உயிர்பெற்ற தாவீது, "ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவிசாய்த்துவிட்டார். ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்" (தி.பா.6:8-9) என்று, தனக்கு தீங்கிழைக்க விழைவோரிடம் துணிவுடன் பேசுகிறார். மன்னிப்பு வேண்டி, மனவருத்தத்துடன் ஆரம்பமான 6ம் திருப்பாடல், இறைவன் தன் மீது காட்டிய அக்கறையாலும், பரிவாலும் துணிவுபெற்ற நிலையில் நிறைவு பெறுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2021, 14:54