டோக்கியோ பேராயர் Tarcisius Isao Kikuchi டோக்கியோ பேராயர் Tarcisius Isao Kikuchi 

டோக்கியோ- கோவிட்-19 ஊரடங்கில் திருப்பலிக்கு தடையில்லை

இந்த இன்னலான பெருந்தொற்று காலக்கட்டத்தில், உலக முடிவுவரை நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்ற ஆண்டவரது வாக்குறுதியில் நம்பிக்கை வையுங்கள் - டோக்கியோ பேராயர் Kikuchi

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜப்பானில் மீண்டும் கோவிட்-19 பெருந்தொற்று வீரியம் கொண்டிருக்கிறது என்றும், டோக்கியோ மற்றும், Osaka, Hyogo மற்றும், Kyoto மாவட்டங்களில், அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அந்நாட்டு பேராயர் ஒருவர், ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.

ஜப்பானில், SARS, மற்றும், கொரோனா தொற்றுக் கிருமிகளோடு தொடர்புடைய பாதிப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து, 2020ம் ஆண்டு சனவரி மற்றும், ஏப்ரல் மாதங்களுக்குப் பின் அந்நாட்டில் மூன்றாவது முறையாக, அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று, டோக்கியோ பேராயர் Tarcisius Isao Kikuchi அவர்கள் கூறியுள்ளார்.

தலைநகர் டோக்கியோவில் வருகிற மே மாதம் 11ம் தேதி வரை அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், மத சுதந்திரம் என்ற பெயரில், ஜப்பானிய அரசு, வழிபாட்டுத் தலங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றும், பேராயர் Kikuchi அவர்கள் கூறியுள்ளார்.

ஆயினும், இந்த நெருக்கடி காலத்தில் கத்தோலிக்கர் நடந்துகொள்ளவேண்டிய முறைகள் பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, பேராயர் Kikuchi அவர்கள், “நாமும் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்படமாட்டோம், மற்றவரும், இதனால் பாதிக்கப்பட அனுமதிக்கமாட்டோம்” என்று, கத்தோலிக்கர், கடந்த ஆண்டு சனவரி 30ம் தேதியன்று உறுதிமொழி எடுத்து, கடைப்பிடித்துவரும் நெறிமுறையை நினைவுபடுத்தியுள்ளார்.

அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள், திருஅவைக்கும் முக்கியமானது, ஏன், இன்னும் அவற்றை மிகுந்த கவனமுடன் திருஅவை கடைப்பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பேராயர் Kikuchi அவர்கள், திருப்பலியைத் தவிர, பொதுவில் இடம்பெறும் மற்ற பக்தி முயற்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

75 வயதுக்கு மேற்பட்டவர்களும், அவர்களோடு இருப்பவர்களும், வீடுகளில் இருந்தே செபிக்குமாறும், இந்த இன்னலான காலக்கட்டத்தில், உலக முடிவுவரை நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்ற ஆண்டவரது வாக்குறுதியில் நம்பிக்கை வைக்குமாறும், பேராயர் Kikuchi அவர்கள், விசுவாசிகளை கேட்டுக்கொண்டுள்ளார். 

டோக்கியோவில் கடந்த 24 மணி நேரத்தில் 752 பேர் பெருந்தொற்றால் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று ஆசியச் செய்தி கூறுகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2021, 15:13