அன்பு நன்மை செய்வதில் வெளிப்படுகிறது அன்பு நன்மை செய்வதில் வெளிப்படுகிறது 

மகிழ்வின் மந்திரம் : செயல்வழி வெளிப்படும் அன்பு

"அன்பு, சொற்களைவிட, செயல்கள் வழியே உணர்த்தப்படுகிறது" என்று, லொயோலாவின் புனித இக்னேசியஸ் கூறியுள்ளார் (காண்க. ஆன்மீகப் பயிற்சிகள் 230)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருஅவை வரலாற்றில் திருத்தந்தையர் வெளியிட்டுள்ள மிக நீண்ட மடல்களில் ஒன்றாக, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடல் விளங்குகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இம்மடல், 9 பிரிவுகளைக் கொண்டது. இந்த 9 பிரிவுகளின் மையமாக அமைந்துள்ள 4ம் பிரிவு, ஏனைய பிரிவுகளைவிட நீண்டதாக உள்ளது. காரணம், திருமண அன்பின் பல்வேறு பண்புகள் இப்பிரிவில் கூறப்பட்டுள்ளன.

'திருமணத்தில் அன்பு' என்ற தலைப்புடன், திருத்தந்தை எழுதியுள்ள 4ம் பிரிவின் துவக்கத்தில், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 13ம் பிரிவில், திருத்தூதர் பவுல், தொகுத்து வழங்கியுள்ள அன்பின் பண்புகள் ஒவ்வொன்றிற்கும் விளக்கங்கள் வழங்கியுள்ளார். இப்பண்புகளில், 'அன்பு பொறுமையுள்ளது' (1 கொரி. 13:4) என்ற முதல் பண்பை, 91,92 ஆகிய இரு பத்திகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளக்கியபின், 'அன்பு நன்மை செய்யும்' என்ற பண்பில் பொதிந்துள்ள எண்ணங்களை, 93,94 ஆகிய இரு பத்திகளில், இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

'நன்மை செய்யும்' என்று பொருள்படும் 'chrestéuetai' என்ற கிரேக்கச்சொல், விவிலியம் முழுவதிலும், இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல், 'நல்லவர் ஒருவர், தன் செயல்கள் வழியே, தன் நன்மைத்தனத்தை வெளிப்படுத்துதல்' என்ற பொருளை உணர்த்தும், 'chrestós' என்ற சொல்லிலிருந்து உருவாகும் மற்றொரு சொல். இந்தப்பண்பு, இதற்கு முன்பு சொல்லப்பட்டுள்ள 'பொறுமை' என்ற பண்பை இன்னும் விளக்கிக்கூறுகின்றது. பவுல் பயன்படுத்தியுள்ள 'பொறுமை', ஒன்றும் செய்யாமல் இருக்கும் பண்பு அல்ல, மாறாக, பிறருக்காக நற்செயல்கள் ஆற்றும் பண்பு. (93)

இப்பகுதி முழுவதிலும், திருத்தூதர் பவுல், 'அன்பு' என்பது, வெறும் உணர்ச்சி அல்ல என்பதை வலியுறுத்த விழைகிறார். எபிரேய மொழியில், 'அன்பு செய்தல்' என்பது, 'நன்மை செய்தல்' என்ற பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறது. "அன்பு, சொற்களைவிட, செயல்கள் வழியே உணர்த்தப்படுகிறது" என்று, லொயோலாவின் புனித இக்னேசியஸ் கூறியுள்ளார் (காண்க. ஆன்மீகப் பயிற்சிகள் 230) திரும்பப்பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு ஏதுமின்றி, கொடுப்பதிலும், பணிபுரிவதிலும் கிடைக்கும் தூய ஆனந்தத்தால், பிறருக்கு நன்மைகள் செய்வதே, 'அன்பு நன்மை செய்யும்' என்ற பண்பு. (அன்பின் மகிழ்வு 93,94)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2021, 15:07