கியூபா நாட்டில் புதிதாக மணமுடித்த தம்பதியர் கியூபா நாட்டில் புதிதாக மணமுடித்த தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம் : ஏனைய மதப் பாரம்பரியங்களில் குடும்பம்

ஏனைய மதப் பாரம்பரியங்களில் காணப்படும் திருமணவடிவங்களில், வெளிப்படையாகத் தெரியாவிடினும், நேர்மறையான அம்சங்களைக் காணமுடியும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

2016ம் ஆண்டு, மார்ச் 19, புனித யோசேப்பு திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில் கையெழுத்திட்டார். அம்மடல், ஏப்ரல் 8ம் தேதி வெளியானது. எனவே, இவ்வாண்டு, ஏப்ரல் 8, கடந்த வியாழனன்று, 'அன்பின் மகிழ்வு' வெளியானதன் 5ம் ஆண்டு, நிறைவு பெற்றுள்ளது.

ஒன்பது பிரிவுகளைக் கொண்ட இந்த அறிவுரை மடலின் மூன்றாம் பிரிவின் முதல் மூன்று பகுதிகளில், விவிலியம், திருஅவை ஏடுகள் ஆகியவற்றில், திருமண உறவையும், குடும்ப வாழ்வையும் குறித்து சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்களை, 58 முதல் 75 முடிய உள்ள 18 பத்திகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, 'இறைவார்த்தையின் விதைகளும், குறைபாடு உள்ள சூழல்களும்' என்ற 4வது பகுதியின், முதல் இரு பத்திகளில் (76,77) அவர் பகிர்ந்துகொள்ளும் எண்ணங்கள் இதோ:

"குடும்பம் என்ற நற்செய்தி, வளர்வதற்காகக் காத்திருக்கும் விதைகளுக்கு உரமூட்டுகிறது; மற்றும், காய்ந்து, துவண்டு போகவிருக்கும் பயிர்களைப் பேணிக்காக்கிறது. திருமணம் எனும் அருளடையாளத்தின் வழியே, தம்பதியர் பெறும் கிறிஸ்துவின் கொடை, இந்தப்பணியை நிறைவேற்ற உதவுகிறது. (76)

"படைப்பு அனைத்தும் கிறிஸ்து வழியாக, கிறிஸ்துவுக்காக படைக்கப்பட்டன (காண்க. கொலோ. 1:16) என்ற விவிலியக் கூற்றின் அடிப்படையில், மாமன்றத் தந்தையர் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளனர். மனித உறவுகளின் ஆழமான உண்மை, கிறிஸ்துவை தியானிப்பதன் வழியே நிறைவு பெறுகிறது. இறைவார்த்தையின் விதைகள், ஏனைய கலாச்சாரங்களிலும் உள்ளன (காண்க. Ad Gentes 11) என்ற உண்மை, திருமணம் மற்றும் குடும்பம் ஆகிய உண்மைகளுக்கும் பொருந்தும். ஏனைய மதப் பாரம்பரியங்களில் காணப்படும் திருமணவடிவங்களில், வெளிப்படையாகத் தெரியாவிடினும், நேர்மறையான அம்சங்களைக் காணமுடியும். இவ்வுலகில் ஒரு குடும்பத்தை உருவாக்கவும், அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, இவ்வுலகின் தீமையை வெல்வதற்கு சொல்லித்தரவும் விழையும் யாரிடமும், தூய ஆவியார் உயிராற்றலுடன் செயல்படுகிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், எந்த மதத்தவராயினும், எப்பகுதியைச் சேர்ந்தவராயினும், அவர்களுக்கு நம் நன்றியும், பாராட்டும் உரித்தாகட்டும்." (அன்பின் மகிழ்வு 76-77)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2021, 15:10