புதிதாக திருமணமான தம்பதி புதிதாக திருமணமான தம்பதி 

மகிழ்வின் மந்திரம் - திருமணத்தில் அன்பு

குடும்பத்தில் நிலவும் அன்பை வளர்த்து, பலப்படுத்தி ஆழப்படுத்தாமல், குடும்பத்தில், ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஊக்குவிக்க முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2016ம் ஆண்டு, மார்ச் 19, புனித யோசேப்பு திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்ட, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடல், ஒன்பது பிரிவுகளைக் கொண்டுள்ளது. கடந்த பல வாரங்களாக, இந்த அறிவுரை மடலின் முதல் மூன்று பிரிவுகளின் 88 பத்திகளில் கூறப்பட்டுள்ள எண்ணங்களை சிந்தித்துவந்த நாம், தற்போது, 'திருமணத்தில் அன்பு' என்ற நான்காம் பிரிவில் அடியெடுத்து வைக்கிறோம். இப்பிரிவின், 89,90 ஆகிய இரு பத்திகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் இதோ:

இந்த அறிவுரை மடலில், அன்பைப்பற்றி நாம் பேசாவிட்டால், இதுவரை, குடும்பம், மற்றும் திருமணம் எனும் நற்செய்தி ஆகியவற்றைக் குறித்து நாம் பேசியதெல்லாம், நிறைவற்றதாகப் போய்விடும். தம்பதியருக்கிடையிலும், குடும்பத்திலும் நிலவும் அன்பை வளர்த்து, பலப்படுத்தி ஆழப்படுத்தாமல், ஒருவரொருவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும், ஒருவரொருவருக்கு தங்களையே வழங்குவதையும் ஊக்குவிக்கமுடியாது. திருமணம் எனும் அருளடையாளத்தில் வழங்கப்படும் அருள், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில், தம்பதியரின் அன்பை குறையற்றதாக மாற்றுவதை தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை’(1 கொரி. 13:2-3), என்ற வார்த்தைகளை இங்கு நாம் எடுத்துரைக்கலாம். நாம் பொதுவாகச் சொல்லும் 'அன்பு' என்ற வார்த்தை, பலவேளைகளில் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. (அன்பின் மகிழ்வு 89)

'அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்' (1 கொரி. 13:4-7) என, உண்மை அன்பின் குணநலன்கள் குறித்து புனித பவுல், உணர்ச்சியுள்ள கவிதை வரிகளாக கூறியுள்ளவைகளைக் காண்கிறோம். அன்பு அனுபவிக்கப்படுவதும், உரமூட்டி வளர்க்கப்படுவதும், தம்பதியர், மற்றும் அவர்களின் குழந்தைகளின் தினசரி வாழ்வின் அங்கமாகும். புனித பவுலின், 'அன்பு' குறித்த இந்த பகுதியை, மேலும் ஆழமாக சிந்தித்து, ஒவ்வொரு குடும்பத்தின்  உறுதியான நிலைகளுக்கு, இது எவ்வாறு பொருந்திச்செல்கின்றது என்பதை நோக்குவது பயனுள்ளதாக இருக்கும். (அன்பின் மகிழ்வு 90)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2021, 13:20