8 வாரங்களுக்குப்பின் தன் குடும்பத்தோடு இணையும் சிறுமி 8 வாரங்களுக்குப்பின் தன் குடும்பத்தோடு இணையும் சிறுமி  

மகிழ்வின் மந்திரம்: அன்பு தற்புகழ்ச்சி கொள்ளாது, இறுமாப்பு அடையா

குடும்பத்தில், யார் சிறந்த அறிவாளி, அல்லது, யார் மிகுந்த ஆற்றலுள்ளவர் என்ற போட்டி மனநிலை இருந்தால், அது, அங்கே அன்பை அழித்துவிடும் (அன்பின் மகிழ்வு 98)

மேரி தெரேசா: வத்திக்கான் 

பவுலடிகளார், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் 13ம் பிரிவில்,  எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி, அன்பு என்று, அதன் பல்வேறு பரிமாணங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில், அன்பு தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது என்பது பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 97,98ம் பத்திகளில் பதிவுசெய்துள்ள சிந்தனைகள்....

தற்புகழ்ச்சியைக் குறிப்பிடும், Perpereúetai என்ற கிரேக்கச் சொல், செருக்கு, கர்வம், இறுமாப்பு, மற்றும், பகட்டோடு இருப்பதைக் குறிக்கின்றது. ஆனால், அன்புகூர்பவர்கள், தன்னைப் பற்றி அதிகம் பேசுவதை தவிர்ப்பது மட்டுமல்ல, மற்றவரை மையப்படுத்தியும் இருப்பார்கள். அனைவரும் தன்னையே கவனிக்கவேண்டும் என்பதும் அவர்களுக்குத் தேவைப்படாது. அடுத்து, அன்பு, அன்பு இறுமாப்பு அடையாது என்று, புனித பவுல் சொல்கிறார். இறுமாப்பு (physioútai) உடையவர்கள், தன்னைப் பற்றிய உண்மை நிலையை இழந்தவர்கள். இவர்கள், தாங்கள் “ஆன்மீகத்தில்” அல்லது “ஞானத்தில்” உயர்ந்தவர்கள் என்ற நினைப்பில், உண்மையிலேயே அவர்கள் இருப்பதைவிட மிகவும் முக்கியமானவர்களாகத் தங்களை நினைத்துக்கொள்கின்றனர். புனித பவுல், பல தருணங்களில் “அறிவு இறுமாப்புடையச் செய்யும்” என்று சொல்லும்போது, அன்பு உறவை வளர்க்கும் என்று (1கொரி.8:1) சொல்லியுள்ளார். மற்றவரைவிட தாங்கள் அறிவில் சிறந்தவர்கள், எனவே தாங்கள் முக்கியமானவர்கள் என்று சிலர் நினைத்து, மற்றவர் மீது அதிகாரம் செலுத்த விரும்புகின்றனர். ஆயினும், உண்மையில் நம்மை முக்கியமானவர்களாக ஆக்குவது அன்பு. அது மற்றவரைப் புரிந்துகொள்ளும், அக்கறை காட்டும், பலவீனர்களை அரவணைக்கும். தங்களின் முக்கியத்துவம் பற்றிப் பெருமையாகப் பேசுபவர்கள், பல நேரங்களில் குறைகூறப்பட்டுள்ளனர் (காண்க.1கொரி.4:18). உண்மையில் அவர்கள், ஆவியாரின் வல்லமையால் இல்லாமல், வெற்று வார்த்தைகளால் நிறைந்திருக்கின்றனர்(காண்க.1கொரி.4:19).  (அன்பின் மகிழ்வு 97)

நம்பிக்கை பற்றி குறைந்த அறிவுள்ள, மற்றும், உறுதிப்பாடுகளில் பலவீனமான, தங்களின் குடும்ப உறுப்பினர்களை நடத்தும் முறைகளின் வழியாக, கிறிஸ்தவர்கள் தங்களின் கிறிஸ்தவ அன்பை காட்டவேண்டியது முக்கியம். குடும்பத்தில், சில நேரங்களில் இதற்கு எதிர்மாறாகவும் நடைபெறுவதுண்டு. குடும்பத்தில், பக்குவம் நிறைந்த நம்பிக்கையாளர்களாகக் காட்டிக்கொள்பவர்கள், தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு, தற்பெருமை உள்ளவர்களாகவும் மாறுகின்றனர். ஆனால் அன்பு, தாழ்ச்சியால் குறிக்கப்படுகிறது. மற்றவரை மனதார மன்னித்தல், மற்றும், அவர்களுக்குப் பணிபுரிதலை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், நம் தற்புகழ்ச்சி குணப்படுத்தப்படவேண்டும், மற்றும், நமது தாழ்ச்சியை அதிகரிக்கவேண்டும். ஒருவர் மற்றவரை அடக்கி ஆள முயற்சிக்கும் ஓர் உலகில், “உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது” (மத்.20,26) என்று இயேசு தம் சீடர்களிடம் கூறினார். கிறிஸ்தவ அன்பின் உள்ளார்ந்த தத்துவம், முக்கியத்துவம், மற்றும், அதிகாரம் பற்றியதல்ல. மாறாக, “உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” (மத்.20:27) என்பதாகும். குடும்பத்தில், யார் சிறந்த அறிவாளி, அல்லது, யார் மிகுந்த ஆற்றலுள்ளவர் என்ற போட்டியும் ஆதிக்கமும் நிலவினால், அவை அன்பை அழித்துவிடும். “ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், “செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்” (1பேது.5:5) என்ற புனித பேதுருவின் அறிவுரை, குடும்பங்களுக்கும் பொருந்தும் (அன்பின் மகிழ்வு 98)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2021, 14:35