திருத்தந்தையர்- புனித 2ம் யோவான் பவுல், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருத்தந்தையர்- புனித 2ம் யோவான் பவுல், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்  

மகிழ்வின் மந்திரம்: திருமண அன்பு, குடும்பம் பற்றி திருத்தந்தையர்

இணையவரின் உண்மையான அன்பு, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் அன்பில் மட்டுமே முழுமையாகச் சுடர்விடுகின்றது (அன்பின் மகிழ்வு 70)

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ‘அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் மூன்றாம் பிரிவின் இரண்டாவது பகுதியில் (67-70) குடும்பத்தைக் குறித்து 2ம் வத்திக்கான் பொதுச்சங்கமும், திருத்தந்தையர் சிலரும் கூறியுள்ள கருத்துக்களை சுருக்கமாக வழங்கியுள்ளார். இம்மடலின், 69, மற்றும், 70வது பத்திகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவுசெய்துள்ள, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் மற்றும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரின் கருத்துக்கள் இதோ... திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல்

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், மனித அன்பு பற்றிய தன் மறைக்கல்வியுரைகள், Gratissimum sane (பிப்.2,1994) என்ற தலைப்பில் குடும்பங்களுக்கு எழுதிய மடல், சிறப்பாக, Familiaris Consortio (நவ.22,1981) என்ற திருத்தூது அறிவுரை மடல் ஆகியவற்றில் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இவர், இந்த ஏடுகளில், ஆண்களும், பெண்களும் அன்புகூர அழைக்கப்பட்டிருப்பது குறித்த பொதுவான கண்ணோட்டத்தை வழங்கியுள்ளார். குடும்ப மேய்ப்புப்பணிக்கும், சமுதாயத்தில் குடும்பத்தின் பங்கிற்கும் அடிப்படையான வழிகாட்டுதல்களையும் இத்திருத்தந்தை அதில் பரிந்துரைத்துள்ளார். குறிப்பாக, திருமண அன்பு பற்றி அவர் கூறும்போது, இணையவர், ஒருவர் ஒருவர் மீது கொண்டிருக்கும் அன்பில், கிறிஸ்துவின் தூய ஆவியின் கொடை, மற்றும், புனிதத்துவத்திற்கு அவர்கள் அழைக்கப்பட்டிருப்பதை, வாழ்வது எவ்வாறு என்பதை விளக்கியுள்ளார் (அன்பின் மகிழ்வு 69)

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ‘கடவுளே அன்பு’ (Deus Caritas Est) என்ற தன் திருமடலில், ஆண், மற்றும், பெண்ணின் உண்மையான அன்பு பற்றிக் கூறியிருக்கிறார். இந்த அன்பு, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் அன்பில் மட்டுமே முழுமையாகச் சுடர்விடுகின்றது (காண்க.எண் 2). அன்பின் அடிப்படையில் நடைபெறும் திருமணம் மட்டுமே, கடவுளுக்கும், அவரது மக்களுக்கும் இடையேயுள்ள உறவின் அடையாளமாக மாறுகிறது. கடவுள் அன்புகூரும் முறை, மனித அன்பின் அளவுகோல் (11). மேலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ‘உண்மையில் பிறரன்பு’ (Caritas in Veritate) என்ற தன் திருமடலில், சமுதாய வாழ்வின் கொள்கையாக, அன்பின் முக்கியத்துவத்தைச் சிறப்பாக விளக்கியுள்ளார் (காண்க.44). இந்த சமுதாயம், பொதுவான நலனை அனுபவிப்பது குறித்து கற்றுக்கொள்ளும் இடமாகும் என்றும், இத்திருத்தந்தை கூறியுள்ளார். (அன்பின் மகிழ்வு 70)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2021, 10:32