மத தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட Burkina Faso மக்கள் மத தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட Burkina Faso மக்கள்  

மத தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் திருஅவைகளுக்கு உதவி

துயர்களை அடைந்துவரும் அதேவேளை, ஒப்புரவு, குணப்படுத்தல், மற்றும் உதவியின் ஆதாரங்களாக செயலாற்றும் ஆப்ரிக்கத் திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்காவில் மத தீவிரவாதத்தால் உருவாகியுள்ள காயங்களை குணப்படுத்த, புதிய உதவித் திட்டம் ஒன்றை தீட்டி செயல்படுத்தி வருகின்றது, திருப்பீடத்தின், Aid to the Church in Need (ACN) என்ற அமைப்பு.

உலகம் முழுவதும், மதக் காரணங்களுக்காக, கொடுமைகளை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும்,  திருப்பீடத்தின், 'துன்புறும் திருஅவைகளுக்கு உதவி' என்ற இந்த அமைப்பு, இஸ்லாமிய தீவிரவாதத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்ரிக்க தலத்திருஅவைகளுக்கு உதவவும், அமைதியான இணக்க வாழ்வை ஊக்குவிக்கவும் வகுத்துள்ள திட்டங்களுக்கென 95 இலட்சம் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

கடுமையான மத தீவிரவாதத்திற்குப் பலியாகி, மறைச்சாட்களின் கண்டமாக நோக்கப்படும் ஆப்ரிக்காவின் தலத்திருஅவைகள், தாங்களே துயர்களை அடைந்துவரும் அதேவேளை, ஒப்புரவு, குணப்படுத்தல், மற்றும் உதவியின் ஆதாரங்களாகவும் செயலாற்றுகின்றன என்கிறது, ACN என்ற இந்த கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

மத தீவிரவாதத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆப்ரிக்காவின் 12 நாடுகளைக் குறிப்பிட்டுள்ள ACN அமைப்பு, இந்நாடுகளில் மதங்களிடையே உரையாடல்களை ஊக்குவித்தல், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பணியாளர்களை உருவாக்குதல், அச்சம் நிறைந்த சுழல்களில் பணிபுரியும் அருள்பணியாளர்கள், மற்றும் துறவறத்தாருக்கு ஆன்மீகப் பயிற்சியளித்தல், சேதமாக்கப்பட்ட கோவில்களை மீண்டும் கட்டியெழுப்புதல், போன்ற முயற்சிகளில் உதவிவருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2021, 14:49