திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்தில் அருள்சகோதரிகள் திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்தில் அருள்சகோதரிகள் 

நேர்காணல்: 58வது இறையழைத்தல் ஞாயிறு

இறையழைத்தல், கடவுள் கொடுக்கின்ற கொடை. அதை நானாகப் பெறவில்லை. அது அவரால் எனக்குத் தரப்பட்டது - அ.சகோ.சூசை மேரி FSJ

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவையில், உயிர்ப்புக் காலத்தின் நான்காம் ஞாயிறன்று, இறையழைத்தல்களுக்காக இறைவேண்டல் செய்யும் ஞாயிறாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. நல்லாயன் ஞாயிறு எனவும் அழைக்கப்படும் இந்த இறையழைத்தல் ஞாயிறன்று, திருஅவையில், அருள்பணித்துவ மற்றும், துறவு வாழ்வுக்கு, நிறைய இளம் உள்ளங்கள் தங்களையே அர்ப்பணிக்குமாறு, திருஅவை சிறப்பாகச் செபிக்கின்றது. இஞ்ஞாயிறுக்கென்று, திருத்தந்தையர் ஒவ்வோர் ஆண்டும் செய்தி ஒன்றையும் வெளியிட்டு வருகின்றனர். ஏப்ரல் 25, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், இறையழைத்தல் ஞாயிறுக்கென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி, மற்றும், தனது துறவு வாழ்வின் அனுபவம் பற்றி இன்று பகிர்ந்துகொள்கிறார்,  அருள்சகோ.சூசைமேரி. இச்சகோதரி, புனித வளனாரின் பிரான்சிஸ்கு சபையைச் சார்ந்தவர். அச்சபையில், புதிதாக இணைபவர்களை உருவாக்கும் பொறுப்பு, பொது ஆலோசகர், சென்னை மாநிலத் தலைவர் போன்ற பல முக்கிய பொறுப்புக்களை வகித்திருப்பவர், அருள்சகோதரி சூசை மேரி.

நேர்காணல்: 58வது இறையழைத்தல் ஞாயிறு

இறையழைத்தல் ஞாயிறு - சகோ. சூசைமேரி FSJ

வத்திக்கான் வானொலி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். ஏப்ரல் 25-ம் தேதியை இறையழைத்தல் நாளாகக் கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை எல்லாம் அழைத்து, நமது தேவ அழைத்தலை புதுப்பித்துக் கொள்ளத் தூண்டுகிறார். உலகளாவிய திருஅவைக்கும் புனித வளனார் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் 150வது ஆண்டினை நினைவுகூரும் விதமாக, டிசம்பர் 8, 2020 முதல் டிசம்பர் 8, 2021 வரை உள்ள நாட்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித வளனாரின் ஆண்டாக அறிவித்து Patris corde (பாத்ரிஸ் கோர்தே) என்னும் திருமடல் வழியாக “புனித சூசையப்பரின் மீது கொண்ட அன்பை அதிகரிக்கும் விதமாக” இந்த ஆண்டு இருக்க வேண்டும் என்கின்ற அழைப்பை நம் அனைவருக்கும் தருகின்றார். புனித வளனாரைப் பற்றிக் கூறவேண்டுமானால், அவர் ஓர் அசாதாரண மனிதராக நமக்கு காட்சியளிக்கிறார். அதே சமயத்தில் நம் மனித அனுபவத்தில் நம்மோடு மிக நெருக்கமாக இருக்கிறார். அவர் மிகப் பெரியவராகத் தன்னைக் காட்டிக் கொண்டதில்லை. வியத்தகு செயல்களைச் செய்ததில்லை அவருக்கென்று தனிவரம் என்று ஒன்றுமில்லை, அவரை பார்த்த யாரும் அவரிடம் சிறப்பான எதையும் கண்டதில்லை. அவர் புகழ்ச்சிக்குரியவராகக்கூட இருந்ததில்லை. விவிலியத்தில்கூட அவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட இருந்ததில்லை. ஆயினும் அவரது சாதாரண வாழ்க்கையின் மூலம் கடவுளின் பார்வையில் அவர் அசாதாரண செயல்களைச் செய்தார். கடவுள் இதயத்தைப் பார்க்கிறார் (1சாமு 16:7) நம் புனித சூசையப்பர் தன்னிடமிருந்த தந்தையின் இதயத்தைக் கண்டுகொண்டார்; பார்த்தார் அதனால், அவரால் தனது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் தன்னை அர்ப்பணிக்கவும், உருவாக்கவும் முடிந்தது எனலாம். கடவுள் புனித சூசையப்பரைப் போலவே நமது தந்தையர்களிடமும் தாய்மார்களிடமும் அத்தகைய இதயத்தை உருவாக்க ஆசைப்படுகிறார். ஒவ்வொரு நாளும் நம் பெற்றோர்கள் தங்கள் இதயத்தை திறப்பவர்களாகச் சிறந்த முயற்சிகளை எடுக்கக்கூடியவர்களாகத் தாராள மனதோடு பிறருக்குத் தன்னைக் கொடுக்கக் கூடியவர்களாகக், கவலையைப் போக்கக்கூடிய பரிவிரக்கம் கொண்டவர்களாக, நம்பிக்கையைத் தொடர்ந்து வலுப்படுத்தக் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார். இன்றைய குருத்துவ, துறவற வாழ்வில் இத்தகைய குணங்கள், பண்பு நலன்கள் மிகவும் தேவையாக இருக்கின்றன. குறிப்பாக நமது பலவீனத்தில் மட்டுமல்ல நமது துன்பங்களிலும், குறிப்பாக இந்த பெருந்தொற்றுக் காலத்தில் எதிர்காலத்தை பற்றிய நிச்சயமற்ற பயம், அச்சங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. புனித வளனார் இந்தச் சூழ்நிலையில் மெதுவாக மென்மையாக நம்மைச் சந்திக்க வருகிறார். அதுவும் நமது அருகாமையில் வாழக்கூடிய புனிதராக நம்மைச் சந்திக்க வருகிறார். அதே நேரத்தில் அவரது வலுவான சாட்சிய வாழ்வின் வழியாக நம் வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு வழிகாட்டுகிறார். புனித வளனார் ஒவ்வொருவரின் அழைப்பிற்கும் மூன்று வார்த்தைகளைத் திறவு கோல்களாகக் கொடுக்கிறார். அவைகள்: (1) கனவு காண்பது (dream), (2) பணி செய்வது (service), அந்தக் கனவை நனவாக்கும் பொழுது அதற்கான சரியான வழிகளைத் தெரிவு செய்து நமது செயல்கள் வழியாக அக்கனவை நிறைவேற்றுவது (3) கடவுளுடைய அழைத்தலுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பது (fidelity).

உதாரணமாக பொழுதுபோக்கு, பணம், வெற்றி, புகழ் இவையெல்லாம் வாழ்வில் நிறைவைக் கொடுப்பதில்லை என்கிறார் திருத்தந்தை அவர்கள். நாமும் அதை ஏற்றுக் கொள்வோம் இல்லையா? நமது புனித வளனாரும் கடவுளால் அழைக்கப்பட்டார். நான்கு விதமான கனவுகளைக் கண்டார். ஒன்று மத்தேயு 1:20, மத்தேயு 2:13, மத்தேயு 19:22, இந்தக் கனவுகள் அனைத்தும் நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளாக இல்லை. ஆனால் புனித சூசையப்பர், ஒவ்வொரு திட்டத்திலும் அவரையே மாற்றிக் கொண்டு, எதிர் வந்த ஆபத்துகளை மேற் கொண்டு தியாகம் செய்து கடவுளுடைய வியத்தகு திட்டத்தை நிறைவேற்றினார். நான்கு கனவுகளில் முதலாவது கனவு, மரியாவை ஏற்றுக் கொண்டதனால் மீட்பருக்குத் (இயேசுவுக்கு) தந்தையாக மாறியது, இரண்டாவது, கனவில் எச்சரிக்கப்பட்டதனால் எகிப்திற்கு தப்பித்துச் செல்லுதல், எனவேதான் நாம் அவரைக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பாளராகப் பார்க்கின்றோம். மூன்றாவது, சொந்த ஊருக்குக் குழந்தையையும், தாயையையும் கூட்டிக்கொண்டு செல்லப் பணித்ததனால், அதை நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட்டது, நான்காவது அவரது சொந்த திட்டத்தை இறைவன் மாற்றியமைத்த பொழுதும், அதை ஏற்றுக்கொண்டு குழந்தை இயேசுவையும், மரியாளையும் நாசரேத்துக்கு மீண்டும் கூட்டிவந்தது. அங்குதான் இயேசு கடவுளின் இறையரசைப் பற்றி எடுத்துரைக்கத் தனது பணி வாழ்வைத் தொடங்குகின்றார். இதிலிருந்து கடவுளின் திட்டத்தை நிறைவேற்றத் துணிந்தவராக இருந்து, புனித வளனார் எவ்வாறு நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். கண்ணுக்குப் புலப்படாத சவால்களை வாழ்வில் ஏற்கவில்லை என்றால் விசுவாசம் என்பது இல்லாமல் போய்விடும். ஆகவே இவ்வுலக வசதிகள், நமது தனிப்பட்ட திட்டங்கள் இவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் கடவுளின் வார்த்தைக்கு “ஆம்” என்று சொல்லும்பொழுதுதான் நல்ல கனி கொடுக்கக் கூடியவர்களாகவும், பெரிய பெரிய செயல்களைச் செய்யக் கூடியவர்களாகவும் நாம் மாற முடியும். அத்தகையதொரு வாழ்வை வாழ்வதில் கடவுளின் பணியைச் செய்ய அழைக்கப்பட்ட நம் அனைவருக்கும் புனித சூசையப்பர் ஒரு முன்மாதிரியாக இருக்கின்றார் என்பதே இறையழைத்தல் நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நமக்குத் தரும் செய்தியாக அமைகின்றது.

துறவு வாழ்வு அனுபவம்

குடும்பமே கோவிலான எங்கள் வீட்டில் பெண் குழந்தைகளாகிய எங்கள் மீது அக்கறையும் பாசமும் காட்டி, இவ்வுலக அறிவை பெறச் செய்தவர் என் தந்தை. பகிர்தல், பக்தி, ஒற்றுமையைச் சொல்லித் தந்தவர். கடின உழைப்பாளி, அலுவலகம் சென்று வந்த பிறகும் ஒய்வு நேரங்களில் ஒய்வு நாட்களில் தோட்டத்தை வளர்த்தெடுப்பதிலும், இயற்கையைப் பேணிக்காப்பதிலும் ஈடுபாடு காட்டியவர். எங்களையும் அதில் ஈடுபடச் செய்தவர். என் தாய் எளிமையான, சாதாரணமான, பொறுமையான நல்லதொரு உழைப்பாளி. தந்தையோடு, காலச்சூழலுக்கேற்ப தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மகிழ்வோடும், நிறைவோடும் வாழ்ந்தவர், முடிவெடுப்பதில் துணிச்சல் கொண்டவர். இத்தகைய பண்பு நலன்கள் தான் இன்றளவும் எனக்குப் பக்கபலமாகவும், மன உறுதியோடு உழைப்பதற்கும், எனது வாழ்வில் மகிழச்சியோடு நிலைத்திருப்பதற்கும் உதவியாக இருக்கிறது என்பதை எண்ணி மகிழ்ந்து என் அழைத்தலை உங்களுடன் மனநிறைவுடன் பகிர்கிறேன். எனது வயது 2 முதல் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் வரை பொள்ளாச்சியில் என் பெரியம்மா வீட்டில் வளர்ந்தேன் அதன் பிறகுதான் என் குடும்பத்தோடு இணைந்து வளர்ந்தேன். இந்த 2 பிரிவுகளும் என் வாழ்க்கையில், துறவற வாழ்க்கையை மேற்கொள்ள மிகவும் உறுதுணையாக இருந்தது என்று சொல்லலாம். 1960-களில் ஒரு பெண் பிள்ளையைத் தனியாக வெளியே அனுப்புவது கேள்விக்குறியே. அன்றையச் சூழலில் பனியிலும், மழையிலும், வெயிலிலும், 3 லிருந்து 4 கிலோமீட்டர் நடந்து சென்று திருப்பலி காண்பதை நான் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகக் கருதினேன். இதற்கு காரணமாக இருந்தவர்கள் எங்கள் பங்குத் தந்தையர்கள் பிரான்ஸ் தேசத்தைச் சார்ந்த M.E.P. Fr. Paul Verinaud, Fr. Oliviar ஆவர். அவர்கள் கொடுத்த உற்சாகமும், ஊக்கமும், அதே நேரத்தில் எமது பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கையும், என்னை விசுவாசத்தில் வளர்த்திட அவர்கள் எடுத்த முயற்சியும், அவர்கள் அளித்த ஊக்கமுமே என் அழைத்தலுக்கு முதல் படியாக அமைந்தது. எனக்கு இறையழைத்தலானது, தன்னுடைய குருத்துவ பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த உறவுக்கார சகோதரர் மற்றும் அருட்சகோதரியான எனது அத்தை மகள் வழியாகக் கிடைத்தது. நான் இவ்வாழ்வைத் தேர்ந்தபொழுது எனது தந்தைக்கு அதில் விருப்பமில்லை. என் தாயோ கடவுளின் அழைப்பைத் தடுக்கக்கூடாது என்று கூறி, எனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது அவர், கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கக் கூடாது’’ என்றார். அன்று என் தந்தை சொன்ன அவ்வார்த்தைகள் இன்றும் எனக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகின்றன. எனது துறவறப் பயிற்சியில் நான் புடமிடப்பட்டேன். பயிற்சி நிலையில் பல்வேறு இடர்ப்பாடுகளையும், சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது. எல்லாச் சூழ்நிலையிலும் என்

தந்தையின் வார்த்தை எனக்கு வலிமை அளித்தது. அதையே வாழ்வாக்கிட இன்று வரை

முயற்சிக்கிறேன். துறவற அர்ப்பணத்துக்குப் பிறகு எனது படிப்புக்குத் தடை வந்தது, தடைகளை மீறி படித்து அரசு ஊழியராகும் வாய்ப்பு கிடைத்து. ஒரு வருட ஊதியமும் பெற்றேன். அதன் பிறகு நவக்கன்னியர்களைப் பயிற்றுவிக்கும் பணி. மூன்று ஆண்டுகள் இறையியல் பயிற்சியினை கோவாவில் பெற்றேன். அதன் பிறகு ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் நவக்கன்னியர் இல்லப்பொறுப்பினையேற்று நவக்கன்னியர்களை உருவாக்கும் பொறுப்பினை அளித்தார் கடவுள். சபை பொறுப்பாளர்களின் அழைப்புகக்கு எப்போதும் செவிமடுத்து ‘ஆம்’ என்று சொன்னதால், வாழ்வின் பல்வேறு உயர்படி நிலைகளைக் காண முடிந்தது. சபையின் பொது ஆலோசகராக, பொதுச் செயலராக, புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை மாநிலத்திற்கு முதல் மாநிலத் தலைவியாகப் பணிபுரிய கடவுள் அருள் பாலித்தார். எங்கெல்லாம் புதிய பள்ளி மற்றும், நிறுவனங்கள் முதன்முதலாகத் துவங்குகிறார்களோ அங்கெல்லாம் சென்று அந்த இடத்தை வளர்த்தெடுக்கக் கூடிய வாய்ப்புகளை எல்லாம் இறைவன் எனக்குக் கொடுத்தார். இவற்றை எல்லாம் மகிழ்ச்சியோடு செய்ய முடிந்தது என்றால், அது நிச்சயமாக கடவுளின் வியத்தகு செயலே. இத்தகைய பதவிகளும், பலவித பொறுப்பும், புகழும் வந்து சேர்ந்தாலும் ஆத்மார்த்தமாக என்னுள், என் இதயத்துள் வாழ்கின்ற இறைவனைப் போற்றுவதும், புகழ்வதுமே எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதி, கிடைக்கின்ற எல்லா நேரத்திலும் அவர் நினைவில் நிலைத்திருக்க முயற்சிக்கின்றேன். ஆம், அழைத்தல் கடவுள் கொடுக்கின்ற கொடை. அதை நானாகப் பெறவில்லை. அது கடவுளால் எனக்குத் தரப்பட்டது.

இறைத் தந்தையின் அழைப்பு

திவ்ய நற்கருணை நாதரின் மீது கொண்ட ஆவல்

தூய ஆவியின் தூண்டுதல் -

அன்னை மரியின் முன் மாதிரி-

புனித வளனாரின் உடன் இருப்பு-

எனது அழைத்தல் வாழ்வுக்கு உரம் ஊட்டுகிறது. (அ.சகோ.சூசை மேரி, புனித வளனாரின் பிரான்சிஸ்கு சபை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2021, 11:32