இந்தியாவின் கார்வாரில் புனித வாரம் இந்தியாவின் கார்வாரில் புனித வாரம் 

வாரம் ஓர் அலசல்: மூன்று புனித நாள்களுக்கு ஒரு முன்தயாரிப்பு

யாராவது நம்மை மனம்நோகச்செய்திருந்தால் அதை மணலில் எழுதிவிடவேண்டும். ஏனென்றால் மன்னிப்பு எனும் காற்று அதனை அழித்துவிடும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகெங்கும் கிறிஸ்தவர்கள், மார்ச் 28, இஞ்ஞாயிறன்று புனித வாரத்தைத் துவக்கியுள்ளனர். ஆண்டவரின் பாடுகள் குருத்தோலை ஞாயிறன்று தொடங்கியுள்ள இப்புனித வாரம், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவோடு நிறைவடைகின்றது. இந்த புனித வாரம், இயேசுவின் பாஸ்கா பேருண்மையைச் சிந்தித்து தியானித்து, நம் வாழ்வு மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது. இறைவார்த்தையைத் தியானித்து இயேசுவோடு ஆழ்ந்த உறவில் வளரவும், திருநற்கருணையில் அவரோடு வாழவும், திருச்சிலுவைக்கு அருகில் நின்று அவரோடு ஒன்றித்திருப்பதில் ஊக்கம்பெறவும் இப்புனித வாரம் அழைப்பு விடுக்கின்றது. இவ்வாரத்தில், கிறிஸ்தவர்கள், நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் பாடுகள், மரணம் மற்றும், உயிர்ப்புப் பற்றிய பகுதிகளை வாசித்து தியானிக்கவும், நம் முறிந்த உறவுகளைச் சரிசெய்யவும், குறிப்பாக, நம் உறவுநிலை எவரோடு சரியில்லை என உணர்கின்றோமோ, அவர்களுக்காகச் இறைவேண்டல் செய்யவும், அவர்களுக்கு நம் மன்னிப்பு மற்றும், ஆண்டவரின் நன்மைத்தனத்தை வழங்கவும், கிறிஸ்தவ வாழ்வில் மேலும் வளர்வதற்குத் தேவையான நற்பண்புகளைப் பேணவும், நம்மிடமிருக்கின்ற தவறான பழக்கவழக்கங்களைத் தவிர்த்து வாழவும் இப்புனித வாரத்தில் தாய்த்திருஅவை கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. சேலம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு சிங்கராயன் அவர்கள், இப்புனித வாரத்தில் நாம் வாழவேண்டியமுறை பற்றி இன்றைய நிகழ்ச்சி வழியாக எடுத்துரைக்கிறார்.

மூன்று புனித நாள்களுக்கு ஒரு முன்தயாரிப்பு – ஆயர் சிங்கராயன்

யாராவது நம்மை மனம்நோகச்செய்திருந்தால் அதை மணலில் எழுதிவிடவேண்டும். ஏனென்றால்  மன்னிப்பு எனும் காற்று அதனை அழித்துவிடும். மாறாக, யாராவது நமக்கு நன்மை செய்தால் அதைக் கல்லில் எழுதிவிடவேண்டும். ஏனென்றால் அது எப்போதும் மனதிலிருந்து அழியாது. எனவே, கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, அனைவருமே, இப்புனித நாள்களில் முறிந்துபோன உறவுகளைச் சரிசெய்வது, உடலுக்கும் உள்ளத்திற்கும் எப்போதுமே நலமளிக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2021, 14:21