வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே நிகழ்ந்த போர் - 1951 வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே நிகழ்ந்த போர் - 1951 

கொரியா நாடுகள் ஒன்றிணைய உயிர்த்த கிறிஸ்துவிடம் வேண்டுதல்

1950ம் ஆண்டு முதல், 1953ம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போர், இரண்டு உலகப் போர்களுக்குப்பின், வரலாற்றில் இடம்பெற்ற, அதிகமான இரத்தத்தைச் சிந்திய போர்களில் ஒன்றாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வட மற்றும், தென் கொரிய நாடுகள் ஒன்றிணைவதற்கும், அந்நாடுகளில் அமைதி நிலவுவதற்கும், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று, சிறப்பாக இறைவேண்டல்கள் செய்யுமாறு, கொரிய கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை, கொரிய கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொரியா, ஜப்பானின் காலனி ஆட்சியிலிருந்து விடுதலையடைந்ததன் 76வது ஆண்டு நிறைவு, வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பிக்கப்படுவதையொட்டி, இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ள கொரிய கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை, கொரியப் போரினால் பிளவுண்டிருக்கும் கொரிய தீபகற்பம், மீண்டும் ஒன்றிணைவதற்குச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இரு கொரிய நாடுகளுக்கிடையே ஒப்புரவு, போரின்மை, பரிமாற்றம், மற்றும், ஒத்துழைப்பு ஆகியவை  செயல்படுத்தப்படவேண்டும் என்பது பற்றி, 1991ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்புந்தத்திற்கு, இவ்விரு கொரிய நாட்டினரும் தொடர்ந்து உயிர்கொடுக்குமாறு, உயிர்த்த ஆண்டவரிடம் மன்றாடுமாறும், அந்த அவை கூறியுள்ளது.

நீண்டகாலமாக பிரிந்து வாழ்கின்ற, வட மற்றும், தென் கொரிய நாடுகள், மீண்டும் ஒன்றிணையவும், கொரிய தீபகற்பம், மற்றும், உலகமனைத்தின் வருங்கால அமைதிக்காகவும், நம் மத்தியில் வாழ்கின்ற உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் பெயரில் வேண்டுமாறும், அக்கிறிஸ்தவ அவை கூறியுள்ளது.

1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போர், இரண்டு உலகப் போர்களுக்குப்பின், வரலாற்றில் இடம்பெற்ற அதிகமான இரத்தத்தைச் சிந்திய போர்களில் ஒன்றாகும். மூன்று ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில், தென் கொரிய குடிமக்கள் ஏறத்தாழ 14 இலட்சம், தென் கொரியப் படைவீரர்கள் 2,25,784, வட கொரியப் படைவீரர்கள் மற்றும், சீனத் தன்னார்வலர்கள் ஐந்து இலட்சம், அமெரிக்கப் படைவீரர்கள் 33,629, இன்னும், அப்போரில், ஐ.நா.வின் தலைமையின்கீழ் இணைந்த 15 நாடுகளின் படைவீரர்கள் 3,143 என, இலட்சக்கணக்கில் உயிரிழப்புகள் இடம்பெற்றன என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது. 1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி முடிவுற்ற இப்போருக்குப் பின்னர், கொரிய தீபகற்பம், வட மற்றும், தென் கொரிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

இவ்விரு நாடுகளும் ஒன்றிணைய வேண்டுமென்று, தென் கொரிய கத்தோலிக்கத் திருஅவை, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செபித்துவருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2021, 13:47