மியான்மாரில் பதட்டநிலை மியான்மாரில் பதட்டநிலை  

மியான்மாரில் பதட்டநிலை முடிவதற்கு செபங்கள், நோன்பு

இரத்தம் சிந்துதல் வழியாக பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது - கர்தினால் சார்லஸ் போ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பின் வழியாக, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அந்நாட்டு இராணுவத்திற்கு எதிராக, கடந்த பிப்ரவரி முதல் தேதியிலிருந்து இடம்பெற்றுவரும் பதட்டநிலைகள் முடிவுக்கு வரவேண்டும் என்று, அந்நாட்டு கத்தோலிக்கர், தொடர்ந்து இறைவனை மன்றாடி வருகின்றனர்.

அமைதியான முறையில் எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டுவரும், அப்பாவி மக்கள் மீது இராணுவம் நடத்திவரும் இரத்தம் சிந்தும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என்று, செபமாலை, உண்ணை நோன்பு, திருநற்கருணை ஆராதனை போன்ற பக்திமுயற்சிகளில், கத்தோலிக்கர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மியான்மாரில், மார்ச் 21, இஞ்ஞாயிறு, காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை, அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், வேதியர்கள், பொதுநிலை விசுவாசிகள் என அனைவரும், உண்ணா நோன்பு, மற்றும், இறைவேண்டல்களில் ஈடுபட்டனர்.

மியான்மாரில் அமைதி நிலவவேண்டும் என்பதற்காக, இம்மாதம் முதல் தேதியிலிருந்து,  ஒவ்வொரு வியாழனன்றும் திருநற்கருணை ஆராதனை பக்திமுயற்சியையும், ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் செபமாலை பக்திமுயற்சியையும் Lashio மறைமாவட்டம் மேற்கொண்டு வருகிறது.  

மேலும், மார்ச் 20, இச்சனிக்கிழமையன்று, யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இரத்தம் சிந்துதல் வழியாக பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றும், அமைதியை ஏற்படுத்தும் வழிகளைத் தேடுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2021, 15:58