புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 

டெல்லியில் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை

இந்தியத் தலைநகரில் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக, வேறு மாநிலத்திலிருந்து வந்து பணிபுரியும் பூர்வீக குடிமக்களின் நிலைகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது இந்திய திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியத் தலைநகர் புது டெல்லியில் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் சீர்குலைந்த நிலையில் உள்ளதாக, அண்மையில் இந்தியத் திருஅவையால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தலைநகரில் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக, வேறு மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியும் பூர்வீக குடிமக்களின் நிலைகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்திய இந்திய திருஅவையின் புலம்பெயர்ந்த தொழிலாளர் அமைப்பு, இம்மக்கள் போதிய வருமானமின்றியும், போதிய பணியிடப் பாதுகாப்பு இன்றியும், மிகவும் ஏழ்மையில் வாடுவதாகத் தெரிவித்துள்ளது.

'டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ள பூர்வீக இனத்தவர்: கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னும் பின்னும்', என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்திய ஆயர்களின் அறிக்கையில், மக்களின் புலம்பெயர்தலுக்கு பின்புலத்திலிருக்கும் காரணங்கள், இவர்களின் இன்றையநிலை, அரசு, மற்றும், அரசு-சாரா அமைப்புக்களின் கடமை ஆகியவை ஆராயப்பட்டு, அது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வறுமை, மற்றும், பிறரால் எளிதில் ஏமாற்றப்படும் நிலை ஆகியவற்றால் துன்புறும் புலம்பெயர்ந்த பூர்வீக இனத்தவரை எவ்வழிகளில் மேம்படுத்தலாம், மற்றும் அவர்களுக்கு உதவலாமென்பது குறித்த ஆலோசனைகளை, அரசுக்கும், அரசு-சாரா அமைப்புகளுக்கும் முன்வைத்துள்ளது, இந்தியத் திருஅவையின் அறிக்கை.

புது டெல்லியில் புலம் பெயர்ந்தவர்களாக கட்டடப் பணியில் ஈடுபட்டிருக்கும் பூர்வீக குடியினருள், 91 விழுக்காட்டினர் 50 வயதிற்கு கீழ்ப்பட்டவர் எனவும், மொத்த கட்டடத் தொழிலாளர்களில், 93.3 விழுக்காட்டினர், ஆண்கள் எனவும், பெரும்பான்மையினர், இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் எனவும் தெரிவிக்கிறது, ஆயர்களின் அறிக்கை.

டெல்லியில் புலம்பெயர்ந்தவர்களாக வாழும் தொழிலாளர்களுள், 51 விழுக்காட்டினர் இராஜஸ்தானைச் சேர்ந்தவர்களெனவும், 19 விழுக்காட்டினர் மேற்கு வங்கம், 9 விழுக்காட்டினர், அஸ்ஸாம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகியவைகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறும் இந்த ஆய்வறிக்கை, இந்த மக்கள் குடிபெயர்ந்துள்ளதற்கு காரணம், கல்வியின்மை, ஏழ்மை, சொந்த இடங்களில் குறைந்த கூலியுடைய வருமானம் ஆகியவையே என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2021, 15:34