எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; ...என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும் - திருப்பாடல் 4:1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; ...என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும் - திருப்பாடல் 4:1 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 4 - மாலை மன்றாட்டு

4ம் திருப்பாடல், 'மாலை மன்றாட்டு' என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும், இப்பாடலின் வரிகள், இறைவனிடம் தாவீது எழுப்பும் இறைவேண்டலாகவும், மனிதர்களிடம் அவர் பேசும் சொற்களாகவும் அமைந்துள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மார்ச் 22, இத்திங்களன்று, இந்திய தேசியப் புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றம், அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள் சார்பில் விடுக்கப்பட்டிருந்த பிணையல் மனுவை, மீண்டும் ஒருமுறை நிராகரித்துள்ளது. 84 வயதான அருள்பணி ஸ்டான் அவர்கள், வயது முதிர்ச்சியாலும், பல்வேறு நோய்களாலும் துன்புறுகிறார் என்ற காரணங்களால், மனிதாபிமான அடிப்படையில், அவரை, பிணையலில் விடுவிக்கவேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கையை, இந்த சிறப்பு நீதிமன்றம், இதுவரை, பலமுறை நிராகரித்துவிட்டது.

பழங்குடியினரின் நில உரிமைகளுக்காகப் போராடிவந்த ஒரே காரணத்திற்காக, இந்திய நடுவண் அரசு, அவர் மீது, பொய்யான, அநீதியான குற்றங்களைச் சுமத்தி, அவரை, மும்பையிலுள்ள டலோஜா சிறையில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக (2020, அக்டோபர் 9ம் தேதி முதல்) அடைத்துள்ளது. முதிர்ந்த வயது, நோய் ஆகிய உடல் சார்ந்த துன்பங்களுக்கு மேல், இந்திய நடுவண் அரசு, இரக்கற்ற முறையில் அவர் மீது சுமத்தியுள்ள சிறைத்தண்டனை, பெரும் கொடுமை. இத்துன்பங்களைத் தாங்கும் சக்தியை, இறைவன், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு வழங்கவேண்டும், என்ற உருக்கமான வேண்டுதலுடன், இன்றைய விவிலியத் தேடலை துவங்குகிறோம்.

துன்பங்கள் நம் உள்ளங்களை புண்படுத்தும், அல்லது, பண்படுத்தும். அருள்பணி ஸ்டான் அவர்கள், சிறையிலிருந்து இதுவரை பகிர்ந்துகொண்ட எண்ணங்கள், துன்பங்களால் பண்படுத்தப்பட்ட மனதிலிருந்து வெளிவந்த எண்ணங்கள் என்பதில் ஐயமில்லை. தன் உடல்நலக் குறைவு, தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, ஆகியவற்றைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல், தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏனையக் கைதிகளை மையப்படுத்தி, அவர் தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளார். “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்று அவ்வையார் கூறிய சொற்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, அருள்பணி ஸ்டான் அவர்கள் விளங்குகிறார்.

தன் துன்பத்தையும் தாண்டி மனஉறுதியுடன் வாழும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைப்பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், மன்னன் தாவீதிடம் காணப்பட்ட இத்தகையப் பண்பை வெளிப்படுத்தும் 4ம் திருப்பாடலில் நாம் விவிலியத்தேடலை மேற்கொண்டிருப்பதை, இறைவன் வழங்கிய வரமாக நாம் கருதலாம்.

மனிதராயப் பிறந்த நாம் அனைவரும் துன்பங்களைச் சந்திக்கிறோம். இதை, கடுமையான தண்டனையாகக் கருதுவோர், குறைகூறியே தங்கள் வாழ்வைக் கழிக்கவேண்டியிருக்கும். இதற்கு மாறாக, நம்மை அடையும் துன்பங்களை, கல்விக்கூடமாகக் காண்போர், இப்பள்ளியில், உன்னதமான உண்மைகளைக் கற்றுக்கொள்ளக்கூடும். நம் ஒவ்வொருவரையும் வந்தடையும் துயரங்கள், ஒரே வடிவிலும், அளவிலும் வந்தாலும், அவற்றை எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பதைப் பொருத்து, பின்விளைவுகள் இருக்கும். ஓர் உருவகத்தின் வழியே இதைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

கண்ணாடி, பஞ்சு, தோல், உலோகம் என்று, நான்கு வகை பொருள்களை எண்ணிப்பார்ப்போம். இந்த நான்கு பொருள்களையும் ஒரு சுத்தியல் கொண்டு அடிக்கும்போது, கண்ணாடி, நொறுங்கிப்போகிறது; பஞ்சு, அதே அடியால் மிருதுவாகிறது; தோல், வளைந்துகொடுக்கும் தன்மைபெறுகிறது; உலோகம், கடினமாகிறது. விழும் அடி ஒன்றுதான் என்றாலும், அதன் விளைவுகள் வெவ்வேறு வகையில் அமைகின்றன. துன்பம், அல்லது, பிரச்சனை என்ற சுத்தியல், நம் வாழ்வைத் தாக்கும்போது, நம் மனங்கள் கண்ணாடியா, பஞ்சா, தோலா, அல்லது, உலோகமா என்பதைப் பொருத்து, பின்விளைவுகள் இருக்கும்.

கண்ணாடிபோல நம் உள்ளங்கள் நொறுங்கிவிடக்கூடாது என்பதே, நம் அனைவரின் விருப்பம். எனவே, நம் பிரச்சனைகளுக்கு, போராட்டங்களுக்கு, தீர்வுகாண, பல வழிகளை நாம் மேற்கொள்கிறோம். நம் பிரச்சனை, துன்பம் இவற்றை, தனியே அமர்ந்து சிந்தித்து, தீர்வுகாண முயல்கிறோம். பல வேளைகளில், நம் பிரச்சனை, துன்பம் இவற்றின் பாரத்தால், தெளிவாகச் சிந்திக்க இயலாதபோது, அடுத்தவர் உதவியை, குறிப்பாக, நம் உறவுகள், மற்றும் நண்பர்கள் ஆகியோரின் உதவியை நாடி, தீர்வுகாண முயல்கிறோம். அனைத்திற்கும் மேலாக, நமக்குத் தீர்வு தருவதற்கு, இறைவனை நாடுகிறோம்.

தன் துன்பங்களுக்குத் தீர்வுகாண, இறைவனை நாடிவந்த தாவீதை, நாம், இன்று, 4ம் திருப்பாடலில் சந்திக்கிறோம். தன்னைக் கொல்லவிழைந்த மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடியபோது அவர் பாடிய பாடலாக, பதிவு செய்யப்பட்டுள்ள 3ம் திருப்பாடல், ‘காலை மன்றாட்டு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இடம்பெறும் 4ம் திருப்பாடல், 'மாலை மன்றாட்டு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு மன்றாட்டுக்களையும், தாவீது, ஒரே காலக்கட்டத்தில் உருவாக்கினாரா என்பது தெளிவில்லை. இருப்பினும், இவ்விரு பாடல்களிலும் பதிவாகியுள்ள எண்ணங்கள் ஒத்தமைந்து செல்கின்றன. தான் அடையும் துன்பங்களைக் கூறும் தாவீது, அதே நேரம், தான் இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் பறைசாற்றியுள்ளார்.

4ம் திருப்பாடல், 'மாலை மன்றாட்டு' என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும், இப்பாடலின் வரிகள், இறைவனிடம் தாவீது எழுப்பும் இறைவேண்டலாகவும், மனிதர்களிடம் அவர் பேசும் சொற்களாகவும் அமைந்துள்ளன.

எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும் (தி.பா. 4:1) என்று தன் மன்றாட்டைத் துவங்கும் தாவீது, தொடர்ந்து, அடுத்த சில இறைவாக்கியங்களில், தன்னை வதைத்துவரும் மனிதர்களுக்கு சவால்விடும் வண்ணம், அல்லது, அவர்களுக்கு அறிவுரை வழங்கும் வண்ணம், தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்:

மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டுவருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச்செல்வீர்கள்? ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்; — இதை அறிந்துகொள்ளுங்கள். (தி.பா. 4:2-3)

எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? என்று தாவீது அன்று எழுப்பிய கேள்வி, மனசாட்சியை விற்றுவிட்டு வாழும் பலரை நோக்கி இன்றும் எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது. அத்துடன், தன் அன்பனாக இறைவன் தன்னை தேர்ந்துள்ளதால், தனக்கு துன்பம் விளைவிக்க நினைப்பவர்களால் எதுவும் செய்யமுடியாது என்பதையும், தாவீது, தெளிவாகக் கூறியுள்ளார்.

தாவீது பறைசாற்றும் இந்த நம்பிக்கைச் சொற்கள், "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?... கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்?" (உரோமையர் 8:31,35) என்று திருத்தூதரான புனித பவுல் கூறிய சொற்களுக்கு இணையாக ஒலிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, தாவீது, தன்னை இழிவுபடுத்துவோருக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார். இந்த அறிவுரை, இன்று, குறிப்பாக, மீண்டும் பொருளுள்ள வகையில் ஓங்கி ஒலிக்கிறது. அநீதியாகப் பழிசுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையிலும் பிணையல் வழங்க மறுத்துவரும் நீதிபதிக்கும், அவரைத் தங்கள் கைப்பாவையாக ஆட்டிப்படைக்கும் இந்திய நடுவண் அரசின் தலைவர்களுக்கும், தாவீது வழங்கும் இந்த அறிவுரை, மிகவும் தேவையான ஒன்றாக ஒலிக்கிறது: சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். (தி.பா. 4:4) என்பதே, தாவீது கூறும் அந்த முக்கியமான அறிவுரை.

ஒவ்வொருநாளும் உறங்கச் செல்லும்போது, மன அமைதி பெறுவது மிக, மிக அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். அவ்வாறு அமைதியடைவதற்குத் தடையாக நம் உள்ளத்தில் நிறைத்திருக்கும் எதிர்மறை உணர்வுகளை, குறிப்பாக, சினத்தைக் களைவது, எத்தனையோ பிரச்சனைகளைத் தீர்க்கும். நம் உடல் உறங்கச்செல்லும் வேளையில், நம் மனசாட்சி நம்மை உறங்கவிடாமல் செய்தால், உடல்நலனை இழந்து, துன்புறுவோம்.

சிறையில் இருக்கவேண்டிய பலர், சுதந்திரமாக சுற்றித்திரிந்துவரும் வேளையில், அருள்பணி ஸ்டான் சுவாமி போன்ற நல்லவர்களை சிறையில் அடைத்துவிட்டதால், தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிவிட்டதாக எண்ணும் இந்திய அரசியல் தலைவர்கள், எவ்வகையான மனசாட்சியுடன் உறங்கச் செல்கிறார்கள் என்பதை சிந்திக்கவேண்டும். இவர்களில் பலர், உறங்கச்செல்லும் வேளையில், விழித்துக்கொள்ளும் அவர்களது மனசாட்சியை மௌனமாக்க, தூக்க மாத்திரைகள், மதுபானங்கள், போதைப்பொருள்கள் ஆகியவற்றை நாடவேண்டியிருக்கும்.

"சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள்" என்று தாவீது வழங்கும் அறிவுரை, "சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்" (எபே. 4:26) என்று திருத்தூதரான புனித பவுல் வழங்கும் அறிவுரையை, நினைவுறுத்துகிறது. இந்த அறிவரைகள், நம் அரசியல் தலைவர்களை சென்றடையவேண்டும் என்றும், அவர்கள், தங்கள் மனசாட்சியின் குரலுக்கு செவிமடுக்கவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

அதிகாரம், செல்வம் என்ற பொய் தெய்வங்களுக்காக நலமான பலவற்றை இழந்து தவிக்கும் இவர்களை எண்ணி, தாவீது கூறும் அடுத்த வரி இவ்வாறு ஒலிக்கிறது: ‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?” எனக் கேட்பவர் பலர். (தி.பா. 4:6)

இவ்விதம் தவிப்போருக்கும் சேர்த்து, மன்னன் தாவீது இறைவனிடம் எழுப்பும் வேண்டுதல் அழகானது: ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர். (தி.பா. 4:6-7)

இறுதியாக, துன்பங்கள் தன்னைச் சூழ்ந்தாலும், ஆண்டவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை தன்னை அமைதியாக உறங்கச்செய்யும் என்று, 3ம் திருப்பாடலில் தாவீது கூறிய சொற்களுக்கு (காண். தி.பா.3:5-6) இணையாக, 4ம் திருப்பாடலின் இறுதி இறைவாக்கியம் அமைந்துள்ளது: இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். (தி.பா. 4:8)

மன்னன் தாவீது எழுப்பிய இந்த 'மாலை மன்றாட்டின்' வழியே, அவர் உணர்ந்த மன அமைதி, டலோஜா சிறையில் உடல்நலம் குன்றிய நிலையில் துன்புறும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களையும் நிரப்பவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம். தங்கள் மனசாட்சியை மௌனமாக்கி, மதியிழந்து, ஆணவத்துடன் அலையும் இந்தியத் தலைவர்கள், தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டுமென உருக்கமாக மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2021, 15:02