தாய், தந்தை, குழந்தை என்ற அடிப்படையில் அமைந்த குடும்பம் தாய், தந்தை, குழந்தை என்ற அடிப்படையில் அமைந்த குடும்பம் 

மகிழ்வின் மந்திரம் : படைப்பவரை மாற்றமுயலும் பாவம்

படைப்பவரை ஒதுக்கிவிட்டு, மற்றொன்றை புகுத்த முயலும் பாவத்தில் நாம் விழாதிருப்போமாக. நாம் படைக்கப்பட்டவர்களே தவிர, அனைத்து வல்லமையும் கொண்டவர்கள் அல்ல.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு சவால்களைப்பற்றி தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றில், ஆண்-பெண் என்ற பாலின வேறுபாட்டை, மறுப்பதற்கும், பல்வேறு வழிகளில் திரித்துச் சொல்வதற்கும் முயலும் இவ்வுலகின் கருத்தியல்கள், குடும்ப வாழ்வில் உருவாக்கும் சவால்களைக் குறித்து 56ம் பத்தியில், இவ்வாறு விளக்குகிறார்:

பாலின வேறுபாடு என்ற கருத்தியலின் பல்வேறு வடிவங்களால் மற்றுமொரு சவால் முன்வைக்கப்படுகிறது. ஆண் மற்றும் பெண்ணின் இயல்பில் உள்ள வேறுபாட்டையும், அவ்விருவரும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதையும் மறுப்பது, குடும்பத்தின் அடித்தளமான மனிதவியலை நீக்குகிறது. இத்தகையக் கருத்தியல், கல்வி வழியாகவும், சட்டங்கள் வழியாகவும் சமுதாயத்தில் புகுத்தப்படுகிறது. ஆண்-பெண் உயிரியல் வேறுபாட்டிலிருந்து பிரிக்கப்பட்ட, தனிமனித அடையாளமும், உணர்வுப்பூர்வமான நெருக்கமும் வளர்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, மனித அடையாளம், தனிப்பட்டவரின் தெரிவாக மாறுவதோடு, அது, காலப்போக்கில் மாறக்கூடியது என்றும் கருதப்படுகிறது. இத்தகையக் கருத்தியல்கள், மாற்றமுடியாதவை என்றும், அவை கேள்விக்கு உட்படுத்தப்படமுடியாதவை என்றும், அவற்றின் அடிப்படையில் குழந்தைகள் வளர்க்கப்படவேண்டுமென்றும் கூறுவது, கவலை தருகிறது.

மனித இனப்பெருக்கத்தில் உள்ள தொழில்நுட்பப் புரட்சி, ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிகழும் பாலியல் உறவு இன்றி, உயிர்களை உருவாக்கும் வழிமுறைகளைப் புகுத்தியுள்ளது. இவ்வழியில், மனித உயிரின் உருவாக்கமும், பெற்றோர் என்ற நிலையும், அவரவரது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப பிரிக்கப்படலாம் என்ற நிலை ஏற்படுகிறது.

வாழ்வின் சிக்கல்களையும், மனித சக்தியற்ற நிலையையும் புரிந்துகொள்வது ஒருபுறம், மனித உண்மை நிலையின் பிரிக்கமுடியாத அம்சங்களை பிரிக்கும் கருத்தியல்களை ஏற்றுக்கொள்வது மற்றொரு புறம். படைப்பவரை ஒதுக்கிவிட்டு, மற்றொன்றை புகுத்த முயலும் பாவத்தில் நாம் விழாதிருப்போமாக. நாம் படைக்கப்பட்டவர்களே தவிர, அனைத்து வல்லமையும் கொண்டவர்கள் அல்ல. காலத்தால், நமக்கு முன்னரே படைப்பு இருந்தது, அதனை ஒரு கொடையாக நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதேவேளையில், மனிதகுலத்தை பாதுகாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். படைப்பை, அது உருவாக்கப்பட்ட முறையில், ஏற்பதும், மதிப்பதுமே, இதன் பொருள். (அன்பின் மகிழ்வு 56)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2021, 13:37