பிப்ரவரி மாத செபக்கருத்து - வன்முறைகளுக்கு இலக்காகும் பெண்களுக்கு பாதுகாப்பு பிப்ரவரி மாத செபக்கருத்து - வன்முறைகளுக்கு இலக்காகும் பெண்களுக்கு பாதுகாப்பு 

மகிழ்வின் மந்திரம் : குடும்பங்களில் உருவாகும் வன்முறைகள்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 51வது பத்தியில், குடும்பங்களில் உருவாகும் வன்முறைகள், எவ்வகையான சவால்களை முன்வைக்கின்றன என்பதை, திருத்தந்தை விவரித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மார்ச் 8, இத்திங்களன்று, பெண்களின் உலக நாளைச் சிறப்பித்தோம். "தலைமைத்துவத்தில் பெண்கள்: கோவிட்-19 உலகில் சமமானதோர் எதிர்காலத்தை வெல்வதற்கு" என்ற மையக்கருத்துடன், இவ்வாண்டு, இந்த உலக நாள் சிறப்பிக்கப்பட்டது. பொதுவாழ்வில் பெண்கள் தலைமைப் பொறுப்புகளை வகிக்கவேண்டும் என்று நாம் பறைசாற்றுகிறோம். ஆனால், குடும்ப வாழ்வில் பெண்கள் அடையும் இன்னல்கள், தொடர்கதையாக நீடித்துவருகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, பிப்ரவரி மாதம் வெளியிட்ட இறைவேண்டல் கருத்தில், வன்முறைகளுக்கு இலக்காகும் பெண்கள் பாதுகாப்பு பெறுவதற்கு அனைவரும் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். "வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்காக இறைவேண்டல் செய்வோம். அவர்கள் அடையும் துன்பங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு, அவர்கள், சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டுமென்று செபிப்போம்" என்ற கருத்தை, பிப்ரவரி மாத செபக்கருத்தாக திருத்தந்தை வெளியிட்டிருந்தார்.

குடும்பங்களை மையப்படுத்தி, திருத்தந்தை வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், இரண்டாம் பிரிவில், குடும்பங்கள் சந்திக்கும் ஒரு சில சவால்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவற்றில், 51வது பத்தியில், குடும்பங்களில் உருவாகும் வன்முறைகள், எவ்வகையான சவால்களை முன்வைக்கின்றன என்பதை, இவ்வாறு விவரித்துள்ளார்:

போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாவது, இக்காலத்தின் மிகப்பெரும் சாட்டையடியாக அமைந்துள்ளது. அதேவண்ணம், மது அருந்துதல், சூதாட்டம் போன்ற ஏனைய தீயப் பழக்கங்களுக்கு அடிமையாவது, பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதனால், பல குடும்பங்களில், பிரிவுகளும், பெரும் துன்பங்களும் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனைக்கு, குடும்பம், ஒரு சிறந்த தீர்ப்பாக இருக்கமுடியும். ஆனால், பல்வேறு வழிகளில் சிதைந்துபோகும் குடும்பங்கள், இந்தப் பிரச்சனையை இன்னும் ஆழப்படுத்துகின்றன.

குடும்பங்களில் ஏற்படும் வன்முறைகள், சமுதாய மோதல்களுக்கு வழி வகுக்கின்றன என்று மெக்சிகோ ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வன்முறை நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அந்த வன்முறையை சமுதாயத்தில் வெளிப்படுத்துகின்றன. குடும்பத்தினர் நடுவே, தொடர்புகள் குறைவது, அனைவரும் சேர்ந்து ஈடுபடக்கூடிய செயல்பாடுகள் குறைவது, பெற்றோரிடையே சண்டைகள் பெருகுவது, ஆகியவை, குடும்ப வன்முறைகளுக்கு காரணமாகின்றன. குடும்பத்தில் வளர்க்கப்படும் வன்முறை, மனித உறவுகளில், மனக்கசப்பையும், வெறுப்பையும் வளர்க்கிறது. (அன்பின் மகிழ்வு 51)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2021, 14:07