திருக்குடும்பம் திருக்குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: நாசரேத்து திருக்குடும்பத்தின் வாழ்வுமுறை

நாசரேத்து திருக்குடும்பத்தின் வாழ்வுமுறை, நம் ஒவ்வொரு குடும்பமும், வாழ்வு, மற்றும், வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகளைத் துணிவோடு எதிர்கொள்ள உதவுகின்றது (அன்பின் மகிழ்வு 66)

மேரி தெரேசா: வத்திக்கான்

2016ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' (Amoris Laetitia) திருத்தூது அறிவுரை மடலின் ஐந்தாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாக, இவ்வாண்டு மார்ச் 19ம் தேதியிலிருந்து கத்தோலிக்கத் திருஅவையில், அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்பம் மற்றும், திருமணத்தை மையப்படுத்திய அன்பின் மகிழ்வு மடலின் மூன்றாவது பிரிவிலுள்ள, “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” என்ற துணைதலைப்பு, 66வது பத்தியோடு நிறைவுறுகிறது. இந்த பத்தியில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1964ம் ஆண்டு சனவரி 5ம் தேதி, புனித பூமியின் நாசரேத்தில் ஆற்றிய உரையின் ஒரு சிறு பகுதியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

ஒருவர் ஒருவர் மீது அன்போடும், ஒருவருக்கு ஒருவர் பிரமாணிக்கத்தோடும் வாழ்ந்த, நாசரேத்து திருக்குடும்பத்தின் வாழ்வுமுறை, நம் ஒவ்வொரு குடும்பத்தையும் வடிவமைக்கும் கொள்கையை ஒளிரச் செய்கின்றது. அதோடு, இது, வாழ்வு, மற்றும், வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகளைத் துணிவோடு எதிர்கொள்ளவும் உதவுகின்றது. இந்த அடிப்படையில், ஒவ்வொரு குடும்பமும், தன் பலவீனங்கள் மத்தியிலும், உலகத்தின் இருளில், ஓர் ஒளியாக மாற முடியும். குடும்ப வாழ்வின், அதன் அன்புப்பிணைப்பின், அதன் வெளிப்படைத்தன்மையின், அதன் எளிமையான அழகின், அதன் புனிதத்தின், மற்றும், அதன் மாறாத பண்பின் அர்த்தத்தை நாசரேத்து திருக்குடும்பம், நமக்குக் கற்பிக்கின்றது. இத்திருக்குடும்பம் வழங்கும் பயிற்சி, எவ்வளவு இனிமையானது மற்றும், எதனாலும் ஈடுசெய்ய முடியாதது என்பதையும், சமுதாய ஒழுங்கமைவில், அதன் பங்கு எத்துணை அடிப்படையானது, மற்றும், இணையற்றது என்பதையும் அது போதிப்பதாக. (திருத்தந்தை புனித 6ம் பவுல், நாசரேத்தில் 5 சனவரி 1964ல் ஆற்றிய உரை)” (அன்பின் மகிழ்வு 66)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2021, 13:21