இயேசு, சமாரியப் பெண் இயேசு, சமாரியப் பெண் 

மகிழ்வின் மந்திரம்: இயேசுவின் முன்மாதிரிகை, திருஅவைக்கு.....

இயேசு, அழுது கலங்கும் பெற்றோரின் உணர்வுகளில் பங்குகொண்டார், மற்றும், அவர்களின் பிள்ளைகளுக்கு வாழ்வை மீட்டுக்கொடுத்தார் (அன்பின் மகிழ்வு 64)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவாக, இம்மாதம் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவிலிருந்து, “அன்பின் மகிழ்வு குடும்ப” (Amoris Laetitia Family) ஆண்டு கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அன்பின் மகிழ்வு மடலில், “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” என்ற தலைப்பில் துவங்கும் மூன்றாவது பிரிவின் 64வது பத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் இதோ.... இயேசுவின் முன்மாதிரிகை திருஅவைக்கு வாழ்வுமுறையாக உள்ளது..... இயேசு தம் பொது வாழ்வை கானாவூர் திருமண விருந்தோடு தொடங்கினார் (காண்க.யோவா.2:1-11). அவர், ஒவ்வொரு நாளும், தன் நட்பின் நேரங்களை, இலாசர் மற்றும், அவரது சகோதரிகளின் குடும்பத்தோடும், (காண்க.லூக்.10:38), பேதுருவின் குடும்பத்தோடும் (காண்க.மாற்.8:14) பகிர்ந்துகொண்டார். அவர் அழுது கலங்கும் பெற்றோரின் உணர்வுகளில் பங்குகொண்டார், மற்றும், அவர்களின் பிள்ளைகளுக்கு வாழ்வை மீட்டுக்கொடுத்தார் (காண்க. மாற்.5:41; லூக்.7:14-15). இவ்வாறு அவர், இரக்கத்தின் உண்மையான அர்த்தத்தை, தம் செயல்கள் வழியாக விளக்கிக் காட்டினார். இயேசு, சமாரியப் பெண்ணோடும் (காண்க.யோவா.4:1-30), விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணோடும் (காண்க. யோவா. 8:1-11) மேற்கொண்ட உரையாடல்களில் இது தெளிவாக உள்ளது. இந்த உரையாடல்களில், எதிர்பார்ப்பின்றி இயேசு வழங்கிய அன்பைச் சந்தித்ததால், அப்பெண்களுக்கு பாவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது (அன்பின் மகிழ்வு 64)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2021, 14:21