ஈராக் புலம்பெயர்ந்த கிறிஸ்தவர் சாத் ஹோமுஸ், தனது மகள் நத்தலியுடன் ஈராக் புலம்பெயர்ந்த கிறிஸ்தவர் சாத் ஹோமுஸ், தனது மகள் நத்தலியுடன் 

மகிழ்வின் மந்திரம் : பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்

இக்காலக் குடும்பங்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும், அவற்றிற்கு திருஅவை பதிலளிக்கவேண்டிய முறைகளை, குடும்பம் பற்றி நடைபெற்ற இரு உலக மாமன்றத்தில் பங்குபெற்ற தந்தையர் தங்கள் பரிந்துரைகளைப் பதிவுசெய்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' என்ற, தன் திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாவது பிரிவில், “குடும்பங்களின் அனுபவங்களும் சவால்களும்” என்ற தலைப்பின்கீழ், "இன்றையக் குடும்பத்தின் உண்மை நிலை" என்ற துணை தலைப்பில் (32-49), புலம்பெயர்ந்த குடும்பங்கள், வறியநிலையிலுள்ள குடும்பங்கள் உட்பட, இக்காலக் குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு சவால்கள், மற்றும், பிரச்சனைகள், இளையோர், திருமண வாழ்வைத் தேர்ந்துகொள்வதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் போன்றவை பற்றிய கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவுசெய்துள்ளார். இந்த இரண்டாவது பிரிவின் இறுதியில், “சில சவால்கள்” என்ற தலைப்பின்கீழ், 50வது பத்தியில், பிள்ளைகள் வளர்ப்பு பற்றி திருத்தந்தை வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள்  இதோ....

2014ம் ஆண்டில் (5-19, அக்.2014) வத்திக்கானில் நடைபெற்ற 3வது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம், அதற்கு அடுத்த ஆண்டில் (4-25, அக்.2015) நடைபெறவிருந்த குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக கூட்டப்பட்டது. 2014ம் ஆண்டு   சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்ட தந்தையர், இன்றையக் குடும்பச் சூழலை விளக்கி, அது பற்றிய தங்களின் அனுபவங்கள், மற்றும், பரிந்துரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த மாமன்றங்களுக்கென்று மேற்கொள்ளப்பட்ட கருத்தறிதலின் முடிவில், குடும்பங்கள் வாழ்கின்ற பல்வேறு சூழல்கள் மற்றும், அவை எதிர்கொள்ளும் புதிய சவால்கள் பற்றி வழங்கப்பட்ட கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அந்த கருத்தறிதலில் பங்குகொண்ட பலர், பிள்ளைகள் வளர்ப்பில் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியிருந்தனர். பல குடும்பங்களில் பெற்றோர், வேலையிலிருந்து மிகவும் களைப்பாக வீட்டிற்கு வரும்போது, அவர்கள், பிள்ளைகளோடு பேசுவதற்கு விரும்புவதில்லை, மற்றும், பல குடும்பங்களில் எல்லாரும் சேர்ந்து உணவு உண்பதுகூட கிடையாது. இக்காலத்தில் தொலைக்காட்சிக்கு அடிமையாவது உட்பட, ஏராளமான பொழுதுபோக்குகள் உள்ளன. இவை, பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு, கிறிஸ்தவ நம்பிக்கையை வழங்குவதை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன. இன்னும் பல குடும்பங்கள், பலநேரங்களில், நிகழ்காலத்தை அனுபவிப்பதைவிட, பாதுகாப்பான வருங்காலத்தை அமைப்பதில் கவனம் செலுத்துகின்றன. இந்நிலை, குடும்பங்களை, கடுமையான மனஅழுத்தத்தில் வீழ்த்துகின்றன. இது, நிரந்தரமான வேலை, நிதியிருப்பு, பிள்ளைகளின் வருங்காலம், ஆகியவற்றின் மீது அச்சத்தை அதிகமாக்கும் பரந்துபட்ட கலாச்சார பிரச்சனையாகவும் உள்ளது.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2021, 15:44