தேடுதல்

மாற்றுத்திறனாளி ஒருவரை முத்திசெய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரை முத்திசெய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்  

மகிழ்வின் மந்திரம்: மாற்றுத்திறனாளிகளை ஏற்கும் குடும்பங்கள்

தனது தேவைகளுக்கு அடுத்தவரின் உதவியை நாடும், மாற்றுத்திறனாளி குழந்தையின் கஷ்டமான நிலையை அன்போடு ஏற்கும் குடும்பங்கள் மிகவும் பாராட்டப்படவேண்டியவை. (அன்பின் மகிழ்வு 47)

மேரி தெரேசா: வத்திக்கான்    

பிப்ரவரி 28, இஞ்ஞாயிறன்று, அரிதான நோய்கள் 16வது உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று உலகில், ஆறாயிரத்திற்கு மேற்பட்ட நோய்கள் அரிதானவை என்றும், இவற்றில் ஏறத்தாழ 72 விழுக்காடு, பரம்பரை நோய் என்றும், 70 விழுக்காடு குழந்தைப்பருவத்திலே தொடங்குகின்றது என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், அரிதான நோய்கள் உலக நாள் பற்றிக் குறிப்பிட்டார். இந்நோய்கள் பற்றி மருத்துவ ஆய்வுகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்ளும் அனைவருக்கும், திருத்தந்தை, தன் நன்றியைத் தெரிவித்தார். இந்நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரோடும், குறிப்பாக, சிறார் மற்றும், அவர்களின் குடும்பங்களோடு தனது அருகாமையை வெளிப்படுத்தினார். இந்நோய்களால் துன்புறும் அனைவரும் தனிமையை உணராதவண்ணம், முன்னெப்போதும் இருந்ததைவிட, இப்போது அவர்களுக்குத் தோழமையுணர்வு அதிகம் தேவைப்படுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் "அன்பின் மகிழ்வு" (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாவது பிரிவின் 47வது பத்தியிலும், சிறப்புக் கவனம் தேவைப்படும் பிள்ளைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்கள் பற்றிய தன் கருத்துக்களையே பதிவுசெய்துள்ளார்.

உலக மாமன்றத் தந்தையர், சிறப்புக் கவனம் தேவைப்படும் ஆள்களைக் கொண்டிருக்கும் குடும்பங்கள் மீது குறிப்பிட்ட அக்கறை காட்டப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். குடும்பத்தில், மாற்றுத்திறன் கொண்டவர்களின் நடத்தைகள் முன்வைக்கும் எதிர்பாராத சவால், அதன் சமநிலை, விருப்பங்கள், மற்றும், எதிர்பார்ப்புக்களை நிலைகுலையச் செய்யக்கூடும். தனது தேவைகளுக்கு அடுத்தவரின் உதவியை நாடும், மாற்றுத்திறனாளி குழந்தையின் கஷ்டமான நிலையை அன்போடு ஏற்கும் குடும்பங்கள் மிகவும் பாராட்டப்படவேண்டியவை. இக்குடும்பங்கள், வாழ்வு எனும் கொடைக்கு, திருஅவை, மற்றும், சமுதாயத்திற்கு, பிரமாணிக்கத்துடன் பகரும் சான்று, விலைமதிப்பற்றது. இத்தகைய சூழல்களில், குடும்பம், கிறிஸ்தவ குழுமத்தோடு இணைந்து, மனித வாழ்வின் பலவீனமான புதிர்நிலையை வரவேற்று, பராமரிப்பதற்கு, புதிய அணுகுமுறைகள், புதிய வழிகளில் செயல்படுதல், வித்தியாசமான புரிந்துணர்வு, மற்றும், மற்றவரோடு அடையாளப்படுத்தும் வழிகளைக் கண்டுகொள்ளலாம். மாற்றுத்திறன்களோடு உள்ள மக்கள், தங்கள் குடும்பங்களுக்கு ஒரு கொடையாகவும், அன்பு, ஒருவர் ஒருவருக்கு உதவுதல், ஒன்றிப்பு ஆகியவற்றில் வளர்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் உள்ளனர். குடும்பம், நம்பிக்கையின் ஒளியில், சிறப்புக் கவனம் தேவைப்படும் மக்களின் இருப்பை ஏற்றால்,  அவர்கள், மனித வாழ்வின் மதிப்பையும், தன்மையையும், அதன் தகுதியான தேவைகள், உரிமைகள், மற்றும், வாய்ப்புக்களோடு ஏற்பார்கள், மற்றும், உறுதி செய்வார்கள். இத்தகைய அணுகுமுறை, மாற்றுத்திறனாளிகள் சார்பாக, இடம்பெறும் பராமரிப்பு மற்றும், பணிகளை மேம்படுத்தும். மேலும், அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், மக்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருந்து, பாசத்தைப் பொழிய ஊக்கப்படுத்தும். புலம்பெயர்ந்தோர் மற்றும், மாற்றுத்திறனாளிகள் மீது காட்டப்படும் அக்கறை, மற்றும், அர்ப்பணம், தூய ஆவியாரின் அடையாளமாக இருக்கிறது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருத்தந்தை கூறியுள்ளார். இந்த இரு சூழல்களுமே, நாம் மற்றவரை வரவேற்பதிலும், நலிந்தோரை நம் குழுமங்களின் ஓர் அங்கமாக முழுமையாக ஏற்று உதவுவதிலும் இரக்கப்பண்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு தேர்வாக உள்ளன. (அன்பின் மகிழ்வு 47)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2021, 14:49