புனித ஜோஸ்பின் பக்கீத்தா புனித ஜோஸ்பின் பக்கீத்தா  

வாரம் ஓர் அலசல்: நிரந்தரமற்ற மகுடங்கள்

“என்னைக் கடத்திய அடிமை வர்த்தகர்கள், மற்றும், என்னைச் சித்ரவதைப்படுத்தியவர்களையும்கூட நான் சந்திக்க நேர்ந்தால், அவர்கள்முன் முழந்தாளிட்டு அவர்களின் கரங்களை முத்திசெய்வேன்

மேரி தெரேசா: வத்திக்கான்

வாரம் ஓர் அலசல்: நிரந்தரமற்ற மகுடங்கள்

பேரரசர் அசோகர், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில், தொடர்ந்து 36 ஆண்டுகள் ஆட்சிசெய்தவர். அவரது ஆளுகை, இன்றைய ஒடிஷா மாநிலத்திலிருந்து, ஆப்கானிஸ்தான் வரை விரிந்து பரந்திருந்தது. ஒரு நாள், பேரரசர் அசோகர், தனது தேரில் நாட்டை, சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்த புத்த துறவி,  பேரரசரும், அவரது ஆள்களும் செல்ல வழிவிட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றார். அவரைப் பார்த்துவிட்ட பேரரசர் அசோகர், உடனே தனது தேரை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று அந்த துறவியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். பேரரசரது தலை துறவியின் காலில் பட்டது. துறவியும், தன் கைகளை உயர்த்தி பேரரசரை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர் ஒருவர், நாடாளும் மன்னர், ஒன்றும் இல்லாத ஏழை துறவியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது? என்று எண்ணி வருந்தினார். அவர் அரண்மனைக்குச் சென்றதும் பேரரசரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சர் கூறியதைக் கேட்ட அசோகர் சிரித்தார். அமைச்சரின் கேள்விக்கு உடனடியாகப் பதிலளிக்காமல், விசித்திரமான கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார் அசோகர். ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை ஆகிய மூன்றும் உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் என்று, பேரரசர் அசோகர், அமைச்சருக்கு ஆணையிட்டார். பேரரசரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற காவலர்கள் நாலாபக்கமும் விரைந்தனர். ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்துவிட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான். மனிதத் தலையைத் தேடி அலைந்த காவலர்கள், கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று, ஒரு பிணத்தின் தலையை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தனர். மூன்றையும் பார்த்த பேரரசர் அசோகர், தன் அமைச்சரிடம், அந்த மூன்று தலைகளையும் சந்தைக்கு எடுத்துச் சென்று அவற்றை விற்று வருமாறு கூறினார். பேரரசரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்ற அமைச்சர் திணறினார்.

ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலைபோனது. புலியின் தலையைக் கொஞ்சம் தாமதமாகவே, வேட்டைப் பிரியர் ஒருவர் அபூர்வப் பொருள் சேகரிப்புக்காக வாங்கிக்கொண்டார். மீதமிருந்தது மனிதத் தலைதான். ஒரு காசுக்குக்கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர், அசோகரிடம், ஆட்டுத் தலையும், புலித் தலையும் விலைபோனதையும், மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார். சரிதான்! அதை இலவசமாகக் கொடுத்துவிடுங்கள் என்றார் அசோகர். மறுபடியும் சந்தைக்குச் சென்ற அமைச்சர் திரும்பிவந்து, இலவசமாகக்கூட அதனை வாங்கிக்கொள்ள யாருமே முன்வரவில்லை, அதைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டேன் என்று சொன்னார். அப்போது பேரரசர் அசோகர், அந்த அமைச்சரிடம், “பார்த்தீரா அமைச்சரே! மனிதரின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால்காசுக்குக்கூடத் தகுதியில்லை. இலவசமாகக்கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு, உயிர் இருக்கின்றபோது எத்தனை ஆட்டம் ஆடுகிறது! இறந்தபின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆயினும், உடலில் உயிர் இருக்கும்போது, தன்னிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி என்று கூறினார். பின்னர், பேரரசர் அசோகர், அமைச்சரே, மகுடங்கள் தலை மாறக்கூடியவை… இரக்கமும், பணிவும், மக்கள் நலப்பணிகளும்தான் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும்” என்று, முத்தான சொற்களை உதிர்த்தார்.

பேரரசர் அசோகர் பற்றிய இந்த நிகழ்வை, வலைத்தளங்களில் பதிவுசெய்துள்ள சிலர், தங்களின் சிந்தனைகளையும் அதனோடு இணைத்துள்ளனர். இயேசு சபை அருள்பணி முனைவர் சேவியர் அந்தோனி அவர்கள், இந்த நிகழ்வு பற்றிய தன் சிந்தனையை இவ்வாறு பதிவுசெய்திருக்கிறார். பணிந்துபோன எவரும் பலன்பெறாமல் போனது கிடையாது. பணிவு வேறு, குனிவு வேறு. சமமற்றச் சூழலில், பணிவும், குனிவே.

பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை,

அணியுமாம் தன்னை வியந்து என்கிறது வள்ளுவம்.

மதிப்பும் மரியாதையும் கேட்டுப்பெறவேண்டியவை அல்ல. அவை கொடுத்துப்பெற வேண்டியவை. வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதைவிட, யாரையும் வேதனைப்படுத்தவில்லை என்பதே சிறந்தது.

புனித ஜோஸ்பின் பக்கீத்தா

வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதைவிட, யாரையும் வேதனைப்படுத்தவில்லை என்பதே சிறந்தது.  பிப்ரவரி 8, இத்திங்களன்று, திருஅவை சிறப்பித்த புனித ஜோஸ்பின் பக்கீத்தாவின் (Josephine Bakhita) வாழ்க்கையை ஒருமுறை சிந்திப்போமே. பக்கீத்தா, ஏறத்தாழ 1869ம் ஆண்டில் தற்போதைய தென் சூடான் நாட்டில், Olgossa என்ற கிராமத்தில், மூன்று சகோதரர்கள் மற்றும், மூன்று சகோதரிகளுடன், செல்வக் குடும்பத்தில் பிறந்து, அன்பான சூழலில் வளர்ந்தவர். ஆயினும், 1877ம் ஆண்டில், இவருக்கு, 7 அல்லது 8 வயது நடந்தபோது, அராபிய அடிமை வர்த்தகர்களால் இவர் கடத்தப்பட்டார். இவர் கடத்தப்பட்ட அந்த இடத்திலிருந்து El-Obeid என்ற நகர் வரை, ஏறத்தாழ 960 கிலோ மீட்டர்கள் வெறுங்காலோடு நடந்துசெல்ல கட்டாயப்படுத்தப்பட்டார். அந்த நகரை அடைவதற்கு முன்னரே, இருமுறை விற்கப்பட்டு, விலைக்கு வாங்கப்பட்டார். இவர் தனது 12வது வயது வரை (1877–1889), மேலும் மூன்று முறை விற்கப்பட்டார். அச்சமயத்தில், இஸ்லாமுக்கும் இவர் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டார். கடத்தல்காரர்களிடம் எதிர்கொண்ட சித்ரவதைகளால் இவர், தன் இயற்பெயரையே மறந்துவிட்டார். எனவே அராபிய அடிமை வர்த்தகர்களில் ஒருவர், அராபியத்தில் அதிர்ஷ்டம் என்று பொருள்படும், பக்கீத்தா என்ற பெயரை இவருக்கு சூட்டினார். El-Obeid நகரில், இவரை விலைக்கு வாங்கிய பணக்கார அராபியர் ஒருவர், தன் இரு மகள்களை கவனிக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். ஆயினும், அந்த வீட்டில், இவர், ஒரு மலர் பாத்திரத்தை உடைத்த காரணத்தால், அந்த செல்வந்தரின் மகன், பக்கீத்தாவை சாட்டையால் அடித்து தூக்கி எறிந்தார். இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக படுத்த படுக்கையானார் பக்கீத்தா. இவரது மார்பிலும், வயிற்றிலும், வலது கரத்திலும், 114 வெட்டுக்காயங்கள் இருந்தன என்று சொல்லப்படுகின்றது.

அந்த அளவுக்கு, அடிமையாய் கடும் துன்பங்களை அனுபவித்த பக்கீத்தா, இறுதியில், 1883ம் ஆண்டில், சூடான் நாட்டிலுள்ள இத்தாலிய தூதரகத்தில் உதவித் தூதராகப் பணியாற்றிய Callisto Legnani என்பவர், பக்கீத்தாவை விலைக்கு வாங்கினார். அந்த அதிகாரியின் இல்லத்தில், முதல் முறையாக அன்பையும், அமைதியையும், மகிழ்வையும் சுவைக்கத் துவங்கினார் பக்கீத்தா. இரு ஆண்டுகள் சென்று, அரசியல் சூழல் காரணமாக, இந்த அதிகாரி இத்தாலிக்குத் திரும்பினார். அவரோடு பக்கீத்தாவும் இத்தாலிக்கு அழைத்துவரப்பட்டார். அந்த அதிகாரியின் குடும்பத்தில் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு பக்கீத்தாவிடம் கொடுக்கப்பட்டது. வெனிஸ் நகரில் கனோசியன் அருள்சகோதரிகளிடம், பக்கீத்தாவும், அவ்வீட்டுச் சிறுமியும் கல்வி பயின்றனர். அப்படியே கத்தோலிக்கத்தை தழுவி, அந்த துறவு சபையிலும் சேர்ந்தார் பக்கீத்தா. ஜோஸ்பின் பக்கீத்தா என்ற பெயரை ஏற்ற இவர், 1947ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி இறையடி சேர்ந்தார். 2000மாம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி இவர் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆப்ரிக்க அடிமையான, புனித பக்கீத்தா இறைபதம் சேர்ந்த நாளே, திருஅவையில், மனித வர்த்தகத்தில் பலியாகுகிறவர்களுக்காகச் செபிக்கும் உலக நாளாக, 2015ம் ஆண்டு முதல்,  பிப்ரவரி 8ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 07, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், பிப்ரவரி 08, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட, இந்த உலக நாள் பற்றிக் குறிப்பிட்டார். உறவினர் யாருடைய துணையுமின்றி தனியாக புலம்பெயரும் சிறார் மற்றும், வளர்இளம் பருவத்தினரை, சிறப்பாக நினைவுகூருமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார். ஆண்களையும், பெண்களையும் சந்தைப்பொருள்களாக ஒருபோதும் அமைக்காத, மனித வர்த்தகத்தை புறக்கணிக்கின்ற, மனித வர்த்தகத்திற்கு மறைமுகமாகக்கூட ஆதரவளிக்காத, ஒரு பொருளாதாரத்தை ஊக்குவிக்க, இவ்வாண்டின் இந்த உலக நாள் அழைப்பு விடுக்கின்றது. அடிமைமுறையின் துன்பங்கள், அவமானங்கள், சிறுமைகள் போன்றவைகளுக்கு பழக்கப்பட்ட புனித ஜோஸ்பின் பக்கீத்தாவின் திருநாளன்று, இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது, மனித வர்த்தகத்தை ஒழிக்க, இந்த புனிதர் நமக்கு உதவுவாராக என்று, திருத்தந்தை கூறினார். புனித ஜோஸ்பின் பக்கீத்தா இவ்வாறு கூறியிருக்கிறார். “என்னைக் கடத்திய அடிமை வர்த்தகர்கள், மற்றும், என்னைச் சித்ரவதைப்படுத்தியவர்களையும்கூட நான் சந்திக்க நேர்ந்தால், அவர்கள்முன் முழந்தாளிட்டு அவர்களின் கரங்களை முத்திசெய்வேன். எனக்கு அவ்வாறு நேர்ந்திராவிட்டால், கிறிஸ்தவராகவும், துறவியாகவும் மாறியிருக்க மாட்டேன். ஆண்டவர் என்னை மிகவும் அன்புகூர்ந்தார். எனவே நாமும் அனைவரையும் அன்புகூரவேண்டும், பரிவன்புள்ளவர்களாக வாழவேண்டும்”. பட்டங்களும், பணமும், பொருளும் ஒருநாளும் மகுடங்களை நிலைக்க வைக்காது. உடம்பில் உயிர்பிரிந்துவிட்டால், அது கால்காசுகூடப் பெறாது. மதிப்பும் மரியாதையும் கேட்டுப்பெறவேண்டியவை அல்ல. அவை கொடுத்துப்பெற வேண்டியவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2021, 15:13