திருத்தந்தை முதலாம் ஹொனாரியுஸ் திருத்தந்தை முதலாம் ஹொனாரியுஸ் 

திருத்தந்தையர் வரலாறு - கண்டனத்துக்குள்ளான திருத்தந்தை

இயேசுவின் இறை, மனித இயல்புகள் குறித்த கேள்விகளும், தர்க்கவாதங்களும் நிறைந்திருந்த காலத்தில் வாழ்ந்தவர், திருத்தந்தை முதலாம் ஹொனாரியுஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

625ம் ஆண்டு முதல் 638ம் ஆண்டு வரை, அதாவது 13 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்ற திருத்தந்தையின் பெயர் முதலாம் ஹொனாரியுஸ் (Honorius I).    நாம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம்  14ந்தேதி திருச்சிலுவையின் மகிமையின் நாளை சிறப்பிக்கும் வழக்கம், இத்திருத்தந்தையின் காலத்தில்தான் துவங்கியது. இவர் காலத்திற்கு முன்னரெல்லாம், அயர்லாந்து திருஅவை, தனியாக ஒரு நாளில் உயிர்ப்பு விழாவை சிறப்பித்ததை மாற்றி, தலைமைத் திருஅவையுடன் இணைந்து கொண்டாடும்படி வலியுறுத்தியதில் வெற்றியும் கண்டார் திருத்தந்தை ஹொனாரியுஸ். அதேவேளை, இவர் இறந்த 42 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 680ம் ஆண்டு இடம்பெற்ற 6வது பொது அவையில்,  இவர் திருஅவையின் உண்மைப் படிப்பினைகளுக்கு எதிராகப் போதித்தார் என கண்டனம் செய்யப்பட்டார் என்பது வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று. இதன் பின்னணியை சிறிது பார்ப்பது நல்லது.

இயேசுவின் இறை, மனித இயல்புகள் குறித்த கேள்விகளும், தர்க்கவாதங்களும் நிறைந்திருந்த காலமது. இயேசு இறைமனிதனாகச் செயல்பட்டார், அவரின் நடவடிக்கைகளை இறைநடவடிக்கைகள் என்றும், மனித நடவடிக்கைகள் என்றும் தனித்தனியாக பிரித்துப் பார்த்தல் இயலாது என்ற கொள்கையில் நம்பிக்கையுடையோர் ஒருபுறமும், இரண்டும் தனித்தனியானவை, இறைவன் மனிதனாகப் பிறந்தார் அவரிடம் மனித இயல்புகளும் ஓங்கி இருந்தன, இல்லையெனில் அவர் நம்மைப்போல் மனிதனாக வாழ்ந்தார் எனச் சொல்ல இயலாது என வாக்குவாதம் செய்வோர், ஒரு புறமும் என வார்த்தைப்போர் இடம்பெற்ற ஒரு காலக்கட்டம் அது. அத்தகைய ஒரு சூழல் இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், அதாவது, 622ம் ஆண்டு, Armenia சென்ற பேரரசர் Heraclius, இயேசுவின் திருஉடலில், ஓரியல்பே உண்டு என்ற கொள்கையைப் பற்றி விவாதிக்கும்போது, இயேசுவின் நடவடிக்கைகள் எல்லாமே ஒரே இறை-மனித இயல்பிலிருந்து பிறப்பவை எனச் சொல்லி விட்டுவந்தார். இது குறித்து குழப்ப நிலைதான் தொடர்ந்தது. இத்தகைய ஒரு சூழலில், 630ம் ஆண்டு Cyrus என்ற Laziயின் ஆயர் Alexandriaவின் முதுபெரும் தந்தையானார். இவரின்கீழ் இருந்த எகிப்து திருஅவை, முற்றிலுமாக, இயேசுவுக்கு ஓரியல்பே இருந்தது, அதாவது இறைமனித இயல்பு, இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது என்ற கொள்கையில் ஊறிப்போயிருந்தது. இந்த கொள்கை, இறைவனின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே இயல்பின்கீழ் பார்ப்பதால், இயேசுவின் மனித இயல்பு இங்கு மறைக்கப்பட்டது.

இந்த எகிப்து கத்தோலிக்கர்கள், திருஅவையின் படிப்பினைகளிலிருந்து முரண்பட்ட ஒரு கருத்தை பின்பற்றுவதைப் பார்த்த Alexandriaவின் முதுபெரும்தந்தை Cyrus, Constantinople முதுபெரும்தந்தை Sergiusன் உதவியுடன், திருஅவையின் உண்மைப் படிப்பினைகளையும், இயேசுவின் ஒரே இயல்பு என்ற படிப்பினைகளையும் கலந்து, அங்கும் இங்கும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து சில புதிய பரிந்துரைகளை வரையறுத்தார். இதனால், எகிப்தின் கிறிஸ்தவர்கள் அனைவரும் கத்தோலிக்கத் திருஅவையோடு இணைந்தனர். ஆனால், அக்காலத்தில் புனிதத்துவத்தில சிறந்து விளங்கிய பாலஸ்தினிய துறவி Sophronius அவர்கள், இப்புதிய படிப்பினைகளை எதிர்த்தார். அதேவேளை, திருஅவைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட எகிப்து கிறிஸ்தவர்களை இழக்கவும் அவர் தயாராக இல்லை. இயேசுவின் இயல்பு பற்றிய கேள்வி, நம்பிக்கை தொடர்புடையதாக இருந்ததால், இப்பிரச்சனை திருத்தந்தை முதலாம் ஹொனாரியுஸின் முன் கொணரப்பட்டது.

இந்த பிரச்சனையில் தலையிட்டு, திருஅவையின் உண்மையான படிப்பினையை உறுதிசெய்ய வேண்டியது திருத்தந்தையின் பணியானது. ஆனால் திருத்தந்தை ஹொனாரியுஸ், புதிய படிப்பினையை கண்டனம் செய்யவும் இல்லை, எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை. திருத்தந்தையின் சில செயல்பாடுகளும், திருஅவையின் படிப்பினைகளில் சமரசம் செய்து Constantinople மற்றும், Alexandria முதுபெரும்தந்தையர்களின் கருத்துக்களை ஆமோதிப்பதாக இருந்தன. Constantinople முதுபெரும்தந்தை Sergiusன் படிப்பினைகளை, பரிந்துரைகளை ஆமோதிப்பதுபோல் கடிதம் எழுதிவிட்டார் திருத்தந்தை ஹொனாரியுஸ். இதனை திருத்தந்தையின் அங்கீகாரமாக எடுத்துக்கொண்ட முதுபெரும்தந்தை Sergius, தன் கொள்கைகளை, படிப்பினைகளை அழகாக வரையறுத்து, பேரரசர் Herachiusஆல் அதனை 638ல் வெளியிடவும் வைத்து விடுகிறார். இந்த புதிய படிப்பினை, இறைமகனின் ஒரே இயல்பின் செயல்பாடு, இருவேறு இயல்புகளின் செயல்பாடு என்ற சொற்பதங்களை தவிர்த்து, இறைமனிதனின் ஒரே இயல்பை வலியுறுத்தியது. ஆனால் இதனை ஏற்பதற்கோ, தன் படிப்பினையல்ல என மறுத்துக் கூறுவதற்கோ திருத்தந்தை ஹொனாரியுஸ் அங்கு இல்லை. 638ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ந்தேதி அவர் இறைபதம் அடைந்து விட்டார்.

திருத்தந்தை ஹொனாரியுஸ் இறந்த பின்னரும் இந்த பிரச்சனை ஓயவில்லை. அதே ஆண்டு டிசம்பரில் Constantinople முதுபெரும்தந்தை Sergius ஆயர்கள் அவையைக் கூட்டி, பேரரசரால் வெளியிடப்பட்ட இறைமனித இயல்பு குறித்த படிப்பினைகளே உண்மையான அப்போஸ்தலிக்க போதனைகளோடு ஒத்திணங்கிச் செல்பவை என அறிவிக்கவும் செய்தார். ஆனால், உரோமையத் திருஅவை அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை. 680ல் கூடிய திருஅவையின் பொது அவை, இப்படிப்பினைகளுக்கு காரணமாக இருந்தவர்களையும், அதனை கண்டிக்காமல் அதனோடு ஒத்துழைத்த திருத்தந்தை ஹொனாரியுஸையும், திருஅவை படிப்பினைகளுக்கு எதிராகச் சென்றனர் என கண்டித்ததுதான் நடந்த கதை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2021, 15:34