புனித முதலாம் மார்ட்டின் புனித முதலாம் மார்ட்டின் 

திருத்தந்தையர் வரலாறு - ஒரு புனித திருத்தந்தையின் துயர்கள் – 1

ஆடைகள் உருவப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில், தெருத்தெருவாக இழுத்து அவமானப்படுத்தப்பட்டு, Diomede என்ற சிறையில் அடைக்கப்பட்ட புனித திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையின் வரலாறு, மேடும் பள்ளமுமாக மாறிமாறி மகிழ்வையும் துக்கங்களையும் தாங்கி வந்ததை கடந்த சில வாரங்களாகக் கண்டு வருகிறோம். இன்றைய நிகழ்ச்சியில் நாம் செவிமடுக்கவிருக்கும் வரலாறு, சிறிது சோகம் நிறைந்ததுதான். ஆனால், பெருமை நிறைந்ததும்கூட. நேர்மையாக இருந்ததற்காக, திருஅவையின் போதனைகளை விட்டுக்கொடுக்க மறுத்ததற்காக, எண்ணற்ற துன்பங்களை, அவமானங்களை, நாடு கடத்தலை, சிறைவைத்தலை அனுபவித்த திருத்தந்தை முதலாம் மார்ட்டின் குறித்து இன்று காண்போம்.

திருத்தந்தை முதலாம் Theodoreக்குப்பின் 649ம் ஆண்டு ஜூலை மாதம் 21ந்தேதி (ஒருவேளை ஜூலை 5) தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள், ஆறு ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தியபோது, 11 அருள்பணியாளர்கள், 5 திருத்தொண்டர்கள், 33 ஆயர்களை திருநிலைப்படுத்தியுள்ளார். பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த இத்திருத்தந்தை, சிறந்த கல்வியாளராகவும், பிறரன்பு நிறைந்தவராகவும் விளங்கினார். பேரரசர், அல்லது, பேரரசரின் பிரதிநிதியின் ஒப்புதல், அல்லது, அங்கீகாரம் பெற்றபின்னரே எந்த ஒரு திருத்தந்தையும் திருநிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற அரச விதியை ஏற்றுக்கொள்ளாமல், திருத்தந்தையாக பொறுப்பேற்கும் துணிச்சல் கொண்டிருந்தார் திருத்தந்தை  முதலாம் மார்ட்டின். இங்கிருந்தே அவருக்கு முரண்பாடு துவங்கிவிட்டது. பதவியேற்ற உடனேயே ஆயர் பேரவைக் கூட்டத்தைக் கூட்டினார். 105 ஆயர்கள் அதில் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் பேரரசர் ஹெராக்கிளியுஸ்(Heraclius), மற்றும், பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ஸின் கிறிஸ்தவ முரண்பாட்டுக் கொள்கைகளை  நீக்க உத்தரவிட்டார். அவைகளை ஆதரித்த, மற்றும், திருஅவை படிப்பினைக்கு எதிரானவைகளை போதித்த ஆயர்கள் செர்ஜியுஸ்(Sergius), பைரஸ்(Pyrrus), கான்ஸ்தாந்திநோபிளின்   பவுல், அலக்சாந்திரியாவின் சைரஸ்(Cyrus), அரேபியாவின்;  தியோதோர் ஆகியவர்களை திருஅவையிலிருந்து விலக்கி வைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். இது ஒரு மிகப்பெரிய நடவடிக்கை எனலாம். ஏனெனில் இந்த ஆயர்கள், அல்லது, முதுபெரும் தந்தையர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளின் பலம்வாய்ந்த திருஅவைத் தலைவர்கள் மட்டுமல்ல, அப்பகுதிகளிலுள்ள மன்னர்களின், மற்றும், மக்களின் ஆதரவு பெற்றவர்கள். ஆனால், நேர்மையாளரான திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள், உரோம் நகரில் நடந்த ஆயர்கள் கூட்டத்தின் தீர்மானங்களை உலகின் அனைத்து ஆயர்கள் பேரவைகளுக்கும் அனுப்பியதோடு, அப்போதைய பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ஸுக்கும் அனுப்பிவைத்தார்.

தெசலோனிக்காவின் ஆயர் பவுல் அவர்கள், திருத்தந்தையின் தீர்மானங்களை ஏற்க மறுத்தார். தன் தவறான படிப்பினைகளில் இருந்து விலகிவரவும் அவர் தயாராக இல்லை. ஆகவே, அவரும் திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். கான்ஸ்தாந்திநோபிளின் முதுபெரும்தந்தை  பவுல் அவர்கள், பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ஸை அணுகி, திருத்தந்தைமீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கான்ஸ்தாந்திநோபில் பேரரசர், அந்நகர்  திருஅவைத் தலைவருக்குத்தான் ஆதரவளிப்பார் என்பது தெரிந்ததுதானே. பேரரசரும் உடனே தன் இத்தாலிய பிரதிநிதியாக ஒலிம்பியுஸ்(Olimpius) என்பவரை அனுப்பினார். உரோமையில் திருத்தந்தையின் தலைமையில் ஆயர் கூட்டம் நடக்கும்போது வந்த இவர், திருஅவைத் தந்தையரிடையே பேரரசருக்கு ஆதரவாக பிளவினை ஏற்படுத்த முயன்றார். ஆனால் வெற்றியடையவில்லை. இதன் பின்னர், திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்களை தந்திரமாக கொல்ல முயன்றார் ஒலிம்பியுஸ். பேரரசரின் பிரதிநிதியாகிய நான், திருத்தந்தையின் கைகளிலிருந்து திருநற்கருணை பெற விரும்புகிறேன் என விண்ணப்பித்தார். அந்நேரத்தில் திருத்தந்தையை குத்திக் கொல்வதே இவரின் திட்டம். ஆனால், தெய்வ விருப்பமோ வித்தியாசமானதாக இருந்தது. அந்நேரத்தில் சிசிலி (Sicily)  தீவில் போர் மூண்டதால், போரிடுவதற்காக ஒலிம்பியுஸ் அங்கு செல்ல வேண்டியதாகியது. அங்கேயே மரணமடைந்தார் பேரரசரின் பிரதிநிதி ஒலிம்பியுஸ்.

இதற்குப் பின் நம் திருத்தந்தை அனுபவித்த துயர்கள் குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2021, 15:16