பிலிப்பீன்ஸ் நாட்டில் திருநீற்றுப் புதன்  பிலிப்பீன்ஸ் நாட்டில் திருநீற்றுப் புதன்  

பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தவக்காலச் செய்தி

நம் சிலுவைகளைச் சுமப்பதற்கு அழைப்பு விடுக்கும் தவக்காலம், இறுதியில் உயிர்ப்பின் வெற்றி உண்டு என்ற நம்பிக்கையையும், உயிர்த்த கிறிஸ்துவை நாம் சந்திக்கப்போகிறோம் என்ற மகிழ்வையும் உருவாக்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் வாழும் 8 கோடிக்கும் அதிகமான கத்தோலிக்கருக்கு, அந்நாட்டு ஆயர் பேரவை, பிப்ரவரி 17, திருநீற்று புதனன்று துவங்கியுள்ள தவக்காலத்திற்கென செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

நம் சிலுவைகளைச் சுமப்பதற்கு அழைப்பு விடுக்கும் தவக்காலம், இறுதியில் உயிர்ப்பின் வெற்றி உண்டு என்ற நம்பிக்கையையும், உயிர்த்த கிறிஸ்துவை நாம் சந்திக்கப்போகிறோம் என்ற மகிழ்வையும் நமக்குள் உருவாக்கவேண்டும் என்ற மையக்கருத்துடன் இந்த மடல் வெளியிடப்பட்டுள்ளது.

துயரங்கள் சூழ்ந்துவரும் வேளையில், பரிவும், அன்பும் நம்மில் இருந்தால், அங்கு கிறிஸ்தவ நம்பிக்கையும் பிறக்கும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Romulo Valles அவர்கள் கூறியுள்ளார்.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உண்ணாநோன்பையும், ஏனைய ஒறுத்தல் முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு மட்டும் இந்த தவக்காலம் நம்மை அழைக்கவில்லை, மாறாக, மற்றவர்களுக்கு, குறிப்பாக, வறியோருக்கு உதவிகள் வழங்கவும் இந்த சிறப்பான காலம் நம்மை அழைக்கிறது என்று பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் உதவித் தலைவர், ஆயர் Pablo Virgilio David அவர்கள் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில், போதைப்பொருள் தடுப்பு என்ற சட்டத்தின் கீழ் உறவுகளை பறிகொடுத்து, பெரும் துன்பங்களை அடைந்துவரும் குடும்பங்களோடு ஒருமைப்பாட்டை தெரிவித்து, அவர்களுக்கு ஆறுதலாக இருக்க இந்த தவக்காலம் தகுந்ததொரு வாய்ப்பு என்று ஆயர் டேவிட் அவர்கள் நினைவுறுத்தியுள்ளார்.

மணிலா உயர் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றும் ஆயர், Broderick Pabillo அவர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், மக்கள், தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க, இந்த தவக்காலத்தில் சிறப்பான வேண்டுதல்களை மேற்கொள்ளுமாறு, தன் மறைமாவட்ட மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2021, 15:10