மலேசிய அரசால் திரும்ப அனுப்பப்படும் மியான்மார் நாட்டவர் மலேசிய அரசால் திரும்ப அனுப்பப்படும் மியான்மார் நாட்டவர் 

மியான்மாரிலிருந்து வந்தோரை மீண்டும் அனுப்புவது தவறு

மியான்மார் நாட்டின் மனிதாபிமான நெருக்கடியை முன்னிட்டு அங்கிருந்து வெளியேறிய மக்களை, மீண்டும் அந்நாட்டிற்கு அனுப்ப, மலேசிய அரசு முடிவெடுத்திருப்பது சரியல்ல - மலேசிய ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் தற்போது நிலவும் அரசியல் நிலையற்றச் சூழலைக் கண்டு நாம் மௌனமாக இருக்க இயலாது என்றும், அந்நாட்டின் மனிதாபிமான நெருக்கடியை முன்னிட்டு அங்கிருந்து வெளியேறிய மக்களை, மீண்டும் அந்நாட்டிற்கு அனுப்ப மலேசிய அரசு முடிவெடுத்திருப்பது சரியல்ல என்றும், மலேசிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

அரசியல், சமுதாய, பொருளாதார அடிப்படையில் மிகவும் நலிந்திருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, பன்னாட்டு சட்டங்களால் மட்டுமல்ல, மனிதாபிமான சட்டங்களாலும் எதிர்பார்க்கப்படும் ஒரு விழுமியம் என்று, ஆயர்கள், மலேசிய அரசிடம் கூறியுள்ளனர்.

மலேசிய ஆயர்களின் அறிக்கையைத் தொடர்ந்து, மியான்மாரிலிருந்து புலம்பெயர்ந்து வந்தோரை மீண்டும் அனுப்பும் அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு, கோலா லம்பூர் உயர் நீதிமன்றம், அரசுக்கு தடைவிதித்திருந்தையும் மீறி, அந்நாட்டு அரசு, பிப்ரவரி 23 இச்செவ்வாயன்று, 1,086 பேரை மீண்டும் மியான்மார் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மனிதாபிமானம் கொண்ட மலேசியர்கள் என்ற அடிப்படையில், இந்தப் பிரச்சனையைச் சந்திக்க மலேசிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், இந்தப் பிரச்சனையில் உதவி செய்ய, ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் ஒத்துழைப்பை விழைந்துள்ளனர்.

இதற்கிடையே, ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே மலேசிய அரசின் புலம்பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட உத்தரவு கேட்டிருந்தனர் என்பதும், அதற்கு, மலேசிய அரசு மறுப்பு தெரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.

அண்மைய ஆண்டுகளில், மியான்மார், பங்களாதேஷ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து, மலேசியாவிற்குள் தஞ்சம் புகுந்த பல்லாயிரம் பேரை, கட்டட கட்டுமானப் பணிகளுக்கென மலேசிய அரசு பயன்படுத்தி வந்துள்ளது என்றும், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியாலும், பொருளாதாரச் சரிவாலும், கடந்த ஆண்டு, அந்நாட்டு அரசு 37,000த்திற்கும் அதிகமானோரை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2021, 15:38