ஈராக் - பாக்தாத்தின் கல்தேய வழிபாட்டு ஆலயத்தில் திருத்தந்தையை வரவேற்க வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகை ஈராக் - பாக்தாத்தின் கல்தேய வழிபாட்டு ஆலயத்தில் திருத்தந்தையை வரவேற்க வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகை 

ஈராக்கில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் மீது மதிப்பு கூடும்

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம், அந்நாட்டு மக்கள் மத்தியில், கிறிஸ்தவர்கள் மீது மதிப்பு உருவாக உதவும் - எர்பில் பேராயர் வார்தா

மேரி தெரேசா :வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற வாரத்தில், ஈராக் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், ஈராக் கிறிஸ்தவர்கள் வெளிநாட்டவர் அல்ல, மாறாக, திருத்தூதர்கள் காலத்திலிருந்தே அந்நாட்டில் வாழ்ந்துவருபவர்கள் என்பதை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பு என்று, ஈராக் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஈராக் திருத்தூதுப் பயணம் பற்றி Aid to the Church in Need (ACN) எனப்படும், திருஅவையின் பிறரன்பு நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, எர்பில் பேராயர் பாஷர் வார்தா அவர்கள், ஈராக்கில் கிறிஸ்தவ சமுதாயம், பழங்காலத்திலிருந்தே  வாழ்ந்து வருகின்றது என்பதை, அந்நாட்டு மக்கள் உணர்வதில்லை என்று கூறியுள்ளார்.

ஈராக்கிலுள்ள மக்கள், கிறிஸ்தவர்களாகிய எங்களைப்பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர் எனவும், கிறிஸ்தவர்களாகிய நாங்கள், அந்நியர் அல்ல, மாறாக, அந்நாட்டின் பூர்வீக மக்கள் என்ற விழிப்புணர்வு, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தால் அதிகம் உருவாகும் என்று தான் நம்புவதாகவும், பேராயர் வார்தா அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம், அந்நாட்டு மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்கள் மீது மதிப்பு உருவாக உதவும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்துள்ள, கல்தேய வழிபாட்டுமுறையின் பேராயர் வார்தா அவர்கள், சில தீவிரவாதிகள், இத்திருத்தூதுப்பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும், சில மத அடிப்படைவாதிகள், இப்பயணம் பற்றிய செய்திகளை வெளியிடும் சமுதாய ஊடகங்கள் மீது காழ்ப்புணர்வைக் காட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

ஈராக் அதிகாரிகள் மிகுந்த அக்கறையுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், பேராயர் வார்தா அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஈராக்கில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தில், எர்பில், மொசூல், ஐஎஸ் தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட கரகோஷ் போன்ற நகரங்களில் சந்திப்புக்களை மேற்கொள்வார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2021, 14:42