ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் திருத்தந்தையை வரவேற்க வரையப்பட்டுள்ள சுவர் ஓவியம் ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் திருத்தந்தையை வரவேற்க வரையப்பட்டுள்ள சுவர் ஓவியம் 

நம்பிக்கையை வாழும் குடும்பம், திருத்தந்தையை வரவேற்கும்

கத்தோலிக்கத் திருஅவை தங்கள் மீது அக்கறை கொண்டுள்ளது என்பதை, திருத்தந்தையின் ஈராக் நாட்டு திருத்தூதுப் பயணம் உணர்த்துகிறது - குர்திஸ்தான் பேராயர் நிசார் சமான்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், அவரைச் சந்திக்கும் கிறிஸ்தவ குடும்பம், உலக அளவுகோலின்படி, வறுமைப்பட்ட, அரசியல் ஆதிக்கம் ஏதுமற்ற குடும்பமாக இருந்தாலும், கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் வாழ்ந்துவரும் குடும்பமாக இருக்கும் என்று, அந்நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் பணியாற்றும் கத்தோலிக்க பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.

ஈர்க்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள Hadiab உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Nathanael Nizar Samaan அவர்கள், பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், தன் பணித்தளத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் காட்டும் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கு ஆகிய பண்புகளைக் குறித்துப் பேசினார்.

மார்ச் 5ம் தேதி முதல் 8ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின்போது, குர்திஸ்தான் பகுதி கிறிஸ்தவர்கள், எவ்வித சுயநல எதிர்பார்ப்பும் இன்றி, திருத்தந்தையைச் சந்திப்பர் என்றும், கத்தோலிக்கத் திருஅவை தங்கள்மீது அக்கறை கொண்டுள்ளது என்பதை திருத்தந்தையின் சந்திப்பு உணர்த்துகிறது என்றும், பேராயர் நிசார் சமான் அவர்கள் கூறினார்.

மார்ச் 7ம் தேதி, எர்பில் திறந்த வெளி அரங்கில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியின் ஏற்பாடுகளை கவனித்துவரும் பேராயர் நிசார் சமான் அவர்கள், திருத்தந்தை மேற்கொள்ளும் அனைத்து சந்திப்புகளிலும், இந்த திருப்பலி ஒன்று மட்டுமே, மக்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக இருக்கும் என்று பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

ஏறத்தாழ 30,000 பேருக்கென உருவாக்கப்பட்டுள்ள எர்பில் திறந்தவெளி அரங்கில், திருத்தந்தை நிறைவேற்றும் இத்திருப்பலியில், கோவிட்-19 நெருக்கடியை முன்னிட்டு, 10,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும், இலத்தீன் மொழியில் நிறைவேற்றப்படும் இத்திருப்பலியில், அரேபிய, மற்றும் அரமேய மொழிகளில் பாடல்கள் பாடப்படும் என்றும், பேராயர் நிசார் சமான் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2021, 15:29