உலக துறவியர் நாள் திருப்பலி உலக துறவியர் நாள் திருப்பலி 

நேர்காணல்: கிறிஸ்தவத்தில் துறவறம்

பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், நவீனத்துவம், உலகமயமாதல், உரிமைக்கான போராட்டங்கள் என்று பயணிக்கும் இன்றைய உலகில், தெளிந்த மனச்சான்றுடன் நீதிக்காக நிலைப்பாடு எடுப்பது பல வேளைகளில் எட்டாக் கனியே

மேரி தெரேசா: வத்திக்கான்

பிப்ரவரி 02, இச்செவ்வாயன்று, திருஅவையில் 25வது உலக துறவியர் நாள் சிறப்பிக்கப்பட்டது. இதனையொட்டி, கிறிஸ்தவத்தில் துறவு வாழ்வு தோன்றிய விதம், அதன் தனித்துவம் மற்றும், அதன் சிறப்பம்சங்களை இன்று நம்மோடு சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறார், மரியின் ஊழியர் சபையின் அருள்பணி அமல்ராஜ் அவர்கள்.

நேர்காணல்: கிறிஸ்தவத்தில் துறவறம்

துறவற வாழ்வு

  • துறவற வாழ்வு என்பது
  • ஆன்மாவின் தேடல்...
  • அருள் வாழ்வின் நாடல்..
  • விலையில்லாப் பரிசு ...
  • நிலைவாழ்வின் நம்பிக்கை
  • விண்ணக முன்சுவை
  • நாளெல்லாம் தேடல்...
  • வாழ்வெல்லாம் பாடல்
  • அங்கிங்கெனாத வாழ்வு...
  • ஆண்டவன் சந்நிதியே தேர்வு...
  • துறவு உறவின் வரவு,
  • துறவு நிறைவின் தரவு.

ஆன்மாவின் தேடல் இறைவனில் சங்கமமாவதில்தான் முடிவடைகின்றது. இத்தேடலில் உள்ளவர்கள் சிறப்பு அழைப்புப் பெற்றுத் துறவுநிலை ஏற்றோரே எனில் அக்கூற்று மிகையன்று.... இத்தகையதொரு இறைநிலையை அடையவும், இறை அனுபவம் பெறவும் தேர்ந்தெடுக்கும் வாழ்வு முறைகளில் வசந்தம் தர வருவதே துறவறமாகும். துறவறத்தை நாம் கிறிஸ்தவத்திற்குள் மட்டும் சுருக்கிவிடாமல், ஒரு விசாலமான பார்வையோடு அணுகவேண்டும்.

கிறிஸ்தவத்தில் துறவறம்

கிறிஸ்தவ மதம் தோன்றியது முதலே வெவ்வேறு காலக்கட்டங்களில் பலதரப்பட்ட குழுக்கள் பல்வேறு வழிகளில் தங்களுடைய நம்பிக்கையை வாழ்ந்தனர். உதாரணமாக தொடக்கக் காலத்தில் கிறிஸ்தவத்தைத் தழுவிய சில கைம்பெண்கள் செபதவ மற்றும் பணி வாழ்வின் மூலமாக இறை அனுபவம் பெறத் தங்களையே அர்ப்பணித்தனர். அதைத் தொடர்ந்து பலர் மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்கொண்டு காடுகளில் இருந்தபடியே தங்களின் இறைத்தேடலைத் தொடர்ந்தனர். இவர்கள்,  கடுந்தவத்தால் தங்கள் உடலை வருத்திக்கொண்டனர். இத்தகு பின்னணியில் தொடங்கப்பட்ட துறவற வாழ்வானது, மக்களுடைய தேவைக்கு ஏற்றபடியும் காலத்தின் தேவைகளைக் கருதியும் ஒரு சில மாற்றங்களோடு இன்றும் சிறப்பானதொரு பங்களிப்பைத் திருச்சபைக்கும், உலகிற்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.  இந்த வாழ்வின் தொடர்விளைவுகளாகத்தான் நாம் வாழும் சமூகத்தின் பல இடங்களில் நாம் காணும் துறவற இல்லங்கள், ஆழ்நிலைதியான அருள்சகோதரிகள் இல்லங்கள், துறவற இல்லங்கள் போன்றவைத் திகழ்கின்றன. தொடக்க காலங்களில் பலர் துறவற வாழ்வுக்கான ஒரு பாதையை ஏற்படுத்தினர். அவர்களில் முதன்மையானவர், புனித வனத்து அந்தோணியார். இவர் உலகச் செல்வங்கள் அனைத்தையும் துறந்து காட்டிலே தங்கி தனது இறைத்தேடலைத் தொடர்ந்தார். இவரைத் தொடர்ந்து புனித பக்கோமியுஸ் என்பவர் ஆதிக் கிறிஸ்தவ வாழ்வை மையப்படுத்திய செனோபிடிக் துறவிகளின் குழுமங்களை ஏற்படுத்தினார். இவருக்குப்பின் புனித பேசில், புனித அகுஸ்தினார் போன்றோர் இறை அன்பையும், சகோதர அன்பையும் மையமாகக்கொண்ட சட்டங்களை எழுதித் துறவற மடங்களை ஆரம்பித்தனர். கிழக்கத்தியத் திருச்சபையில் பரவியிருந்த இவ்வாழ்வு முறையானது 5-வது நூற்றாண்டு முதல் புனித பெனடிக்ட் மூலம் மேற்கத்திய நாடுகளிலும் பரவத் தொடங்கியது. புனித பெனடிக்ட்டின்  பழடனநn சரடந என்று அழைக்கப்படும் ழசய நவ டயடிழசய அதாவது செப வாழ்வு மற்றும் கடின உழைப்பு எனும்  துறவற ஆன்மீகத்தைப்  பின்பற்றி அவருடைய சபை வாழ்வியல் நெறியை வகுத்தார். இவரைப் பின்பற்றி இத்தாலியின் கசினோ மலையில் வாழ்ந்த புனித ஸ்கொலாஸ்டிகா பெண்களுக்கான துறவற மடத்தை ஆரம்பித்தார்.

இத்தகைய துறவற வாழ்வு முறையை இன்னும் சிறப்புள்ளதாக்கும் வகையில் புனித நார்பெர்ட் எனும் துறவி துறவற வாழ்வையும், பங்குப் பணியையும் இணைத்துப் புதியதொரு துறவற வாழ்வு முறையை அறிமுகப்படுத்தினார். அதுவே பிற்காலத்தில் Mendicant Orders என்று அழைக்கப்படும் பிச்சை எடுத்து வாழும் சபைகள் உருவாகவும், துறவிகள் மட்டுமல்லாது பொது மக்களும் அந்தந்த ஆன்மீகத்தைப் பின்பற்றி இறைத்தேடலில் ஈடுபடும் வண்ணம் அவர்களுக்கான மூன்றாம் சபையை உருவாக்கவும் காரணமாக அமைந்தது.

மேலும், நகர்ப்புறம் மற்றும், பெருநகர மக்களுடைய வாழ்வில் ஏற்பட்ட ஆன்மீக வறட்சியையும், ஒழுக்கக்கேட்டையும் சரி செய்து சீர் திருத்தும் நோக்கோடு சில சபைகள் தொடங்கப்பட்டன. அவைகளுள், பிரான்சிஸ்கன் சபை, கார்மேல் சபை, புனித தொமினிக் சபை, புனித அகுஸ்தினார் சபை மற்றும், மரியின் ஊழியர் சபை போன்றவைகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். இச்சபைகளின் ஆன்மீகத்தைப் பின்பற்றிப் பலப் பெண் துறவற சபைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறு மலர்ந்த துறவற வாழ்வில் காலப்போக்கில் சில சிக்கல்கள் உருவாகின. இது 16-வது நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட திரிதெந்தின் சங்கத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. மக்களின் தேவைக்கும், காலத்திற்கும் ஏற்ற துறவற வாழ்வு முறைகளை அடிப்படையாகக்கொண்ட அப்போஸ்தலிக்க சபைகள் உருவாவதற்கு இச்சங்கமானது வழிகோலியது. இதை அடிப்படையாகக்கொண்டு சபையை நிறுவியவர்களுள் புனித வின்செனட் தே புவுல் குறிப்பிடத்தக்கவராவார்.

நாம் வாழும் இந்நூற்றாண்டில் மக்களை மையப்படுத்திய திருச்சபையை உருவாக்க விரும்பி திருத்தந்தை புனித 12-வது பத்திநாதர், துறவறவாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். இவரைத் தொடர்ந்து, துறவற வாழ்வை மேம்படுத்தும் வண்ணம் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமானது, துறவற வாழ்வைப் புதுப்பித்து அதற்குப் புதுவாழ்வும், புது மெருகும் அளிக்கவேண்டும் என்னும் அழைப்பை “துறவற வாழ்வைப் புதுப்பித்தல்” என்னும் தனது ஏட்டின் வழியாகத்  தருகின்றது.  இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழிகாட்டுநெறியானது  துறவு மலர்ந்திடவும், உறவு வளர்ந்திடவும், இயேசுவின் பின்னே நாம் அனைவரும் சென்று அவர் விரும்பிய விண்ணரசைக் கட்டி எழுப்பிட வழிவகுக்கின்றது.

இறுதியாக, அறுதியாக…!!!

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு” (குறள் எண். 350)

அதாவது, ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க: அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே, எனும் அய்யன் வள்ளுவனின் ஆன்மீகத் தேடலுக்கான நெறி காட்டுதலும், வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுத்த இயேசு பெருமானின் ஆன்மீகத் தேடலுக்கான வரவேற்பும் இன்றைய துறவிகளின் வாழ்வுக்கு அழகு சேர்க்கிறது. இனம், மதம், மொழி, நிறம், பண்பாட்டுச் சூழல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, நவீனத்துவம், தொழில்நுட்ப வளர்ச்சி, உலகமயமாதல், உரிமைக்கான போராட்டங்கள் என்று பயணிக்கும் இன்றைய உலகில் நீதியின் பக்கம் நின்று குரல் கொடுப்பதும் தெளிந்த மனச்சான்றுடன் நீதிக்காக நிலைப்பாடு எடுப்பதும் பல வேளைகளில் எட்டாக் கனியே…

எனினும் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்னும் அணிகலன்களை அணிகலன்களை அணிந்தவர்களாய் இயேசு பெருமான் காட்டிய அன்பு நெறியிலும், ஆன்மீகத் தேடலிலும், தன்னையே பலியாக்கும் வெறுமையான வாழ்விலும் மகிழ்ந்துநின்று கல்விப் பணி, சமூகப் பணி, மருத்துவப் பணி, ஆற்றுப்படுத்தும் பணி என்று அனைத்துப் பணிகளிலும் இயேசுவின் நற்செய்தி விழுமியங்களையே மையமாக்கித் தங்களையே இறையாட்சிப் பணியில் கரைத்துக்கொண்டு பணிபுரியும் துறவியர் அனைவரும் திருஅவையின் வரங்களே. துறவு உறவின் வரவு, துறவு நிறைவின் தரவு. எனவே,  துறவற வாழ்வில் எதிர்ப்படும் சவால்களை இன்முகத்துடன் ஏற்று வெண்மறை சாட்சிய வாழ்வு வாழ்ந்து தங்களையே இறைவனுக்காக அர்ப்பணித்திருக்கும் துறவியர் அனைவரின் பணிகளைப் போற்றுவோம். அவர்களின் தியாகங்களைப் பாராட்டுவோம். அவர்களின் அர்ப்பணத்தை வாழ்த்துவோம்.

அருட்தந்தை அமல்ராஜ், மஊச

புனித மர்ச்செல்லோ இல்லம், உரோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2021, 15:05