“Fratelli tutti” திருமடல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது “Fratelli tutti” திருமடல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது  

“Fratelli tutti” ஏட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு

“அனைவரும் உடன் பிறந்தோர்” என்ற திருமடல், இந்திய மொழியொன்றில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “Fratelli tutti” (“அனைவரும் உடன் பிறந்தோர்”) என்ற திருமடலின் தமிழ் மொழிபெயர்ப்பு, அண்மையில் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவையின் அரையாண்டு அமர்வின்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக கத்தோலிக்க எழுத்தாளரும், சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல அதிபருமான அருள்பணி வின்சென்ட் சின்னதுரை அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தில் கூடிய தமிழக ஆயர்களின் கூட்டத்தில், சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை தலைவர், கர்தினால் Baselios Cleemis அவர்களால் வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட “Fratelli tutti” என்ற திருமடல், இந்திய மொழிகளில் முதன்முறையாக, தமிழில் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப்பணிக் காலத்தில் வெளியிட்ட இந்த மூன்றாவது ஏட்டினை (Lumen fidei - 29 ஜூன் 2013, Laudato si' - 24 மே 2015) அருள்பணி வின்சென்ட் சின்னதுரை அவர்கள், தமிழில் மொழிபெயர்க்க, திருச்சிராப்பள்ளி, தமிழக சமூகப்பணி மையம், இதனை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

தமிழக ஆயர் பேரவை கூட்டத்தில், இந்நூல், கர்தினால் கிளிமீஸ் அவர்களால் வெளியிடப்பட, அதன் முதல் பிரதிகளை, தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஆன்டனி பாப்புசாமி, மற்றும், சென்னை-மயிலைப் பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

புனித அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு உட்பட, ஏற்கனவே 9 நூல்களை தமிழில் எழுதியுள்ள அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை அவர்கள், 'நம்வாழ்வு' தமிழக கத்தோலிக்க இதழின் ஆசிரியராகவும், தமிழக அரசின் சிறுபான்மை  சமுதாயத்திற்கான துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளதுடன், சென்னை பல்கலைக் கழகத்திடமிருந்து பொது நிர்வாக மேலாண்மையில் (Public Administration) முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2021, 15:09