யாழ் என்ற இசைக்கருவியை மீட்டுவதில் சிறந்தவரான மன்னர் தாவீது யாழ் என்ற இசைக்கருவியை மீட்டுவதில் சிறந்தவரான மன்னர் தாவீது 

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் நூல் - அறிமுகம் 5

இசையில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்த மன்னர் தாவீது காலத்தில் திருப்பாடல்கள் உருவாக ஆரம்பித்தன என்பதில் ஐயமில்லை.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் நூல் - அறிமுகம் 5

கவிதையாக, பாடலாக, இறைவேண்டலாக, பல வடிவங்களில் தோன்றும் திருப்பாடல்கள் நூலில், கடந்த 4 வாரங்களாக நாம் மேற்கொண்ட அறிமுகத் தேடல் முயற்சி இன்று தொடர்கிறது. ஞான இலக்கியம் (wisdom literature) என்றும் அழைக்கப்படும் இந்நூலில், மனித வாழ்வின் பல ஆழமான அனுபவங்கள், மற்றும் உணர்ச்சிகள், பல பாடல்களில் ஒலிப்பதை நாம் உணரலாம்.

பழைய ஏற்பாட்டின் பல நூல்களில், இறைவன், மனிதர்களிடம் பேசும் கூற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தன் கட்டளைகள் வழியாகவும், இறைவாக்கினர்களின் வழியாகவும், இறைவன் தன் மக்களுடன் பேசுவதை பல நூல்கள் பதிவுசெய்துள்ளன. திருப்பாடல்கள் நூலில் மட்டும், 150 பாடல்களில் காணப்படும் பெரும்பாலான வரிகள், மனிதர்கள் இறைவனிடம் பேசும் கூற்றுகளாக அமைந்துள்ளன. எனவேதான், இந்நூல் கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் யூத மரபுகளில், தனித்துவம் மிக்க ஓர் இறைவேண்டல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2011ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கிய ஒரு புதன் மறைக்கல்வி உரையில், திருப்பாடல்கள் நூல் எவ்விதம் தனித்துவம் மிக்கதோர் இறைவேண்டல் நூல் என்பதை இவ்வாறு விளக்கியுள்ளார்:

விவிலியத்தில் நாம் காணும் பல இறைவேண்டல்கள், ஒரு குறிப்பிட்டச் சூழலில், இடம்பெறுவதால், அவற்றின் பொருள், அந்தந்த சூழல்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருப்பாடல்கள் நூலில் காணப்படும் இறைவேண்டல்கள், எவ்வித வரலாற்று நிகழ்வுடனோ, சூழலுடனோ தொடர்புள்ளவை அல்ல. எனவே, இந்நூலில் காணப்படும் இறைவேண்டல்கள், ஒவ்வொருவரும், அவரவரது தேவை, சூழல், மனநிலை ஆகியவற்றிற்கு ஏற்ப எழுப்பப்படும் இறைவேண்டல்களாக மாறுகின்றன. இவ்வகையில், திருப்பாடல்களை நாம் செபிக்கும்போது, நாம் இறைவேண்டலைக் குறித்த பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். இந்நூல் இறைவேண்டலின் பள்ளியாக அமைந்துள்ளது.

குழந்தையொன்று பேசப் பழகும்போது, தன் உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்த, பெற்றோர் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்துகிறது. நாளடைவில், அச்சொற்களின் உண்மைப் பொருளை உணர்ந்து, அவற்றை தன் சொந்த எண்ணங்களாக, சொற்களாக மாற்றுகிறது. பெற்றோர் சொல்லித்தரும் சொற்கள் வழியே, அக்குழந்தை, தன்னைப்பற்றி, உலகைப்பற்றி, கடவுளைப்பற்றி தன் எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறது.

திருப்பாடல்களில் உள்ள இறைவேண்டல்களில் இதையொத்த அனுபவம் நமக்கு ஏற்படுகிறது. இறைவனுடன் தொடர்புகொள்ள, திருப்பாடல்களில் வழங்கப்பட்டுள்ள சொற்களை நாம் பயன்படுத்த துவக்குகிறோம். அவை, நாளடைவில், நம் உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்தும் சொற்களாக மாறும் வலிமை பெறுகின்றன.

திருப்பாடல்கள் நூலில் காணப்படும் 150 பாடல்களையும், ஒரு தனி மனிதர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எழுதவில்லை. இந்நூலின் 150 பாடல்களில், 73 பாடல்கள், மன்னர் தாவீதால் எழுதப்பட்டன என்பது, பல விவிலிய ஆய்வாளர்கள் நடுவே நிலவும் கருத்து. அவரைத் தவிர, அசாப், ஏமான், கோரா, ஈதன், சாலமோன், மோசே ஆகியோர் உருவாக்கிய பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 51 திருப்பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்பது தெரியவில்லை.

இந்நூல், யாரால் எழுதப்பட்டது என்பதில், வெவ்வேறு கருத்துக்கள் இருப்பதுபோல், இந்நூல் எப்போது எழுதப்பட்டது என்பதிலும் பல கருத்துக்கள் நிலவிவருகின்றன. தாவீது, மன்னராகப் பொறுப்பேற்றபின், இந்நூலின் உருவாக்கம் ஆரம்பமானது. தாவீது, இசையில் ஈடுபாடு கொண்டவர் என்பதும், யாழ் என்ற இசைக்கருவியை மீட்டுவதில் அவர் சிறந்தவர் என்பதும் சாமுவேல் முதல் நூலில் கூறப்பட்டுள்ளது. (காண். 1 சாமு. 16:14-23). மன்னன் சவுல் தீய ஆவியால் வதைக்கப்பட்ட வேளைகளில் தாவீது யாழை மீட்ட, தீய ஆவி சவுலை விட்டு நீங்கியது என்பதை, நாம் இந்நூலில் காண்கிறோம்: அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார். (1 சாமு. 16:23)

சவுலுக்குப் பின் அரியணையேறிய தாவீது, கோவிலில் பாடகர் குழுவை உருவாக்கினார் என்பதை, குறிப்பேடு முதல் நூலில் வாசிக்கிறோம். "தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது, தம் மகன் சாலமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினார்" (1 குறிப்பேடு 23:1) என்று குறிப்பேடு முதல் நூலின் 23ம் பிரிவு துவங்குகிறது. தான் பணிஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தாவீது, கோவில் வழிபாட்டில் அக்கறை காட்டி, அங்கு ஆயிரக்கணக்கான பணியாளர்களை நியமித்தார் என்பதை, இதே பிரிவில் நாம் தொடர்ந்து இவ்வாறு காண்கிறோம்: "அவர்களுள் இருபத்து நாலாயிரம் பேரை ஆண்டவரின் இல்லப் பணிகளுக்குப் பொறுப்பாளராகவும், ஆறாயிரம் பேரை அலுவலர், நீதிபதிகளாகவும், நாலாயிரம் பேரை வாயில்காப்போராகவும், நாலாயிரம் பேரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தார்." (1 குறி. 23:4-5)

இவ்வாறு, இசையில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்த மன்னர் தாவீது காலத்தில் திருப்பாடல்கள் உருவாக ஆரம்பித்தன என்பதில் ஐயமில்லை. அடுத்துவந்த 500 ஆண்டுகளாக, பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப, திருப்பாடல்கள் உருவாக்கப்பட்டன. பாபிலோன் அடிமைத்தனத்தில் இஸ்ரயேல் மக்கள் துன்புற்ற காலம் வரை, உருவாக்கப்பட்ட திருப்பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பாபிலோனிய அடிமைத்தனத்தைப் பற்றிய குறிப்பு, 137ம் திருப்பாடலில் இவ்வாறு காணப்படுகிறது:

  • திருப்பாடல் 137:1-4
  • பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ‘சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர். ஆண்டவருக்கு உரித்தாகும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?

இவ்வாறு, தாவீது, மன்னராக ஆட்சி செய்த காலம் முதல், பாபிலோனிய நாட்டில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக துன்புற்ற காலம் வரையிலான 500 ஆண்டுகளில் உருவான பாடல்களும், இறைவேண்டல்களும், திருப்பாடல்கள் நூலாக வடிவம் பெற்றன.

திருப்பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ள 150 பாடல்கள், 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 41 முடிய, முதல் பகுதி, 42 முதல் 72 முடிய, 2வது பகுதி, 73 முதல் 89 முடிய, 3வது பகுதி, 90 முதல் 106 முடிய, 4வது பகுதி, மற்றும் 107 முதல் 150 முடிய, 5வது பகுதி என்று, இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து பகுதிகளும், ஏன், எவ்வாறு உருவாயின என்பதற்கு, தெளிவான காரணங்கள் சொல்லப்படவில்லை. எனினும், இந்த ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மையக்கருத்து கூறப்பட்டுள்ளதாக விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முதல் 41 திருப்பாடல்களின் தொகுப்பாக இருக்கும் முதல் பகுதி, தாவீதின் வாழ்வு அனுபவங்களை வழங்குகிறது. இப்பகுதியில், "ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை" என்ற உலகப் புகழ் பெற்ற 23ம் திருப்பாடல் இடம்பெற்றுள்ளது.

42 முதல் 72 முடிய உள்ள 2வது பகுதி, தாவீதைப் பற்றியும், அவரது அரசின் அனுபவங்களைப் பற்றியும் கூறுகிறது. இப்பகுதி, "கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது" (தி.பா. 42:1) என்ற புகழ்பெற்ற பாடலுடன் ஆரம்பமாகிறது.

திருப்பாடல் 73 முதல் 89 முடிய உள்ள 3வது பகுதி, துயர் நிறைந்த தொனியில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, "ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன். என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!" (தி.பா. 88:1) என்ற வேண்டுதல் 88வது திருப்பாடலில் எழுகிறது.

4வது பகுதியில், அனைத்திற்கும் மேலான இறைவனை, அரசராக உருவகித்து பாடல்கள் அமைந்துள்ளன. இதோ, இரு எடுத்துக்காட்டுகள்:

  • திருப்பாடல் 93 1
  • ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்; பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
  • திருப்பாடல் 97 1
  • ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவுநாடுகள் களிகூர்வனவாக!

5வது பகுதி பல்வேறு உணர்வுகளின் சங்கமமாக அமைந்திருந்தாலும், 'கொண்டாடுங்கள்' என்ற அழைப்புடன் நிறைவு பெறுகிறது. குறிப்பாக, 148வது திருப்பாடல், விண்ணுலகிலும், மண்ணுலகிலும் வாழ்வோர் அனைவரையும், ஆண்டவரைப் புகழ்வதற்கு அழைப்பு விடுக்கிறது: "அல்லேலூயா! விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள். அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். கதிரவனே, நிலாவே, அவரைப் போற்றுங்கள்; ஒளிவீசும் விண்மீன்களே, அவரைப் போற்றுங்கள்" (தி.பா. 148:1-3) என்று ஆரம்பமாகும் இத்திருப்பாடல், "இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்" (தி.பா. 148:12) என்ற அழைப்புடன் நிறைவு பெறுகிறது. இந்த 5வது பகுதியின் இறுதிப்பாடலாக அமைந்துள்ள 150வது திருப்பாடல், இசைக்கருவிகளுடன் அனைவரும் இணைந்து பாடுவதற்கு அழைப்பு விடுக்கிறது.

தாவீது என்ற தனி மனிதரின் அனுபவங்களிலிருந்து துவங்கி, அனைத்துலகும் ஆண்டவரைப் போற்றிப்பாடும்படி அழைப்பு விடுப்பது வரை, திருப்பாடல்கள் நூல், கவிதைகளாக, பாடல்களாக, இறை வேண்டல்களாக, விவிலியத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இந்நூல், கத்தோலிக்கத் திருஅவைக்கு மட்டுமில்லாமல், கிறிஸ்தவ உலகத்திற்கும், யூத உலகத்திற்கும் ஒரு முக்கிய நூலாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2021, 12:49