தாய்லாந்தில் வாழும் கூட்டுக்குடும்பம் தாய்லாந்தில் வாழும் கூட்டுக்குடும்பம் 

மகிழ்வின் மந்திரம் : தனி நபரா, குடும்ப உறவா?

குடும்பப் பிணைப்புகளை வலுவிழக்கச் செய்யுமளவு, தனி நபர் தத்துவம் என்ற கருத்து ஓர் ஆபத்தாக வளர்ந்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 2ம் பிரிவை, 'குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும்' என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார். இப்பிரிவில், 'குடும்பத்தின் இன்றைய உண்மை நிலை' என்ற துணைப் பகுதியில், 21ம் நூற்றாண்டில் குடும்பங்களில் காணப்படும் எதார்த்தங்களை, 18 பத்திகள் (எண் 32-49) வழியே விளக்க முற்பட்டுள்ளார் திருத்தந்தை.

சமுதாயத்தில் நிலவும் மானிடவியல் சார்ந்த, கலாச்சார மயமான மாற்றங்கள், குடும்பத்திலும் நுழைந்துள்ளன என்பதை, 32ம் பத்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, 33ம் பத்தியில், குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தருவதால், குடும்ப உறவுகளில் உருவாகும் பாதிப்புக்களை இவ்வாறு விளக்கிக் கூறியுள்ளார்:

"குடும்பப் பிணைப்புகளை வலுவிழக்கச் செய்யுமளவு, தனி நபர் தத்துவம் என்ற கருத்து ஓர் ஆபத்தாக வளர்ந்துள்ளது. குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், தனிமைப்படுத்தப்பட்ட அலகு என்றும், அவரவரது குணநலன், தனிப்பட்ட விருப்பங்களால் உருவாக்கப்படுகின்றது என்றும் கூறுவது ஆபத்தானது. தனிநபர் கலாச்சாரம், சகிப்பற்ற நிலையையும், பகைமையையும் குடும்பங்களில் உருவாக்குகிறது.

இவ்வேளையில், விரைந்து செல்லும் இன்றைய வாழ்வு, மன அழுத்தம், சமுதாயக் கட்டமைப்பு, தொழில் ஆகிய சமுதாயக் கூறுகளை இங்கு நினைத்துப் பார்க்கிறோம். உறுதியற்ற, தெளிவற்ற நிலையை நாம் சந்திக்கிறோம். அனைவரும் ஒரே விதமாக சிந்திக்காமல், தனித்துவமான சிந்தனை கொண்டிருப்பதை நாம் மதிக்கிறோம். இது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகளை, சிறப்பாகப் பயன்படுத்த உதவியாக இருந்தாலும், சந்தேகம் கொள்ளுதல், நீண்டகால உறவுகொள்வதற்கு தயக்கம், சுயநலம், மற்றும், ஆணவம் ஆகியவற்றையும் வளர்க்கின்றது.

நம் வாழ்வைத் திட்டமிட, தனிப்பட்ட சுதந்திரம் உதவியாக இருப்பினும், மற்றவர்களுக்காக தாராள மனதுடன் நம்மை வழங்க இயலாமல் போகிறது. பல நாடுகளில், திருமணங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. தனித்து வாழ்வதையோ, அடுத்தவருடன் சேர்ந்து வாழாமல், அவ்வப்போது சந்திப்பதையோ மக்கள் தெரிவு செய்கின்றனர்." (அன்பின் மகிழ்வு 33)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2021, 14:08