இந்தோனேசியா: குடும்ப இறைவேண்டல் இந்தோனேசியா: குடும்ப இறைவேண்டல் 

மகிழ்வின் மந்திரம்: குடும்ப இறைவேண்டலின் பயன்

ஒவ்வொரு குடும்பமும், நாசரேத்து திருக்குடும்பத்தை எடுத்துக்காட்டாய் கொண்டிருக்கவேண்டும் (அன்பின் மகிழ்வு 30)

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பின் மகிழ்வு (Amoris Latitia) என்ற தனது திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவின் நிறைவாக, “ஓர் அரவணைப்பில் மென்மை” என்ற தலைப்பில் (பத்திகள் 27-30) பதிவுசெய்துள்ள சிந்தனைகளில், மனிதக் குடும்பங்களுக்கும், மூவொரு கடவுளுக்கும் இடையேயுள்ள உறவுகள் பற்றி சிந்திக்க அழைப்புவிடுத்துள்ளார்.

இந்த உறவை, நம்பிக்கை மற்றும், அன்பு, அருள் மற்றும், பிரமாணிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்தூன்றி சிந்திப்போம். குடும்பம், ஓர் ஆண், ஒரு பெண், மற்றும், அவர்களது பிள்ளைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று இறைவார்த்தை நமக்குச் சொல்கின்றது. இறைத்தந்தை, மகன், மற்றும், தூய ஆவியாரின் ஒன்றிப்பு உருவில் மாறும்பொருட்டு, இவ்வாறு கடவுள் அக்குடும்பத்தை அமைத்தார். குடும்பம், தன் பங்காக, பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பதில், கடவுளின் படைப்பாற்றல் பணியைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு நாளும், குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து இறைவேண்டல் செய்யவும், இறைவார்த்தையை வாசிக்கவும், திருநற்கருணை கொண்டாட்டத்தில் பங்குகொள்ளவும் அழைக்கப்படுகின்றனர். இதனால், குடும்பம், அன்பில் வளர்கின்றது. தூய ஆவியார் குடியிருக்கும் ஆலயமாகவும் மாறுகின்றது. (அன்பின் மகிழ்வு எண் 29)

ஒவ்வொரு குடும்பமும், நாசரேத்து திருக்குடும்பத்தை எடுத்துக்காட்டாய் கொண்டிருக்கவேண்டும். திருக்குடும்பம், ஏரோதின் இரக்கமற்ற வன்முறையை எதிர்கொண்டபோது அனுபவித்ததைப் போல், ஒவ்வொரு குடும்பமும் தன் அன்றாட வாழ்வில், சுமைகளையும், அச்சுறுத்தும் கனவுகளையும் கொண்டிருக்கின்றது. திருக்குடும்பம் அனுபவித்த துன்பங்கள், இன்றைய நம் காலத்திலும், புறக்கணிக்கப்பட்டும், ஆதரவற்றும் இருப்பதாக உணரும் புலம்பெயர்ந்த பல குடும்பங்களைத் தொடர்ந்து தாக்கிவருகின்றன. கீழ்த்திசை மூன்று ஞானிகளைப் போல, நமது குடும்பங்களும், குழந்தையையும், அதன் தாயையும் தியானித்து, அக்குழந்தையை நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்க (காண்க.மத்.2:11) அழைக்கப்படுகின்றன. மரியாவைப் போன்று, குடும்பங்களும், தாங்கள் சந்திக்கும் சவால்களை, இன்ப மற்றும், துன்பக் காலங்களில், துணிவோடும், மனஅமைதியோடும் எதிர்கொள்ளவும், கடவுள் ஆற்றிய மாபெரும் செயல்களை (காண்க.லூக்.2:19,51) தங்களின் உள்ளத்தில் இருத்தவும் அழைக்கப்படுகின்றன. மரியாவின் இதயத்தின் கருவூலம் ஒவ்வொரு குடும்பத்தின் அனுபவங்களிலும் உள்ளது. இதனால், மரியா, இந்த அனுபவங்களின் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளவும், நம் குடும்பங்களின் வாழ்வு வழியாக,கடவுள் வெளிப்படுத்த விரும்பும் செய்தியைக் கேட்கவும், நமக்கு உதவுகிறார். (அன்பின் மகிழ்வு 30)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2021, 14:57