கொலம்பியாவில் தொழிலாளர்கள் கொலம்பியாவில் தொழிலாளர்கள் 

மகிழ்வின் மந்திரம்: வேலைவாய்ப்பின்மை உருவாக்கும் துன்பங்கள்

பல நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, குடும்ப வாழ்வின் அமைதியைக் குலைக்கின்றது. இந்நிலை கவலை தருகின்றது (அன்பின் மகிழ்வு 25)

மேரி தெரேசா: வத்திக்கான்

தெசலோனிக்க கிறிஸ்தவர்களிடம், உழைப்பின் உன்னதத்தை, உழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்க விரும்பிய பவுலடிகளார், “உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” (2தெச.3:10) என்பதை, கண்டிப்பான ஓர் கட்டளையாகவே கூறியிருக்கிறார். ஆனால், மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது, ரூத் நூலிலும், நகரத்தின் சந்தைவெளியில் வேலையின்றி நின்றுகொண்டிருந்த தொழிலாளர்கள் பற்றி இயேசு கூறிய உவமையிலும் (மத்.20:1-16), வறுமை மற்றும், பசியால் துன்புறும் மக்களைச் சந்தித்தபோது இயேசுவுக்கு கிடைத்த சொந்த அனுபவத்திலும் கூறப்பட்டுள்ளதுபோன்று, வேலைவாய்ப்பின்மை, மற்றும், நிரந்தர வேலையின்மையால் உருவாக்கப்பட்டுள்ள துன்பங்களையும் நாம் உணர்ந்து பார்க்கலாம். இன்றும் பல நாடுகளில் இத்தகைய எதார்த்தங்கள் நிலவுவது கவலை தருகின்றது அந்நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை, குடும்ப வாழ்வின் அமைதியைக் குலைக்கின்றது (அன்பின் மகிழ்வு 25).

மேலும், பாவத்தால் கொணரப்படும் சமுதாய இனஅழிவையும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக, மனிதர், இயற்கையை துன்புறுத்தும்போதும், அதை தன்னலத்தோடும், ஏன் இன்னும் அதைக் கூடுதலாக கொடுமையாய் நாசம்செய்யும்போதும் ஏற்படும் சிதைவுகளுக்கு நாம் புறமுதுகு காட்ட முடியாது. இது, இப்பூமியை தரிசாக மாற்றுவதற்கும், (காண்க.தொ.நூ.3:17-19), இறைவாக்கினர் எலியா (காண்க.1அரச.21) தொடங்கி இறைவாக்கினர்களால் கடிந்துகொள்ளப்பட்ட சமுதாய மற்றும், பொருளாதார சமத்துவமின்மைக்கும், இட்டுச்செல்கின்றது. இந்தக் கண்டனம், அநீதிகளுக்கு எதிராக இயேசு கூறிய வார்த்தைகளிலே உச்சகட்டத்தை அடைகிறது (காண்க.லூக்.12:13;16:1-31). (அன்பின் மகிழ்வு 26).

அன்பின் மகிழ்வு (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலில், “உங்கள் கரங்களில் உழைப்பு” என்ற துணைத் தலைப்பு எண்கள் 25,26ல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2021, 15:00