தமிழக கிறிஸ்தவர்கள் தமிழக கிறிஸ்தவர்கள் 

சனவரி 2021, அன்பிய மாதம், அனைவரும் உடன்பிறந்தோர்

அனைவரும் உடன்பிறந்தோரே என்ற திருத்தூது மடலில் உள்ள எட்டுத் தலைப்புக்களில், ஐந்து தலைப்புக்களை ஒவ்வொரு ஞாயிறு திருவழிபாட்டின் மையப்பொருளாக எடுத்து, அதுபற்றி கத்தோலிக்கர் அனைவரும் ஒன்றிணைந்து சிந்தித்து செயல்பட அழைப்பு - ஆயர் அருளப்பன் அமல்ராஜ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2021ம் ஆண்டு சனவரி மாதத்தை அன்பிய மாதமாகக் கொண்டாடுமாறு, தமிழக கத்தோலிக்கர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளாது, தமிழக ஆயர் பேரவையின் அன்பியப் பணிக்குழு.

தமிழக ஆயர் பேரவையின் அன்பியப் பணிக்குழுவின் தலைவரான, ஊட்டி மறைமாவட்ட ஆயர் அருளப்பன் அமல்ராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், அனைவரும் உடன்பிறந்தோரே என்ற அண்மை திருத்தூது மடலை மையமாகக்கொண்டு, தமிழகத்தில் அன்பிய மாதம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த கொரோனா பெருந்தொற்றின் பிந்தைய சூழ்நிலையில், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும், ஆயர்களின் அறிவுறுத்தல்களின்படி செயல்பட்டு, அன்பியங்களிலே ஈடுபடுமாறு கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், ஆயர் அமல்ராஜ்.

அனைவரும் உடன்பிறந்தோரே என்ற திருத்தூது மடலில் கூறப்பட்டுள்ள எட்டுத் தலைப்புக்களில், ஐந்து தலைப்புக்களை ஒவ்வொரு ஞாயிறு திருவழிபாட்டின் மையப்பொருளாக எடுத்து, அதுபற்றி கத்தோலிக்கர் அனைவரும் ஒன்றிணைந்து சிந்தித்து செயல்படுமாறும் ஆயர் அமல் ராஜ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

நமது திருத்தந்தையின் போதனைகளின்படி பொதுநலனுக்காக, அன்பியங்களிலும் சமுதாயத்திலும், ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும், அதற்கு, இந்த அன்பிய மாதம், ஓர் உத்வேகத்தைக் கொடுக்கும் என்றும், ஆயரின் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையில், ஆயர் அமல்ராஜ் அவர்களும், அப்பணிக்குழுவின் செயலர் அருள்பணி ஜோசப் ஜஸ்டஸ் அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், தமிழகத் திருஅவை, 2021ம் ஆண்டை, இளைஞர் ஆண்டாகவும் சிறப்பிக்கின்றது. (Ind.Sec/Tamil)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2021, 14:58