இயேசுவுடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில், அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.  Marco 1:21-22 இயேசுவுடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில், அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். Marco 1:21-22 

பொதுக்காலம் 4ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

'அதிகாரம்' என்ற சொல்லின் உண்மையான இலக்கணத்தைப் புரிந்துகொள்ள, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நம்மை அழைக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

அடர்ந்த இருளும், புயலும் சூழ்ந்திருந்த ஓர் இரவில், பிரம்மாண்டமான போர்க்கப்பல் ஒன்று, கடலில் பயணித்துக்கொண்டிருந்தது. கப்பலின் மேல்தளத்தில், காவலில் இருந்த ஒரு வீரர், திடீரென கத்தினார். "நாம் செல்லும் பாதையில் எதிரே விளக்கு ஒன்று தெரிகிறது" என்று அவர் கத்தியதும், கப்பல் தலைவர், எதிரே வரும் கப்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், செய்தியொன்றை அனுப்பினார். "நாம் எதிரெதிராக மோதும் பாதையில் இருக்கிறோம். நீங்கள் உங்கள் பாதையை, 20 டிகிரி, கிழக்கு புறம் திருப்புங்கள்" என்ற அவசர செய்தியை அனுப்பினார். விரைவில் அச்செய்திக்கு பதில் வந்தது: "நீங்கள் உங்கள் பாதையை, 20 டிகிரி, மேற்கு புறமாகத் திருப்புங்கள்" என்று பதில் செய்தி வந்ததும், கப்பல் தலைவர் மிகுந்த கோபம் கொண்டார்.

"நான் ஒரு மாபெரும் கப்பலின் தலைவன் சொல்கிறேன். உங்கள் பாதையை மாற்றுங்கள்" என்ற செய்தி மீண்டும் பறந்தது. "நான் ஒரு சாதாரண தொழிலாளி. இருந்தாலும், நான் சொல்கிறேன், உங்கள் பாதையை மாற்றுங்கள்" என்று பதில் செய்தி பறந்து வந்தது. "நான் ஒரு பெரிய போர்க்கப்பலிலிருந்து பேசுகிறேன்... எச்சரிக்கை. நீ யார்?" என்ற எச்சரிக்கையையும், கேள்வியையும் கப்பல் தலைவர் அனுப்பினார். "நான் ஒரு கலங்கரை விளக்கத்திலிருந்து பேசுகிறேன். நீங்கள் உங்கள் பாதையை மாற்றுவது நல்லது" என்று பதில் செய்தி வந்தது.

தன்னிடம் இருப்பது ஒரு பிரம்மாணடமான போர்க்கப்பல் என்ற மமதையில், கப்பலின் தலைவர், தன் அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றார். கலங்கரை விளக்கத்தின் பணியாளரோ, உண்மையைப் புரியவைக்க முயன்றார். அதிகாரத்தின் அடித்தளம், பதவியா, உண்மையா என்ற கேள்வியை இந்தக் கதை நம்முன் வைக்கிறது.

இந்தக் கதையை, ஓர் உவமையாக எண்ணிப்பார்த்தால், இன்றைய உலகின் அதிகார வெறியாட்டங்களை, ஓரளவு புரிந்துகொள்ளலாம். இன்றைய உலகில், பல நாடுகளின் தலைவர்கள், அந்தப் போர்க்கப்பலின் தலைவரைப்போல், தாங்கள் அனைத்து சக்தியும் கொண்டவர்கள் என்ற மமதையில், தங்கள் அதிகாரத்தை அத்துமீறி பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசு என்ற கப்பலை, சரியான திசையில் செலுத்த உதவியாக, அவர்களுக்கு வழிகாட்டுவதற்கென்று நிறுவப்பட்டுள்ள நீதி, உண்மை என்ற கலங்கரை விளக்கங்களுடன் மோதி வருகின்றனர். கடந்த ஒராண்டளவாக, அதிகாரமும், உண்மையும் பல நாடுகளில் மோதிவருவதை நாம் அறிவோம்.

கண்ணுக்கும், கருத்துக்கும் புலப்படாத கோவிட்-19 என்ற கிருமியும் அதன் உறவினர்களாகத் தோன்றியிருக்கும் ஏனையக் கிருமிகளும், மனித உயிர்கள் மீது கொண்டுள்ள தணியாத வெறியை விஞ்சும் அளவு, உலகத் தலைவர்கள் பலர், கடந்த ஓராண்டளவாக, அதிகார வெறியை அளவின்றி வளர்த்துள்ளதை நாம் காண்கிறோம். சீனா, இந்தியா, இலங்கை, இஸ்ரேல், இரஷ்யா, பிலிப்பீன்ஸ், ஹங்கேரி, அமெரிக்க ஐக்கிய நாடு,  பெலாருஸ், துருக்கி, என, பல நாடுகளில், அதிகாரத்தில் இருப்போர், பல்வேறு வழிகளில், மக்கள் மீது, அடக்குமுறைகளை, நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்டிவருகின்றனர்.

தொற்றுக்கிருமிகளைப் பற்றி ஊடகங்கள் ஊட்டிவரும் அச்சமூட்டும் செய்திகளின் தாக்கத்தால், மக்கள், எவ்வித எதிர்ப்பையும் காட்டஇயலாமல் அடைபட்டிருக்கும் நிலையை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இத்தலைவர்களின் செயல்பாடுகள், 'அதிகாரம்' என்ற சொல்லுக்கு தவறான இலக்கணங்கள்! இத்தகையச் சூழலில், அதிகாரத்தின் உண்மையான இலக்கணத்தைப் புரிந்துகொள்ள, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நம்மை அழைக்கின்றன.

இறைவாக்கினர் என்ற பொறுப்பை ஏற்பவர் எத்தகையவராய் இருக்கவேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் (இணைச்சட்டம் 18: 15-20) நமக்குச் சொல்லித்தருகிறது. மறைநூல் அறிஞரைப் போலன்றி, தனிப்பட்ட ஓர் அதிகாரத்துடன் இயேசு கற்பித்தார் என்று, இன்றைய மாற்கு நற்செய்தி நமக்குச் சொல்கின்றது. (மாற்கு 1: 21-28)

இயேசுவின் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல. அவர்கள் அதுவரை கேட்டிராத ஓர் அதிகாரத்துடன் அந்தப் போதனை ஒலித்தது. இயேசுவுக்கு இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், இயேசுவின் அதிகாரம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

‘அதிகாரம்’ என்று நாம் தமிழில் பயன்படுத்தும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச் சொல்லுக்கு Oxford அகராதியில் இரு வேறுபட்ட அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம் என்ற அர்த்தங்களில் ஒலிக்கின்றது. இரண்டாவது வகை அர்த்தம்தான் நாம் இன்று குறிப்பாகச் சிந்திக்கவேண்டியது. இதில், Authority என்ற வார்த்தைக்கு, ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’ அதாவது, "ஒரு விடயத்தைக் குறித்து ஒருவர் பெற்றிருக்கும் அறிவு, அல்லது, ஒருவர் இயல்பிலேயே பெற்றிருக்கும் தலைமைப்பண்பு ஆகியவற்றின் காரணமாக, மற்றவர்கள் மீது செலுத்தப்படும் தாக்கம்" என்பது, இரண்டாவது அர்த்தமாகத் தரப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது அர்த்தத்தின் ஆழத்தை, ஒரு கற்பனைக் காட்சியின் வழியே புரிந்துகொள்ள முயல்வோம். உலகத்தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள், ஒவ்வொரு தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும், அவர்களைச் சுற்றி மெய்காப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் என்று, பலர் வருவார்கள். அந்தத் தலைவரைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கரவொலி எழுப்ப வேண்டியிருக்கும்.

அந்நேரம், அந்த அரங்கத்தினுள், அன்னை தெரேசா, காந்தியடிகள், நெல்சன் மண்டேலா, அப்துல் கலாம், அல்லது, மக்களின் மனங்களில் உயர்ந்த்தோர் இடம் பிடித்திருக்கும் ஓர் உன்னத மனிதர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி அறிவிப்புக்கள் தேவையில்லை, அவரைச்சுற்றி பல மெய்காப்பாளர்கள் ஓடிவரவும் தேவையில்லை. அவர் அரங்கத்தில் நுழைந்ததும், அங்கு உருவாகும் மரியாதை, தனிப்பட்ட வகையில் இருக்கும். அங்கிருப்போர், யாருடையத் தூண்டுதலும் இல்லாமல், எழுந்து நிற்பார்கள். கரவொலி எழுப்புவதற்குப் பதில், அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள். இதுதான் உள்ளூர உருவாகும் மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம், அந்த மாமனிதர், நம் உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான் 'Authority' என்ற வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது வகையான அர்த்தம்.

இந்த இரண்டாவது வகையில், மற்றோர் அம்சமும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான அறிவு, அந்த அறிவின் அடிப்படையில் அதைப்பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, அவர் தன்னிலேயேப் பெறும் அதிகாரம்... என்பது, இந்த இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றோர் அம்சம்.

‘அதிகாரம்’ என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்கமுடியும், தீர்க்கமுடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் வெளிப்படுகின்றது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகள் வழியே, ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. இத்தகைய அதிகாரத்தைப் பெறும் அரசியல்வாதிகள், அந்த அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளும் பரிதாபமான முயற்சிகள் நம்மை வெட்கத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகின்றன.

இதற்கு முற்றிலும் மாறாக, உன்னதமான பண்பு, அல்லது, உயர்ந்த அறிவு இவற்றைக் கொண்டு ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம், அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில், ஆணவம் இருக்காது. அடுத்தவரை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆவல் இருக்காது. ஒருவர், சுயமாக, தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மன சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேசவைக்கும். அது, கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழிநடத்தும்.

இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது. அவர் எந்த ஒரு குருவிடமோ, பள்ளியிலோ பயிலவில்லை. இறைவனைப்பற்றி தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்த உண்மைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். எனவே அவர் சொன்னவை மக்களை வியப்பில் ஆழ்த்தின. அதுவரை, ஏதோ மனப்பாடம் செய்தவற்றைச் சொல்வதுபோல் மறைநூல் வல்லுனர்கள் கூறிவந்த பாடங்களுக்கும், இயேசு தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும் வேறுபாடுகள் இருந்தன. "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" (மாற்கு 1:27) என்று மக்கள் இயேசுவை வியந்து பேசுவதை இன்றைய நற்செய்தியில் கேட்கிறோம். கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர் வியத்தகு அதிகாரத்துடன் போதித்தார்.  

கடவுளால் அனுப்பப்படும் இறைவாக்கினர்களின் இயல்பைப்பற்றி இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இறைவன் சொன்ன செய்திகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்களுக்கு விளக்கி, தங்களை அதுவரை வழிநடத்தி வந்த மோசே என்ற இறைவாக்கினர், இறக்கும் நிலையில் இருந்ததால் கலக்கம் அடைந்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் சொல்வதாக அமைந்திருந்த மோசேயின் சொற்களை இன்றைய முதல் வாசகமாகக் கேட்கிறோம். (இணைச்சட்டம் 18: 15-20)

மோசே துவங்கி, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர்களாக, தலைவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் பலர், அரியணைகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்தவில்லை. பலர் பரிதாபமான நிலையில் வாழ்ந்தனர். ஆனாலும், இறைவன் பெயரால் பேசுகிறோம் என்ற அந்த உறுதி ஒன்றே, அவர்களுக்கு அதிகாரத்தையும் துணிவையும் வழங்கியது. இந்த இறைவாக்கினர்களின் முழு வடிவமாக, இறை வாக்காகவே வந்த இயேசு, ‘அதிகாரம்’ என்ற சொல்லுக்கு இன்னும் பல புதிய இலக்கணங்களைத் தந்தார். அதிலும் குறிப்பாக, இறுதி இரவுணவின்போது, சீடர்களின் காலடிகளைக் கழுவி, ஓர் அடிமையின் பணிகளை புரிந்தவேளையில், உண்மையான தலைவர், போதகர், ஆண்டவர் யார் என்ற இலக்கணத்தை அவர்களுக்குச் சொல்லித்தந்தார் (யோவான் 13:12-16)

‘அதிகாரம்’ என்ற சொல்லைக் கேட்டதும், இன்றைய உலகை, தங்கள் அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கும் ஒரு சில தலைவர்களின் உருவங்கள் நம் நினைவுகளில் தோன்றியிருக்கும். இந்தத் தலைவர்கள், தலைமைப்பணி, அதிகாரம் ஆகிய சொற்களுக்கு, தவறான இலக்கணம் வகுத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனால், இவர்களை, நமது ஊடகங்கள், மீண்டும், மீண்டும் பேசி வருவதால், தலைமைப்பணி, அதிகாரம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகமும், கலக்கமும் நமக்குள் உருவாகின்றன.

உலகில் இன்று 195 நாடுகள் உள்ளன. இவற்றில் அரசுத் தலைவர்களாகவும், பிரதமர்களாகவும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ 300 இருக்கும். இவர்களில், உலகினரின் கவனத்தை அடிக்கடி ஈர்ப்பது, ஒரு சில நாடுகளின் தலைவர்களும், பிரதமர்களும் மட்டுமே. ஊடகங்களால், மீண்டும், மீண்டும், வெளிச்சமிட்டுக் காட்டப்படும் இந்தத் தலைவர்கள், தங்கள் ஆணவத்தால், தொடர்ந்து தவறுகள் செய்வதை, ஊடகங்கள் பேசி வருகின்றன.

இத்தலைவர்கள், இறைவனால் வழங்கப்பட்ட மனசாட்சி என்ற கலங்கரை விளக்கத்தை அணைத்துவிட்டு, தங்கள் அதிகாரக் கப்பலைச் செலுத்தி வருகின்றனர். இத்தலைவர்களின் உள்ளங்களில் உறங்கிக்கிடக்கும் மனசாட்சி என்ற கலங்கரை விளக்கம், தூய ஆவியாரின் தூண்டுதலால் மீண்டும் ஒளியேற்றப்பட்டு, இவர்களை நல்வழி நடத்தவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோம்.

உலகம், தலைவர்கள், அரசு, அதிகாரம் என்று மற்றவர்களைக் குறித்து சிந்திக்கும்போது, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் 'அதிகாரம்' எவ்வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வது நல்லது. நம் குடும்பங்களிலும், உறவு, மற்றும் நட்பு வட்டங்களிலும் நிலவும் அதிகாரம், 'யார் பெரியவர்' என்ற போட்டியாக உருவெடுக்கிறதா? அல்லது, ஒவ்வொருவரிடமும் உறைந்திருக்கும் நற்பண்புகள், ஒருவர்மீது ஒருவர் காட்டும் மரியாதையாக உருவெடுக்கிறதா? என்பதை ஆய்வு செய்வோம்.

குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும், அதிகாரம் என்பதை, சரியான கண்ணோட்டத்தில் நோக்குவதற்கு, இன்றைய வாசகங்கள் பெரிதும் உதவுகின்றன. அயலவரை அடக்கி ஆள்வதால் அல்ல, மாறாக, நமக்குள் நாமே வளர்த்துக்கொள்ளும் உன்னதப் பண்புகளால், மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று, இயேசு வாழ்ந்து காட்டிய அந்த வழியில் நாமும் வாழ, இறையருளை மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2021, 14:54