வாஷிங்டன் தாக்குதல்கள் வாஷிங்டன் தாக்குதல்கள்  

வாஷிங்டன் தாக்குதல்கள் – உலக அவைகளின் கண்டனம்

டிரம்ப் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல், தங்கள் பதவிகளை மட்டுமே காத்துக்கொண்டு வந்த அரசியல் தலைவர்கள் அனைவரும், தற்போதைய அவல நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும் - Pax Christi அமைப்பின் இயக்குனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 6, இப்புதனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற தாக்குதல்களை கண்டனம் செய்து, பல்வேறு மத நம்பிக்கை கொண்ட அமைப்புக்களும், மனித உரிமை அமைப்புக்களும் வன்மையான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

Pax Christi இயக்குனர் Johnny Zokovitch

அறிவுப்பூர்வமாக மக்களைச் சிந்திக்கவிடாமல், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் டிரம்ப் என்ற ஒரு மனிதர், வாஷிங்டன் நகரில் நடைபெற்ற வன்முறைகளுக்கு காரணம் என்று, Pax Christi அமைப்பின் இயக்குனர் Johnny Zokovitch அவர்கள், கண்டனம் செய்துள்ளார்.

டிரம்ப் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல், தங்கள் பதவிகளை மட்டுமே காத்துக்கொண்டு வந்த அரசியல் தலைவர்கள் அனைவரும், தற்போதைய அவல நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று, Zokovitch அவர்கள், தன் கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.

சனவரி 6ம் தேதி நடைபெற்ற வன்முறைகளுக்குப் பின்னராகிலும், இந்த அரசியல்வாதிகள், தங்கள் தவறுகளை உணர்ந்து, மனமாற்றம் பெறவேண்டும் என்றும், இந்நாளில் நிகழ்ந்தது, அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் அனைவருக்குமே மனமாற்றம் பெறுவதற்கு ஓர் அழைப்பு என்றும் Zokovitch அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

உலக கிறிஸ்தவ அவையின் கண்டனம்

WCC எனப்படும் உலக கிறிஸ்தவ அவையின் செயலர், முனைவர் Ioan Sauca அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அண்மைய ஆண்டுகளில், குடியரசு, மனித உரிமை, நாகரீகமான அரசியல் என்ற பல விழுமியங்கள், பல நாடுகளில் சிதைந்து வந்துள்ளதன் ஒரு சிகர நிகழ்வாக, வாஷிங்டன் வன்முறை அமைந்துள்ளது என்று கூறினார்.

அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும், சுயநலம் மிகுந்த, குறுகிய கால, ஆதாயங்களை மட்டும் கருத்தில்கொண்டு செயல்படாமல், மக்களின் நலனை முன்னிறுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு, இந்த நிகழ்வு அழைப்பு விடுக்கிறது என்று Sauca அவர்கள் கூறியுள்ளார்.

குடியரசின் அடித்தளத்தை ஆட்டிப்படைக்கும் வண்ணம் நிகழ்ந்துள்ள இந்த வன்முறைச் செயல்களுக்கு, ஐ.நா. நிறுவனம், மற்றும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான NATO ஆகியவை உட்பட, பல உலக அமைப்புக்கள், தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2021, 15:31